138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 4

இறைவனின் அருளால்
138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 4


பாடல் 4:

    பண்டு செய்த வல்வினை பற்றறக் கெடும் வகை
    உண்டு உமக்கு உரைப்பன் ஒல்லை நீர் எழுமினோ
    மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாதொர் பாகமாக்
    கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே  

விளக்கம்:

ஒல்லை=விரைந்து; பண்டு=பழைய பல் பிறவிகள்; மண்டு=விரைந்து வந்த கங்கை நதி; வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியைத் தடுத்த வல்லமை உடைய பெருமானுக்கு வினைகளின் வலிமையை அடக்குவது எளிதான செயல் என்று உணர்த்தப் படுகின்றது. பண்டு செய்த பழவினை என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் (5.47) முதல் பாடலை நினைவூட்டுகின்றது.

    பண்டு செய்த பழவினையின் பயன்
    கண்டும் கண்டும் களித்தி காண்க நெஞ்சமே
    வண்டுலா மலர்ச் செஞ்சடை ஏகம்பன்
    தொண்டனாய்த் திரியாய் துயர் தீர்வே

நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளின் தொகுதியில் ஒரு பகுதி நரகத்திலும் சொர்கத்திலும் அனுபவித்து கழிக்கப்பட்டு எஞ்சிய வினைகள் சஞ்சித வினையாக வரவிருக்கும் பிறவிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றது. அனைத்து வினைகளையும் ஒரே பிறப்பில் நுகர்ந்து கழிக்க, நமது உடல் தாங்காது என்பதால், அதில் ஒரு பகுதி மட்டும் அந்த பிறவிக்கு இணைக்கப் படுகின்றது. இதனையே பிராரத்த வினை என்று  சொல்கின்றோம். ஆனால் இந்த பிராரத்த வினைகளை நுகரும் சமயத்தில் நாம் மேலும் வினைகளை கூட்டிக் கொள்கின்றோம். இந்த வினைகளை ஆகாமிய வினைகள் கூறுவார்கள். இந்த வினைகள், எஞ்சிய சஞ்சித வினைகளுடன் சேர்ந்து வரவிருக்கும் பிறவிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எனவே இந்த பிறவியில் நாம் நுகர்ந்து கழிக்கும் வினைகள் எத்தனை பிறவிகளாக தொடர்ந்து வருகின்றன என்பது நமக்கு தெரியாது. அதனால் தான் பழவினைகள் என்று அப்பர் பிரான் கூருகின்றார்.         

இந்த பழவினைகளின் பயனால் நாம் சில இன்பங்களை இந்த பிறவியில் அடைந்தாலும், அந்த இன்பங்களை நுகரும் தருணத்தில், அந்த இன்ப சுகங்களில் ஆழ்ந்து இறைவனை மறந்து விடுகின்றோம். அதனால் பல அல்லல்கள் ஏற்படுகின்றன். இவ்வாறு பிறவிகள் தோறும் நடந்தாலும், உயிர் அதனை உணரமால் பல சிற்றின்பங்களில் ஆழ்ந்து பின்னர் வருந்தும் செயலை, கண்டும் கண்டும் களித்தி காண் நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நெஞ்சமே என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போல், உலகத்தவர்க்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி.   

சமண சமயத்தை குறை கூறினார் என்ற குற்றம் சாட்டப்பட்டு, மகேந்திர வர்மபல்லவனால் விசாரணைக்கு உட்பட்டு பல தண்டனைகள் அப்பர் பிரான் பெற்றது, பல்லவ நாட்டின் தலைநகர் காஞ்சியில் தான். இறைவனின் அருளால் அத்தகைய தண்டனைகளிலிருந்து அப்பர் பிரான் தப்பியதை காஞ்சி நகரத்து மக்கள் மிகவும் நன்றாகவே அறிவார்கள். மன்னனும் அப்பர் பிரானின் பெருமையை உணர்ந்து, பெருமானின் கருணைத் திறத்தினை உணர்ந்து மீண்டும் சைவ சமயத்திற்கு திரும்பியது சரித்திரம். எனவே இந்த நகரத்து மக்களுக்கு, இறைவனுக்கு திருத்தொண்டு செய்யவேண்டிய அவசியத்தை உணர்த்த அப்பர் பிரான் எண்ணினார் போலும். அதனால் தான், தொண்டராகித் திரிவீர் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அப்பர் பிரானின் திருத்தொண்டின் சிறப்பினை உணர்ந்தவர்களாக காஞ்சி நகரத்து மக்கள் திகழ்ந்ததை நாம் இங்கே காணலாம். அப்பர் பிரான் அமைத்த திருமடம் ஒன்று காஞ்சியில் சிறப்பாக திகழ்ந்ததை நாம் பெரியபுராணத்திலிருந்து அறிகின்றோம்.

அப்பர் பெருமானார், தனது தமக்கை தனக்கு காட்டிய வழியை பின்பற்றி, கோயில் திருப்பணியினைச் செய்யத் தொடங்கிய நாள் முதலாக திருவலகும், உழவாரப் படையும் ஏந்தியவாறே எங்கும் செல்லலானார். இது அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட வேடமாகும். இந்த வேடத்துடன் பல தலங்களுக்கும் அப்பர் பிரான் சென்றதால், அப்பர் பிரானால் ஏற்றுக் கொள்ளப் பட்ட திருவலகு (துடைப்பம்) பெருமதிப்புக்கு உரிய பொருளாக மக்களால் அந்நாளில் கருதப்பட்டது. அப்பர் பெருமானார் விரும்பி மேற்கொண்ட வேடத்தைத் தாங்கியவாறு அவரை வரவேற்பதே சிறந்தது எனக் கருதிய காஞ்சி நகரத்து மக்கள், அப்பர் பிரான் செய்யும் திருவீதிப் பணியில் தாங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்ற  முடிவுடன், திருவலகு தாங்கி வரவேற்றனர் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். திருவலகின் பெருமையை தேவர்களும் அறியாமல் இருந்தனர் என்று சேக்கிழார் இங்கே கூறுகின்றார். எனவே திருவலகு என்பதை மங்கலப் பொருட்களில் ஒன்றாக பண்டைய மரபில் கருதப் பட்டது என்பது இதிலிருந்து புலனாகின்றது.

    தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால்
    கொண்ட வேட்கைப் பொலிவினொடும் குலவும் வீதிப்பணி செய்யும்
    அண்டர் அறிதற்கு அரிய திருஅலகு முதலாம் அவை ஏந்தி
    இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர்கொண்டார்  

பெருமானைத் தொழுவதால் நாம் கழிக்கவிருக்கும் வினைகள் யாது என்று நமக்கு எழும்    ஐயப்பாட்டினைத் தீர்க்கும் பொருட்டு, பண்டு செய்த வல்வினை என்று இந்த பாடலில்  ஞானசம்பந்தர் கூறுகின்றார்;  அதாவது பிராரத்த வினைகள் மற்றும் சஞ்சித வினைகள் அனைத்தும் பெருமானை குறித்து நாம் செய்யும் வழிபாடுகள் நீக்கும் என்று கூறுகின்றார். பெருமானை வழிபட்டு பக்குவம் அடைந்த அடியார்கள், இன்பம் துன்பம் இரண்டையும் ஒன்றாக கருதி எதிர்கொள்ளும் பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு ஆகாமிய வினைகள் சேர்வதில்லை.               

பொழிப்புரை:

பழைய பல பிறவிகளில் செய்த செயல்களால் விளைந்த வினைகள் மிகுந்த வலிமையுடன் உங்களது உயிரினைப் பற்றியுள்ளது. அந்த வினைகளின் பிடியிலிருந்து உங்களது உயிர் விடுதலை பெறுவதற்கு உள்ள வழியினை நான் உரைக்கின்றேன்; விரைந்து எழுவீர்களாக. மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியின் வேகத்தினை தடுத்துத் தனது சடையினில் தேக்கிய வல்லமை உடையவனும், உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து மகிழ்ந்த மனதினை உடையவனும் ஆகிய இறைவனை, கோடிகா தலம் சென்றடைந்து வணங்கித் தொழுவீர்களாக. அவ்வாறு தொழுதால், உம்முடன் உறுதியாக தொடர்பு கொண்டிருக்கும் வினைகள் உம்மை விட்டு விலகிவிடும்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com