138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 6

இறைவனை நினையாமல்
138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 6

பாடல் 6:

    ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தலாம் எனப்
    பாவம் எத்தைனையும் நீர் செய்து ஒரு பயனிலைக்
    காவல் மிக்க மாநகர் காய்ந்து வெங்கனல் படக்
    கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே

 
விளக்கம்:

ஏவம்=எவ்வம் என்ற சொல்லின் திரிபு, எதுகை கருதி திரிந்தது. எவ்வம்=இகழ்ச்சி; காய்ந்து= கோபம் கொண்டு;

பொழிப்புரை:

குற்றம் மிகுந்து இகழத்தக்க சிந்தனைகளுடன் உலக வாழ்க்கையின் சிற்றின்பங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டு, உலக வாழ்க்கை மிகவும் இன்பமயமானது  என்ற முடிவுடன் இறைவனை நினையாமல் இருந்து பாவமான வாழ்க்கை வாழ்வதால் நீர் அடையக்கூடிய பயன் ஏதும் இல்லை; ஒன்றுக்கொன்று காவலாக திகழ்ந்து வலிமையான அரணைப் பெற்றிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் கோபித்து எரியச் செய்தவனும், கோபத்தால் சிவக்கும் நெற்றிக் கண்ணினை உடையவனும் ஆகிய இறைவன் உறையும் கோடிகா சென்றடைந்து அவனைத் தொழுது பயன் அடைவீர்களாக.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com