139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 1

குலோத்துங்கச் சோழனிடம்
139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 1


பின்னணி:

தனது ஐந்தாவது யாத்திரையின் ஒரு பகுதியாக கோடிகா அமர்ந்த தேவர் சிகாமணியையும் கஞ்சனூர் ஆண்ட கோவையும் நேரில் கண்டு வணங்கி பதிகங்கள் பாடிய ஞானசம்பந்தர், பின்னர் மாந்துறை மஞ்சனை வணங்கிப் பாடி திருமங்கலக்குடி வந்து சார்ந்ததாக பெரிய புராணம் கூறுகின்றது. மாங்குடி என்று இங்கே குறிப்பிடப்படும் இந்த தலம், திருச்சி மாவட்டத்தில் அன்பில் ஆலந்துறை தலத்திற்கு அருகினில் உள்ள தலத்திலிருந்து வேறுபட்டது. இந்த தலம் வைப்புத் தலங்களில் ஒன்று. இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகமும் நமக்கு கிடைக்கவில்லை. கஞ்சனூர் தலம் சுக்கிர பகவானுடன் தொடர்பு கொண்ட தலமாகும். இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகமும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. தனது திருத்தாண்டகப் பதிகத்தில் அப்பர் பிரான், கஞ்சனூர் ஆண்ட கோ என்றும் கஞ்சனூர் கற்பகம் என்றும் இறைவனை குறிப்பிடுகின்றார். அந்த தொடரினை சேக்கிழார் இந்த பாடலில் கையாண்டுள்ளார்.

    கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து
    மஞ்சனை மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
    அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
    செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார்

திருமங்கலக்குடி தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகமும் சம்பந்தர் அருளிய இந்தளம் பண்ணில் பொருந்தும் இந்த பதிகமும் கிடைத்துள்ளன. இந்த தலம் கும்பகோணத்திலிருந்து பதினைந்து கி.மீ. தூரத்தில் கதிராமங்கலம் செல்லும் பாதையில் உள்ளது. சுயம்பு இலிங்கம்; இங்குள்ள மரகத இலிங்கம் தினமும் உச்சிக் காலத்தில் வழிபடப் படுகின்றது. இறைவனின் பெயர் பிரணவ நாதேஸ்வரர். அம்பிகையின் பெயர் மங்களநாயகி. தான் பெற்ற சாபத்தினால் கிளியாக சிலகாலம் இருந்த அம்பிகை, இந்த தலம் வந்தடைந்து இறைவனை வழிபட்டு, தனது சாபத்தை நீக்கிக்கொண்டார் என்பது தலபுராணம் குறிப்பிடும் செய்தி. காளி சூரியன் பிரமன் திருமால் நவகிரகங்கள் அகத்தியர் முதலானோர் வழிபட்டு பயனடைந்த தலம். நவகிரக சன்னதி இல்லாத தலம். அருகில் உள்ள சூரியனார் கோயில் தான் இந்த தலத்திற்கு உரிய நவகிரக சன்னதியாக கருதப்படுகின்றது. எனவே இந்த கோயிலை வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்லவேண்டும் என்று கூறுவார்கள்.

காலவ முனிவர் தனது ஜாதகத்தில் இருந்த கிரகங்களின் அமைப்பினை நன்கு ஆராய்ந்து படித்து, குறிப்பிட்ட காலத்தில் தனக்கு தொழுநோய் வரும் என்பதை அறிந்து கொண்டார்.  ஒன்பது கோள்களையும் வேண்டி அவர் தவம் இருக்கவே, ஒன்பது கோள்களும் நேரில் தோன்றி அவருக்கு வரம் அளிக்க இசைந்தன. தனக்கு தொழுநோய் வாராமல் தடுக்க வேண்டும் என்று முனிவர் வேண்டிக் கொள்ளவே கோள்களும் இசைந்து அருள் புரிந்தன. கோள்கள் வரம் அளித்த விவரத்தை அறிந்த பிரமதேவன், ஒன்பது கோள்களையும் அழைத்தார். ஒவ்வொருவரின் ஜாதகத்தில் உள்ள கோள்களின் அமைப்பு உணர்த்தும் வண்ணம் அந்தந்த காலத்தில் உரிய பலன்களை அளிப்பது மட்டுமே கோள்களின் கடமை என்றும், அந்த அமைப்பினை மாற்றி வேறொரு பலனை அளிப்பதற்கு அவைகளுக்கு அதிகாரம் இல்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும் முனிவர் எதிர்கொள்ள இருந்த தொழுநோயினை, தன்னிச்சையாக செயல்பட்டு மாற்றிய குற்றத்திற்கு தண்டனையாக கோள்கள் தொழுநோய் அனுபவிக்க வேண்டும் என்ற தண்டனையும் விதித்தார். ஒன்பது கோள்களும் மண்ணுலகம் வந்து திருமங்கலக்குடி தலத்தினில் பதினோரு வாரங்கள் தங்கி இறைவனை வழிபட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எருக்கம் இலையினில் தயிர்சாதம் வைத்து பெருமானுக்கு நிவேதனம் செய்து, முடிவில் நோயிலிருந்து விடுதலை பெற்றன என்பது தலபுராணம் கூறும் செய்தி.      

குலோத்துங்கச் சோழனிடம் அமைச்சராக பணிபுரிந்த அலைவாணர் என்ற அடியார், மக்களிடம் இருந்து வசூல் செய்த வரிப்பணத்தை, மன்னனின் அனுமதியின்றி கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தினார். விவரம் அறிந்த மன்னன் அவருக்கு மரணதண்டனை விதித்து, அவரது தலையினை சீவி எறிந்தான். இந்த அடியார் திருமங்கலக்குடி தலத்திற்கு அருகில் உலா திருவியலூர் என்ற தலத்தைச் சார்ந்தவர் ஆவார். அவரது மனைவி, திருமங்கலக்குடி திருக்கோயிலில் உள்ள அம்பிகையிடம் தனது மாங்கல்யத்தை காப்பாற்றுமாறு வேண்டிய போது, அம்பிகை சிவனாருக்கு செய்தி சொல்ல, பெருமான் இறந்த அடியாருக்கு அருள் செய்ய முடிவு செய்தார். அசரீரி குரல் மூலமாக, இறந்தவரது தலையினையும் உடலையும் மீண்டும் பொருத்துமாறு இறைவன் பணிக்க, மந்திரியாரின் மனைவியும் அவ்வாறே செய்தார்; தூக்கத்திலிருந்து எழுவது போன்று இறந்த மந்திரியார் உயிர்பெற்று எழுந்தார். அவர் உடனே திருமங்கலக்குடி தலத்து கோயிலின் கருவறை சென்று, இறைவனின் திருமேனியை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார். இதனால் இறைவனுக்கு பிராண நாதேஸ்வரர் என்ற பெயரும் தேவிக்கு மங்களநாயகி என்ற பெயரும் வந்ததாக கூறுவார்கள். பெண்களின் மங்கல நாண் காக்கும் தலம் என்று பிரசித்தி பெற்று, மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை என்ற தொடரும் எழுந்தது. இன்றும் அம்மையின் திருப்பாதங்களில் தாலி வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. சூரியன் வழிபட்ட ஐந்து தலங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. மற்றவை,  நன்னிலம் அருகில் உள்ள சிறுகுடி, சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஞாயிறு, நீடாமங்கலம் அருகில் உள்ள பரிதிநியமம், மற்றும் கும்பகோணம் அருகில் உள்ள தலைஞாயிறு.      

பாடல் 1:

    சீரினார் மணியும் அகில் சந்தும் செறி வரை
    வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
    நீரின் மாமுனி வன் நெடும் கைகொடு நீர் தனை
    பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே

விளக்கம்:

சீர்=புகழ்; சந்து=சந்தனம்; வரை=மலை; செறி=மிகுந்து நெருக்கமாக கிடக்கும்; வாரி= வெள்ளம்; பூரித்து=மனம் மகிழ்ந்து; ஆட்டி=நீராட்டி; தீர்க்கபாகு என்ற முனிவர், பெருமானின் சன்னதியில் அமர்ந்தவாறு தனது கைகளை நீட்டி  காவிரி ஆற்றிலிருந்து நீரினை எடுத்து பெருமானை நீராட்டி அர்ச்சனை செய்தததாக தலபுராணம் கூறுகின்றது. அந்த தகவல் இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளது. புராணன் என்ற வடமொழிச் சொல், புரா மற்றும் நவன் என்ற இருவேறு சொற்கள் இணைந்தவை. புரா என்றால் புராதனன் என்ற சொல்லின் சுருக்கம்; நவன் என்றால் புதுமையானவன் என்று பொருள். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழைய பொருளாகவும், பின்னைப் புதுமைக்கும் புதிய பொருளாகவும் இருக்கும் இறைவனின் தன்மை புராணன் என்ற சொல்லினால் குறிப்பிடப் படுகின்றது. இதனையே மணிவாசகர் முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம்பொருள் என்றும் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே என்று திருவெம்பாவை பதிகத்தில் கூறுகின்றார். பெற்றி=தன்மை; புதுமையாக எந்த பொருள் வந்தாலும், புதுமை என்ற அடைமொழி அந்த பொருளிலிருந்து பேர்ந்து விலகும் வண்ணம் புதுமையாக காட்சி அளிப்பவன் பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார்.
  
பொழிப்புரை:

ஒளி வீசுவதால் பெருமை வாய்ந்து புகழ் மிகுந்த மாணிக்கக் கற்கள், நறுமணம் வீசும் அகில் மற்றும் சந்தனக் கட்டைகள் ஆகியவை செறிந்து கிடக்கும் மலைச்சாரலில் இருந்து அவற்றை வாரிக் கொண்டு பெரிய வெள்ளமாக வரும் காவரி நதியின் வடகரையில் அமைந்துள்ள திருமங்கலக்குடி தலத்தில், தீர்க்கபாகு என்ற முனிவன், தனது நெடிய கையினை நீட்டி காவிரி நதியிலிருந்து நீர் கொணர்ந்து இறைவனை நீராட்டி அர்ச்சனை செய்ய, அந்த வழிபாட்டினை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் இறைவன், முன்னைப் பழம்பொருட்கும் பழம்பொருளாகவும், பின்னைப் புதுமைக்கும் புதியவனாக, புராணனாக, எழுந்தருளி உள்ளான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com