139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 4

குறையேதும் இல்லாமல்
139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 4

பாடல் 4:

    பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம்
    மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி
    குறைவிலா நிறைவே குணமில் குணமே என்று
    முறையினால் வணங்கும் அவர் முன்னெறி காண்பரே
    

விளக்கம்:

ஆடியும் பாடியும், மனதினில் தியானம் செய்தும் மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபடும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஒரு குறையும் இல்லாமல் நிறைவாக இருப்பவன் இறைவன் என்று சம்பந்தர் கூறுவது, நமக்கு குறைவிலா நிறைவே என்ற திருமுறைத் தொடரினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. குறைவிலாது நிறைந்து நிற்கும் தன்மையை நிறைவார்ந்த நீர்மை என்று குறிப்பிடும் (6.3.9)  இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.  

நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான் தன்னை
மறையானை மாசு ஒன்று இலாதான் தன்னை வானவர் மேல் மலரடியை      வைத்தான் தன்னைக்
கறையானைக் காதார் குழையான் தன்னைக் கட்டங்கம் ஏந்திய கையினானை
இறையானை எந்தை பெருமான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் கோதிலா அமுது என்று குறிப்பிட்டு மணிவாசகர் அமுதமும் குறை உடையது என்று நமக்கு உணர்த்துகின்றார். அமுதம் உண்ட தேவர்கள் எவரும் இறப்பிலிருந்து தப்பிக்கவில்லை:மேலும் அமுதம் தோன்றிய இடம், நஞ்சு தோன்றிய பாற்கடலாகும். ஆனால் சிவபெருமானோ எத்தைகைய குறையும் இல்லாதவர். அதனால் தான் அவரை கோதிலா அமுது என்று இங்கே மணிவாசகர் குறிப்பிடுகின்றார். குறையேதும் இல்லாமல் நிறைவாக இருப்பவனும், குற்றங்கள் இல்லாத அமுதமாக இருப்பவனும், முடிவு என்பது இல்லாமல் எப்போதும் எரியும் சுடராக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், வேதத்தின் சொற்களாகவும், அந்த சொற்களின் பொருளாகவும் தனது மனதினில் நிலை பெற்று இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். கரைகள் ஏதும் இல்லாத நீர் பாய்வது போன்று, தங்கு தடை ஏதும் இன்றி தனது சிந்தையில் ஊறும் சிவபெருமான், தனது உடலில் இடம் கொண்டமையால், தான் இனிமேல் இறைவனிடம் ஏதும் வேண்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இங்கே உணர்த்துகின்றார்.

    குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
    மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே
    சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே
    இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே

குறைவிலா நிறைவே என்று பெருமானை தனது ஆவடுதுறை பதிகத்தில்(7.70.6) அழைக்கும் சுந்தரர், தனக்குத் துணையாக வேறு எவரும் இல்லாததால் பெருமான் தான், அஞ்சல் என்று சொல்லி தனக்கு அருளவேண்டும் என்று கூறுகின்றார். நம் அனைவருக்கும் கூட, இறைவன் ஒருவன் தான் துணை. என்பதை உணர்த்தும் பாடல். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தான் உறவாகக் கருதாததால், தனது பிழை ஒன்றினை பொறுத்து அருளினால் இறைவனுக்கு தாழ்வு ஏதும் ஏற்படாது என்று இறைவனுக்கே உணர்த்தி, தனது பிழைகளை பொறுக்குமாறு இறைவனை பணியும் பாடல்.

குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையானே
உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே
சிறை வண்டார் பொழில்சூழ் திருவாரூர்ச் செம்பொனே திருவாவடுதுறையுள்
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
  

உயிரின் செயல்களை இராஜசம் தாமசம் சாத்துவீகம் ஆகிய மாயாகாரிய மூன்று குணங்களே  தீர்மானிக்கின்றன. ஆனால் பெருமான் இந்த மூன்று குணங்களைக் கடந்தவன்; உணர்வுகளைக் கடந்தவன்.  எனவே தான் குணமிலி என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அதனால் பெருமான் குணம் ஏதும் இல்லாதவன் என்று நாம் கருதுதல் தவறு. அவன் மேலே குறிப்பிட்ட மாயாகாரிய குணங்களுக்கு மாறாக அருட்குணங்கள் எட்டு கொண்டவன். எனவே தான் குணமில் குணமே என்று பெருமானை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தன்வயத்தனாதல், தூயஉடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல்,  முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, எல்லையற்ற ஆற்றல் உடைமை,  வரம்பிலாத இன்பம் உடைமை, ஆகிய சிறந்த எட்டு குணங்களை உடையவனாக இறைவன் திகழ்கின்றான். முன்னெறி=எல்லா நெறிகளுக்கும் முதன்மையான சிவநெறி; பாரிடம்=பூதகணம்;

கோயில் திருப்பதிகம் நான்காவது பாடலில், மணிவாசகர், பெருமானை குணங்கள் தாம் இல்லா இன்பமே என்று குறிப்பிடுகின்றார். வேதங்கள் உணர்த்தும் வாழ்க்கைக் கல்வியினை நன்கு கற்று, கற்றதன் பயனை உணர்ந்த முனிவர்கள் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். ஒழிந்தோர்=முனிவர்கள் தேவர்கள் அல்லாத ஏனையோர்; அனைத்து உயிர்களின் உணரவுகளையும் கடந்த மெய்பொருள் என்று பெருமானை குறிப்பிடும் அடிகளார், அனைத்துப் பொருட்களுடனும் கலந்து இருந்தாலும் தான் எந்த மாற்றமும் அடையாமல் இருப்பவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். பொருட்கள் அனைத்தும் தோற்றம், இருப்பு, முடிவு ஆகிய மூன்று நிலைகளுக்கு உட்பட்டவை.  ஆனால் இறைவனோ தோற்றம் முடிவு ஆகிய நிலைகளுக்கு அப்பாற்பட்டவன். பொருட்களோடு இணைந்து இருந்தாலும், பொருட்கள் தோன்றும்போது அவன் தோன்றுவதில்லை, பொருட்கள் அழியும்போது அவன் அழிவதுமில்லை. மேலும் இவ்வாறு பொருட்களுடன் இணைந்து இருப்பதால் அவன் எந்த மாற்றமும் அடைவதில்லை. எனவே தான் அவனை இணங்கிலி என்று கூறுகின்றார்.   சத்துவம், இராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களின் அடிப்படையில் ஓவ்வொரு உயிரும் இன்பம் அடைகின்றது. ஆனால் இந்த இன்பமும் நிலையாக நீடித்து இருப்பதில்லை. ஆனால் மூன்று குணங்களைக் கடந்த பெருமான் என்றும் மாறாத இன்ப வடிவினனாக இருப்பதுமன்றி, தன்னைச் சரண அடைந்தவர்கட்கும் எந்த குறையினையும் வைக்காமல் பூரண இன்பத்தை வழங்குகின்றான்.

உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு அரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே  
குணங்கள் தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே

பொழிப்புரை:

தாங்கள் இசைக்கும் பறையின் ஒலியுடன் பாடலொலியைக் கலந்து ஆடல் புரியும் பூத கணங்கள் சூழ வீற்றிருக்கும் சிவபெருமான், வேதங்கள் பயின்று அதன் வழியே ஒழுகும் அந்தணர்கள் நிறைந்துள்ள திருமங்கலக்குடி தலத்தில் உறைகின்றார். அவரை குறைவிலா நிறைவே என்றும் குணமில் குணமே என்றும், ஏனையோருக்கு இல்லாத அரிய எட்டு  குணங்களை உடையவனே என்றும் புகழ்ந்து, வேத ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள முறையில் வணங்கும் அடியார்கள் தொன்மையான நெறியாகிய  சிவநெறியின் பயனை உணர்வார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com