சுடச்சுட

  
  தேவாரம்

   

  பாடல் 8:

      மற்றி வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்த்து நீர்
      பற்றி வாழ்மின் சேவடி பணிந்து வந்து எழுமினோ
      வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்ததோர்
      குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்மினே
    

  விளக்கம்:

  வரை=மலை, இங்கே கயிலை மலை; விறல்=வலிமை; குற்றமில் வரை=தான் செல்லும் வழியில் குறுக்கிட்டு தனது பயணத்திற்கு தடையாக இருந்தது கயிலை மலை என்று தவறாக கருதி, அந்த மலையினை பெயர்த்து வேறோர் இடுவதற்கு அரக்கன் இராவணன் முயற்சி செய்தான் என்பதை நாம் அறிவோம். தொன்று தொட்டு ஆயிரக்கணக்கான  வருடங்களாக அதே இடத்தில் இருந்துவரும் கயிலை மலையின் மீது குற்றம் எதுமில்ல என்பதை உணர்த்தும் பொருட்டு குற்றமில் மலை என்று கூறினார் போலும். கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அரக்கன், அதற்கு முன்னர் தனது முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றமையால், வெற்றிகொள் தசமுகன் என்று  கூறினார்.         

  பொழிப்புரை:

  இந்நாள் வரை பொய்யான இந்த வாழ்க்கையை மெய் என்று நினைத்து வாழ்ந்த எண்ணங்களைத் தவிர்த்து இனியாகிலும் இறைவனது சேவடிகளை பற்றுக்கோடாக நினைத்து, அவனைப் பணிந்து வாழ்வதற்கு எழுவீர்களாக. அந்நாள் வரை வெற்றியே கொண்டிருந்த அரக்கன் இராவணனின், வலிமை கெடும் வண்ணம், அரக்கன் கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது, அவனை மலையின் கீழே நெருக்கியவனும், குற்றங்கள் ஏதும் இல்லாத கயிலை மலையினை உடையவனும் ஆகிய பெருமான் உறையும் கோடிகா தலம் சென்றடைந்து வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.      

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai