140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 5

140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 5

இறைவனின் உருவம்


பாடல் 5:

    எண்ணார் தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய்ப்
    பண்ணார் தரு மறையாய் உயர் பொருளாய் இறை அவனாய்க்
    கண்ணார் தரும் உருவாகிய கடவுள் இடம் எனலாம்
    விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே   

விளக்கம்:

எண்=எண்ணம் என்ற சொல்லின் திரிபு; தியானம் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது; தன்னை நினைத்து தியானம் செய்யும் அடியார்களுக்கு தியானத்தின் பயனாக விளங்குபவன் இறைவன்; இறை=தலைவன்; கண்ணார் தரு உரு=பார்ப்போரின் கண்கள் நிறையும் வண்ணம் அழகாக இருக்கும் இறைவனின் உருவம் அத்தகைய அடியார்களின் மனதினில் என்றும் நீங்காது பதிந்து நிற்கும் என்று சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.  

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் ஒருவன் பல உருவன் என்று சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கண்டோம். ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் பெருமான், தனது அடியார்களுக்கு பல உருவத்தில் காட்சி அளித்த விவரங்களை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். பல அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்திய பின்னர், திருநீலகண்ட குயவனார், இயற்பகையார், இளையான்குடி மாறனார், அமர்நீதியார், ஏனாதிநாதர், மானக்கஞ்சாறார், அரிவாட்டாயார், ஆனாயர், திருக்குறிப்புத் தொண்டர், சாக்கிய நாயனார், சிறுத்தொண்டர், அதிபத்தர் ஆகிய அடியார்களுக்கு,  விடையின் மேல் அமர்ந்த வண்ணம் பிராட்டியுடன் பெருமான் காட்சி கொடுத்ததை நாம் பெரிய புராண சரித்திரத்திலிருந்து உணர்கின்றோம். இலிங்கத்திலிருந்து ஒரு கை எழுந்து, தனது மற்றோர் கண்ணினையும் பேர்க்கத் துணிந்த  கண்ணப்பரை தடுத்ததையும், சண்டீசருக்கு கொன்றை மாலை சூட்டியதையும், கயிலை மலையில் உமையன்னையுடன் அமர்ந்த நிலையில் காட்சியளித்து காரைக்கால் அம்மையாருக்கு வரம் அருளியதையும், பைரவ கோலத்துடன் சிறுத்தொண்டரது இல்லத்திற்கு உணவு உட்கொள்ளச் சென்றதையும், கயிலை மலையில் சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் காட்சி அளித்ததையும், தனது கழுத்தினை அறுத்து  தனது உடலிலிருந்து வெளிவரும் குருதியை இட்டு விளக்கேற்ற முயற்சி செய்த கலியரின் கையினைப் பிடித்து தடுத்து அருள் செய்ததையும்,   அவர்களது புராணத்தில் காண்கின்றோம். கயிலாய மலை நோக்கி சென்று கொண்டிருந்த அப்பர் பிரானுக்கு வேதியராக காட்சி அளித்ததையும், பெருமானது திருக்குறிப்பினை சரியாக புரிந்து கொள்ளாது இருந்தமை குறித்து வருந்திய அப்பர் பிரானுக்கு முதியவராக தோன்றி வாய்மூர் அழைத்துச் சென்றதையும், பைஞ்ஞீலி செல்லும் வழியில் அப்பர் பிரானின் வரவினை எதிர்பார்த்து பொதி சோற்றுடன் காத்திருந்து அளித்தமையும், திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் இடம் பெறுகின்றன. திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியாருக்கும், நீலநக்கர் மற்றும் நமிநந்தி அடிகள் ஆகியோருக்கு கனவின் கண் காட்சி அளித்தமையை நாம் பெரிய புராணத்திலிருந்து உணர்கின்றோம். விடையின் மேல் அமர்ந்தவாறு கீழே வந்திறங்கி,  அழுது கொண்டிருந்த குழந்தைக்கு பால் ஊட்டுமாறு பணித்து காட்சி கொடுத்தமை, திருவாய்மூர் தலத்தில் சம்பந்தர் அப்பர் ஆகிய இருவருக்கும் நடனக்காட்சி காட்டி அருளியமை, வியலூர்  முதலான பல தலங்களில் தனது உருவத்தை காட்டி அருளியது ஆகிய நிகழ்ச்சிகளை  திருஞான சம்பந்தரின் வாழ்க்கையில் காண்கின்றோம்.  பைஞ்ஞீலி தலத்தில் தனது கங்காள வடிவினை சுந்தரருக்கு காட்டிய பெருமான், ஐந்து முறை அந்தணர் வேடத்தில் அவருக்கு காட்சி கொடுத்தமையை அவரது சரித்திரத்தில் காண்கின்றோம். நடக்கவிருந்த திருமணத்தினை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஓலை கொண்டு வந்த முதியவராகவும், திருவதிகை சித்த மடத்தில் தனது காலினை சுந்தரரின் முகத்தில் இருமுறை படுமாறு வைத்து திருவடி தீட்சை அருளிய முதியவராகவும், குருகாவூர் செல்லும் வழியில் தயிர் சாதமும் குடிநீரும் வைத்துக் கொண்டு காத்திருந்த முதியவராகவும், திருமுதுகுன்றம் செல்லவிருந்த சுந்தரரை தடுத்து கூடலையாற்றூர் அழைத்துச் சென்ற முதியவராகவும், திருக்கச்சூர் தலத்தில் உள்ள பல இல்லங்களில் நடுப்பகலில் சென்று இரந்து அமுது கொண்டு வந்து ஈந்த அந்தணராகவும் பெருமான் காட்சியளித்த போதும், அவ்வாறு வந்து அருள் புரிந்தவர் பெருமான் தான் என்பதை சுந்தரர் முதலில் உணரவில்லை.  சங்கிலி நாச்சியாரை மணமுடிக்க வந்த போதும், பரவை  நாச்சியாருடன் பிணக்கினைத் தீர்க்க வந்த போதும், வந்தவரை யார் என்றும் சுந்தரர் அறிந்து கொண்டதையும் நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். இவ்வாறு பல உருவம் கொண்டு வந்து அடியார்களுக்கு அருள் புரிந்தமை இங்கே உணர்த்தப் பட்டு, அந்த சமயங்களில் அடியார்களின் கண்கள் கண்ட காட்சி அவர்களது மனதினில் பதிந்து இருந்தமையும் கண்ணார் தரும் உருவம் என்ற தொடரால்  உணர்த்தப் படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.                          
  
பொழிப்புரை:

தன்னை நினைத்து தியானம் செய்யும் அடியார்களுக்கு தியானைத்தின் பயனாக விளங்குபவனும், பிரமனாக உலகத்தினை படைப்பவனாகவும், எண்ணற்ற கலைகளாகவும், சந்த இசையோடு கூடிய வேதத்தின் பாடல்களாகவும், அனைவரிலும் உயர்ந்த பொருளாகவும், அனைவர்க்கும் தலைவனாகவும்,  பார்ப்போரின் கண்கள் நிறைந்து வண்ணம் அழகாக இருப்பவனும் ஆகிய கடவுள் உறையும் இடமாவது, தேவர்களும் நிலவுலகத்தாரும் தொழுவதும் நீர்வளம் நிறைந்து காணப் படுவதும் ஆகிய வியலூர் தலமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com