143. கொடியுடை மும்மதில் - பாடல் 5

நடனம் ஆடும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான்
143. கொடியுடை மும்மதில் - பாடல் 5

பாடல் 5:

    செற்றெரியும் திரையார் கலுழிச் செழுநீர் கிளர் செஞ்சடை மேல்
    அற்றறியாது அனல் ஆடு நட்டம் அணியார் தடங்கண்ணி
    பெற்றரிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும்
    வற்று அறியா புனல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே

விளக்கம்:

செற்று=மோதி, கரைகளில் மோதி; எறியும்=வீசும்; திரை=அலைகள்; கலுழி=காட்டாறு; செழுநீர்=செழுமையான கங்கை நீர்; கிளர்=பொருந்தி விளங்கும்; அற்றுதல்=நீங்குதல்; அற்று அறியாது=நீங்குதலை அறியாது; தடம்=அகன்ற; பெற்று=பெற்றவன்; வற்று=வற்றுதல்; அற்றறியாது என்ற சொல்லினை கங்கை நதியின் தன்மையுடன் இணைத்து, என்றும் நீங்குதலை அறியாது கங்கை நதி பெருமானின் சடையில் தங்குகின்றது என்று கூறும் விளக்கம் பொருத்தமானதே.   

பொழிப்புரை:

கரைகளில் மோதி நீரினை வீசி எறியும் அலைகள் கொண்டுள்ள காட்டாறு போன்று வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினை தனது செஞ்சடையில் பொருந்தி நிலையாக விளங்கும் வண்ணம் தேக்கி வைத்தவர் சிவபெருமான்; அவர் தனது கையினில் தீப்பிழம்பினை, நீக்காது எப்போதும் ஏந்திய வண்ணம் நடனம் ஆடும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான். அழகு வாய்ந்த அகன்ற கண்களை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக பெற்றவர் சிவபெருமான்; அவர் இடபத்தினை தனது வாகனமாக ஏற்றவர். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் இருக்கும் இடம், வற்றல் என்பதை அறியாது எப்போதும் நீர் பெருகும் நீர்நிலைகளை உடைய வலம்புரம் நன்னகரம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com