Enable Javscript for better performance
138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 11- Dinamani

சுடச்சுட

  

   

  பாடல் 11:

      கொந்தணி குளிர் பொழில் கோடிகாவு மேவிய
      செந்தழல் உருவனைச் சீர்மிகு திறலுடை
      அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்
      பந்தன தமிழ் வல்லார் பாவமான பாறுமே  

  விளக்கம்:

  கொந்தணி=கொத்து கொத்தாக பூக்கும் பூக்கள்; கேள்வி=காது வழியாக கேட்டு அறிந்த நான்மறைகள்; பாவங்கள் நீங்கும் என்று பதிகத்தின் பலனை குறிப்பிடுவதன் மூலம் இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள், தாங்கள் பழைய பிறவிகளில் செய்த தீய செயல்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்றும், வினைகள் முற்றிலும் நீங்குவதால் பிறவிப் பிணியையும் நீக்கிக் கொள்வார்கள் என்பதும் உணர்த்தப் படுகின்றது.   

  பொழிப்புரை:

  கொத்து கொத்தாக பூக்கும் குளிர்ந்த மலர்ச் சோலைகள் நிறைந்த சோலைகள் உடைய கோடிகா தலத்தில் பொருந்தி உறைபவனும், செந்தழலின் உருவத்தில் இருப்பவனும் ஆகிய இறைவனை, புகழ் தரும் சிறப்புகள் வாய்ந்த அந்தணர்கள் குலத்தில், புகலி தலத்தில் பிறந்தவனும், காது வழியாக சிறந்த நான்மறைகளை கேட்டு அறிந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உரைத்த தமிழ் மாலைகளை கற்று வல்லவராக திகழ்வோரின் பாவங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.       

  முடிவுரை:

  இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் உயிர்கள் அனுபவிக்கும் பல துயரங்களையும் குறிப்பிட்டு, இறைவன் பால் நமது சிந்தையை செலுத்துமாறு நமக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது இதே தலத்தின் மீது மற்ற அருளாளர்கள், வாழ்க்கை நிலையாமை  தன்மயை குறிப்பிட்டு அருளிய பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.78.2) அப்பர் பிரான், இறைவனின் திருநாமத்தின் நாம் சொல்லாமல் வாழ்ந்தால், இயமனின் முன்னர் விசாரணைக்கு நிறுத்தப்பட்டு இறைவனின் திருநாமத்தை சொல்லத் தவறிய குற்றத்திற்கு பதில் சொல்ல நேரிடும் என்று கூறுகின்றார்.        

      வாடி வாழ்வது என்னாவது மாதர் பால்
      ஓடி வாழ்வினை உள்கி நீர் நாடொறும்
      கோடிகாவனைக் கூறீரேல் கூறினேன்
      பாடி காவலிற் பட்டுக் கழிதிரே

  பாடி காவல்=நீதியிலிருந்து வழுவியோரை அரசன் முன்னர் விசாரணைக்கு நிறுத்துதல்; இறைவனின் திருநாமத்தைச் சொல்லாது நமது வாழ்நாள் கழியுமாயின், நாம் இறந்த பின்னர், நரகத்தின் அரசனான இயமனின் முன்னர் நிறுத்தப்பட்டு, இறைவனின்  திருநாமத்தை சொல்லாத குற்றத்திற்காக விசாரணைக்கு நிறுத்தப் படுவோம் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, அந்த வாழ்க்கை தரும் சிற்றின்பத்தில் மயங்கி, இறைவனை நாம் மறந்து விடுவதையும், இல்வாழ்க்கையில் ஈடுபடுவதால் பல வகையிலும் வருந்துவதையும்  இங்கே உணர்த்தும் அப்பர் பிரான், இல்லறத்தில் இருந்தவாறே நாம் இறைவனையும் நினைக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல். வாழ்வில் அடையும் துன்பம் என்று பிறவித் துன்பம் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.  

  பதினோராம் திருமுறையில் க்ஷேத்திரத் திருவெண்பா தொகுப்பில் காணப்படும் ஐயடிகள் காடவர் கோனின் பல பாடல்கள், வாழ்க்கை நிலையாமை தத்துவத்தை உணர்த்துவதாக  அமைந்துள்ளன. அத்தகைய பாடல்களில் ஒரு பாடல் கோடிகா தலத்தினை குறிப்பிடுகின்றது. அந்த பாடலை நாம் இங்கே காண்போம். பழைய வேட்டியின் ஓரத்தில் உள்ள கரையினைக் கிழித்து இறந்தோரது கால் பெருவிரல்கள் இரண்டையும் இணைத்துக் கட்டியும், மாலை அணிவித்தும், கண்ணுக்கு மை எழுதியும், புதிய புத்தாடையால் மூடியும் பிணத்திற்கு சிங்காரம் செய்யும் பழக்கம் இங்கே உணர்த்தப் படுகின்றது. நீ உயிரிழந்து, உனது இறந்த உடலை பலவிதமாக சிங்காரித்து பலர் கூடி அழுவதன் முன்னம் கோடிகா சென்று உய்வினை நாடுவாய் என்று நமக்கு அறிவுறுத்தும் பாடல்.    

      காலைக் கரை இழையால் கட்டித் தன் கை ஆர்த்து
      மாலை தலைக்கு அணிந்து மை எழுதி மேலோர்
      பருக்கோடி மூடி பலர் அழா முன்னம்
      திருக் கோடிகா அடை நீ சென்று

  வாழ்க்கையின் இழிந்த தன்மை இந்த பதிகத்து பாடல்களில் உணர்த்தப் படுகின்றது.  நிலையற்றது,  மேலும் அழியும் தன்மை கொண்டது என்று முதல் பாடலிலும், துன்பங்கள் மிகுந்த வாழ்க்கை என்று இரணடாவது பாடலிலும், உயிருக்கு துக்கத்தை அளிப்பது என்று மூன்றாவது பாடலிலும்,  பழைய பிறவிகள் பலவற்றில் செய்த வினைகளின் பயனான வாழ்க்கை என்று நான்காவது பாடலிலும், பழைய வினைகளின் பயனாக இறைவனை நாம் தொழாத வண்ணம் இடையூறு செய்யும் வாழ்க்கை என்று ஐந்தாவது பாடலிலும்,  குற்றம் மிகுந்த மனத்துடன் இன்பங்கள் அனுபவிக்கச் செய்து பாவங்களை ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கை என்று ஆறாவது பாடலிலும், இகழ்ச்சி மிகுந்த வாழ்க்கை என்று ஏழாவது பாடலிலும்,  நிலையற்று பொய்யாக இருப்பினும் மெய் போன்று நம்பச் செய்யும் வாழ்க்கை என்று எட்டாவது பாடலிலும்,  உடலை மங்கச்செய்யும் நோய்கள் நிறைந்த வாழ்க்கை மற்றும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீளா வண்ணம் உயிரினை ஆழ்த்தும் வாழ்க்கை என்று ஒன்பதாவது பாடலிலும் சம்பந்தர் இந்த பதிகத்தில் கூறுகின்றார். இந்த பதிகம் மூலம் வாழ்க்கையின் உண்மை நிலையினை புரிந்து கொண்ட நாம், நிலையற்ற வாழ்க்கைச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, நிலையான முக்தி நிலை அடையும் வழியினை நாடி,  கோடிகா இறைவனைத் தொழுது வணங்கி அவனது புகழ் உணர்த்தும் பாடல்களை பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக. 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai