143. கொடியுடை மும்மதில் - பாடல் 7

பெருமானின் சடை
143. கொடியுடை மும்மதில் - பாடல் 7


பாடல் 7:

    புரிதரு புன்சடை பொன் தயங்கப் புரிநூல் புரண்டு இலங்க
    விரைதரு வேழத்தின் ஈருரி தோல் மேல் மூடி வேய் புரை தோள்
    அரை தரு பூந்துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும்
    வரைதரு தொல்புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன்னகரே

விளக்கம்:

வரை தரு=விதியால் வகுக்கப்பட்ட; புரிதரு=முறுக்குண்ட; புன்சடை=செம்பட்டை நிறத்தில் உள்ள சடை; பொன் தயங்க=பொன்னைப் போன்று ஒளிவீச; விரைதரு=விரைந்து செல்ல வல்ல; ஈருரி=ஈரப்பசை உடைய தோல், இரத்தப் பசை உடைய யானையின் பசுந்தோல்; தோல் மேல்=தனது உடல் மீது; வேய் புரை=மூங்கிலை ஒத்த; அரை=இடுப்பு; அரைதரு= இடுப்பினில் அணிந்த; பூந்துகில்=பூவினைப் போன்று மெல்லிய ஆடை; ஆரணங்கு=அருமை+ அணங்கு, அரிய தெய்வப் பெண்; வரைதரு=வரையப்படும், புலவர்களால் இயற்றப்படும் பாடல்கள்    

பொழிப்புரை:

முறுக்குண்டு செம்பட்டை நிறத்தில் காணப்படும் பெருமானின் சடை பொன்னைப் போன்று  ஒளிவீச, பெருமானின் மார்பினில் முப்புரி நூல் புரண்டு திகழ்கின்றது. தன்னை தாக்கும் நோக்கத்துடன் தன்னை நோக்கி மிகவும் வேகமாக வந்த மதயானையை அடக்கி, அதன் தோலினை உரித்த பெருமான், இரத்தப்பசை மிகுந்த அந்த பசுமையான தோலினை தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்டார். மூங்கிலைப் போன்று அழகிய தோளினை கொண்டவளாக, பூவினைப் போன்று அழகும் மென்மையும் வாய்ந்த ஆடையினையும் தனது  இடுப்பினில் அணிந்து மிகவும் அரிய தெய்வத்தன்மையுடன் விளங்கும் பார்வதி தேவியை உடனாகக் கொண்டு பெருமான் அமர்ந்துள்ள இடம் யாது எனின், புலவர்களால் கவிதைகள் வரைந்து போற்றும் வண்ணம் புகழ் மிகுந்து சிறப்பானதும் பழைமையானதும் ஆகிய செல்வம் மிகுந்த வாழ்க்கையை தொடர்ந்து கொண்டவர்களாக விளங்கும் சான்றோர்கள்  நிறைந்த வலம்புர நன்னகராகும்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com