சுடச்சுட

  
  தேவாரம்

   

  பாடல் 5:

      முன்னம் நீர் செய்த பாவம் தான் மூர்த்தி பாதம் சிந்தியாது
      இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
      பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான்
      கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே

   
  விளக்கம்:

  வேல்=சூலம்; எவரேனும் இந்த பிறவியில் சிவபெருமானைத் தொழாமல் வீணாக தங்களது காலத்தினை கழித்தால், அந்த நிலைக்கு காரணம் யாது என்பதை சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சென்ற பிறவிகளில் அவர்கள் செய்த பாவச்செயல்கள் தாம், அவர்கள் இறைவனைத் தொழாது இருக்கும் வண்ணம் தடுக்கின்றது என்று கூறுகின்றார். அவ்வாறு இறைவனைத் தொழாமல் இருப்பதன் விளைவாக, அவர்களது உயிர் துன்பங்களில் மூழ்கித் தவிக்கின்றது என்றும் கூறுகின்றார்.    

  பொழிப்புரை:

  முந்திய பல பிறவிகளில் நீர் செய்த பாவங்களே வலிமையான வினைகளாக மாறி, நீங்கள்  இறைவனது திருப்பாதங்களை தொழ விடாமல் தடுப்பதால் நீர், பல விதமான துன்பங்களில் ஆழ்ந்து துயரடைகின்றீர்கள்; இன்னமும் அத்தகைய துன்பங்களில் ஆழ்ந்திராமல் எழுவீர். தனது அழகிய நிறத்தில் பொன்னையும் வெற்றி கொண்ட அழகிய கொன்றை மலர்களை சூடியவனும் பூதங்கள் சூழ்ந்து பாட அதற்கேற்ப நடனம் ஆடும் திறமை கொண்டவனும் கொல்லும் தன்மை வாய்ந்த கூர்மையான சூலத்தை உடையவனும் ஆகிய இறைவன் உறையும் கோடிகா தலம் சென்றடைந்து அவனைத் தொழுது உங்களது வினைகளிலிருந்து விடுதலை பெறுவீர்களாக.    

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai