சுடச்சுட

  
  தேவாரம்

   

  பாடல் 3:

      கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
      மருங்கெலாம் மணமார் பொழில் சூழ் மங்கலக்குடி
      அரும்பு சேர் மலர்க் கொன்றையினான் அடி அன்பொடு
      விரும்பி ஏத்த வல்லார் வினையாயின வீடுமே
   

  விளக்கம்:

  கருங்கை=கருமையான கை, துதிக்கை; கள்வனார் என்று பெருமான் தனது மனதினை கொள்ளை கொண்ட தன்மையை தான் முதன்முதலாக அருளிய தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிட்டு மகிழ்ந்த சம்பந்தர், இந்த பாடலிலும் அதனை குறிப்பிடுகின்றார். மருங்கு=அருகில்; வீடும்=அழியும்; பதிகத்தின் இரண்டாவது பாடலில், பெருமானின் திருவடிகளே நாம் சரணடையத் தகுந்த புகலிடம் என்று கூறிய சம்பந்தர், அந்த திருவடிகளை அன்போடு வணங்கினால் நமது வினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கரிய யானையும், யானையின் தோலும் அஞ்ஞானத்தை குறிக்கும் சின்னங்களாக கருதப் படுகின்றன. சோதி வடிவமாக, ஞானத்தின் வடிவமாக காணப்படும் பெருமான், யானையின் தோலினைப் போர்த்துக்கொண்டு மறைந்திருக்கும் தன்மை கள்வனின் செயல் போல் காணப்படுவதால் கள்வர் என்று கூறினார் போலும். மேலும் ஆணவத்தால் மூடப்பட்டுள்ள உயிரின் உள்ளே ஒளியாக இறைவன் விளங்கும் தன்மையை, கரிய யானையின் தோலைப் போர்த்துள்ள இறைவனின் உருவத்தை குறிப்பிட்டு சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதும் நெறியினை இங்கே அன்பு நெறி  என்று சுருக்கமாக சம்பந்தர் கூறுகின்றார்.      
    
  பொழிப்புரை:

  நீண்டு கரிய நிறத்தில் அமைந்துள்ள துதிக்கையினை உடைய யானையின், இரத்தப்பசை தோய்ந்த தோலினைத் தனது உடலின் மீது போர்த்தவரும், எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வரும் ஆகிய பெருமான் உறையும் திருமங்கலக்குடி தலத்தினைச் சூழ்ந்துள்ள சோலைகளில் நறுமணம் வீசுகின்றன. அந்த சோலைகளில் விளங்கும் அரும்புகளுடன் கூடிய கொன்றை மலர் மாலைகளை அணிந்துள்ள சிவபெருமானின் திருவடிகளை மிகுந்த விருப்பம் கொண்டு அன்புடன் புகழ்ந்து பாட வல்ல அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai