139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 11

பெருமானைப் பணிந்து
139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 11

பாடல் 11:

    மந்தமாம் பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
    எந்தையை எழிலார் பொழில் காழியர் காவலன்
    சிந்தை செய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
    முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதலாவரே
 

விளக்கம்:

மந்தம்=தென்றல்; காவலன்=தலைவன்; முந்தி ஏத்துதல்=முதன்மை கொடுத்து பாடுதல்;

பொழிப்புரை:

குளிர்ந்த தென்றல் காற்று வீசும் சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தினில் மிகுந்த விருப்பத்துடன் பொருந்தி உறையும் எமது தந்தையாகிய இறைவனை, எழில் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சீர்காழி தலத்தின் தலைவனாகிய திருஞானசம்பந்தன் சிந்தித்து பெருமானின் திருவடிகளில் நம்மைக் கொண்டு போய் சேர்த்திடும் வல்லமை வாய்ந்த வண்ணம் பாடிய இந்த பதிகத்தின் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து இறைவனை இந்த பதிகத்து பாடல்கள் மூலம் புகழ்ந்து பாட வல்ல அடியார்கள், இமையோர்களின் தலைவனாக, இந்திரனாக மாறும் வாய்ப்பினை பெறுவார்கள்.        

முடிவுரை:

இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமானைப் பணிந்து வணங்க வேண்டிய அவசியத்தை முதல் இரண்டு பாடல்களில் உணர்த்தும் சம்பந்தர், மற்ற பாடல்களில் பெருமானின் திருநாமத்தை சொல்வதால், அவனது புகழ்மிக்க குணங்களை கூறுவதால், அவனது திருவடிகளைப் பணிந்து வணங்குவதால்,  நாம் அடையவிருக்கும் பலன்களை எடுத்து உரைக்கின்றார். பதிகத்தின் முதல் பாடலில் தீர்க்கபாகு என்ற முனிவர் இறைவனை அர்ச்சித்து வழிபட்டதையும், இரண்டாவது பாடலில் தலத்து மகளிரும் வேதியர்களும் இறைவனைப் பணிந்து வழிபடுவதை குறிப்பிட்டு, நாமும் மங்கலக்குடி இறைவனைத் பணிந்து வணங்க வேண்டும் என்று உணர்த்துகின்றார். மூன்றாவது பாடலில் பெருமானின் திருவடிகளை விரும்பி ஏத்தும் அடியார்களின் வினைகள் முற்றிலும் விலகிவிடும் என்றும், முறையாக பெருமானை வணங்கும் அடியார்கள் சிறந்த சிவநெறியில் ஒழுகுவார்கள் என்று நான்காவது பாடலிலும், பெருமானின் திருவடிகளை அடைதலே ஞானம் என்று உணர்ந்து வழிபடும் அடியார்களின் வினைகள் முற்றிலும் நாசமாகிவிடும் என்று ஐந்தாவது பாடலிலும், பெருமானின் அரிய  குணங்களை குறிப்பிட்டு புகழும் அடியார்கள் தங்களது ஊனங்கள் நீங்கப்பெற்று உய்வினை அடைவார்கள் என்று ஆறாவது பாடலிலும், நாட்களும் கோள்களும் விளைவிக்கும் தீய பயன்களிலிருந்து பெருமானின் திருவடிகளை சரணடையும் அடியார்கள் விடுதலை பெறுவார்கள் என்றும் ஏழாவது பாடலிலும், எட்டாவது பாடலில் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து போற்றும் அடியார்கள் வானுலகம் செல்வார்கள் என்றும், பெருமானின் திருக்கல்யாண குணங்களை கூறுவதே சிறந்த குணம் என்று ஒன்பதாவது பாடலிலும், தலைவனின் திருவடிகளை போற்றுதல் தனிப் பொலிவினையும் அழகையும் அளிக்கும் என்று பத்தாவது பாடலிலும் கூறுகின்றார். சம்பந்தர் காட்டிய வழியில் சென்று திருமங்கலக்குடி பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்கி வானோரிலும் மிகுந்த சிறப்பினை அடைந்து, சிவலோகம் சென்று அவனைச் சார்ந்திருந்து என்றும் அழியாத பேரின்பத்தில் திளைப்போமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com