139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 6

139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 6

இறைவன் குடியிருக்கும் இடம்

பாடல் 6:

    தேனுமாய் அமுதாகி நின்றான் தெளி சிந்தையுள்
    வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி
    கோனை நாள் தோறும் ஏத்திக் குணம் கொடு கூறுவார்
    ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகையதே

விளக்கம்:

வான்=வெளி, இங்கே ஞானவெளி; தெளிவடைந்த சிந்தை தான் இறைவன் குடியிருக்கும் இடம், சிந்தை தெளிவடைந்த பின்னரே ஞானம் ஏற்படும் என்பதை குறிப்பிடும் வண்ணம், தெளிந்த சிந்தை என்று இறந்த காலத்தில் குறிப்பிடுகின்றார். கோன்=தலைவன், முதல்வன்;  குணங்கொடு=கொண்டுள்ள குணங்கள்; ஊனமானவை=உயரின் குற்றமாக மலங்கள் கருதப்படுவதால், மூன்று மலங்களையும் ஊனம் என்று குறிப்பிடுகின்றார். தேனும் அமுதமும் உட்கொண்ட வாய் இனிப்பது போன்று, இறைவனையே நினைக்கும் சிந்தையும் இனிப்பதாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

இறைவனைப் புகழ்ந்து போற்றுவது உயிரினுக்கு உய்வினை அளிக்கும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இறைவனின் திருநாமங்களை சொல்லாது, வாழ்வினில் உய்வினை நாடாது இருத்தல், உயிரின் ஊனம் நிலையாக இருப்பதற்கே வழிவகுக்கும்.  எனவே தான், அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில்  (1.116), நாம் அனுபவிக்கும் அனைத்து இடர்களுக்கும் வினைகளை காரணமாக சுட்டிக் காட்டி, இறைவனின் திருநாமங்களைச் சொல்லாமல் வீணாக வாழ்நாளினைக் கழித்தல், உய்வினை நாடாது இருந்து உயிரின் ஊனங்களைத் தக்கவைத்துக் கொள்ளுதல் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். நாம் சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தன்மைக்கு ஏற்ப இந்த பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம் என்று பலர் சொல்வதையும் செவியுறும் மனிதர்களே என்று அழைக்கும் ஞானசம்பந்தர், இந்த நிலையிலிருந்து விடுதலை பெறும் நாடாது இருப்பது உமக்கு ஊனமில்லையா என்ற கேள்வியை கேட்கின்றார். மேலும் உய்யும் வழியினையும் இங்கே சொல்லிக் கொடுக்கின்றார். சிவபெருமானுக்கு அடிமையாக மாறி, சரியை கிரியை முதலான திருப்பணிகளைச் செய்து, பழவினைகள் வந்து நம்மை தாக்காத வண்ணம் காத்துக் கொள்வோம் என்று அறிவுரை கூறுகின்றார்.    

    அவ்வினைக்கு இவ்வினை யாம் என்று சொல்லும் அஃதறிவீர்
    உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே
    கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
    செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்

கேதீச்சரம் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் பாடலில் (7.80.5) அடியார்களின் உடலில், ஊனத்த்தால் பொருந்தும் நோய்களை களைபவன் பெருமான் என்று கூறுகின்றார். வங்கம்=கப்பல்; இலங்கைத் தீவு கடல் வாணிபத்திற்கு, அந்நாளில் சிறந்து விளங்கிய தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. கேதீச்சரம் தலத்தில் ஓடும் ஆற்றின் பெயர் பாலாவி. தெங்கம் பொழில்=தென்னஞ்சோலைகள்.

    அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
    வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்  
    பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல்   
    தெங்கம் பொழில் சூழ்ந்த திருகேதீச்ச்சரம் தானே
         

பொழிப்புரை:

இறைவனை நினைத்ததால் எனது சிந்தனையில், தேனும் அமுதமும் பாய்ந்தது போன்று இனிய உணர்வினை ஏற்படுத்தி அங்கே தங்கி நின்ற இறைவன், எனது சிந்தனையைத் தெளிவித்து ஞானவெளியாக இருக்கின்றான். ஒவ்வொரு பிறையாக முற்றிலும் தேய்ந்து அழியும் நிலையில் இருந்த பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூடிக் கொண்டு அழிவிலிருந்து காப்பாற்றும் வல்லமை வாய்ந்தவனும் திருமங்கலக்குடி தலத்தின் தலைவனும் ஆகிய இறைவனின் புகழினையும் அவனது அரிய குணங்களையும் போற்றும் அடியார்கள் தங்களது ஊனங்கள் நீங்கப் பெறுவார்கள்; மேலும் அவர்கள் வாழ்வினில் உய்வினையும் அடைவாரகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com