140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 6

தவத்தினில் ஆழ்ந்திருந்த அர்ஜுனன்
140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 6

பாடல் 6:

    வசைவில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான்
    திசை உற்றவர் காணச் செரு மலைவான் நிலையவனை
    அசையப் பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்
    விசையற்கு அருள் செய்தான் இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

அடியார்களுக்கு பல வேடங்களில் வந்து அருள் புரிபவன் இறைவன் என்று முந்தைய பாடலில் கூறிய சம்பந்தருக்கு விஜயனுக்கு பாசுபதம் ஈந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். அப்போது பெருமான் கொண்டிருந்த வேட்டுவ வேடத்தினை இந்த பாடலில் நினைவூட்டுகின்றார். தவத்தினில் ஆழ்ந்திருந்த அர்ஜுனன், இறைவனுடன் சண்டைக்கு செல்லவில்லை. அர்ஜுனனுடன் சண்டை போடுவதற்கு ஒரு காரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இறைவன், தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை தாக்கவந்த ஒரு காட்டுப்பன்றியின் மீது ஒரு அம்பினை தொடுத்தான். காட்டுப்பன்றி தன்னைத் தாக்க வந்ததை உணர்ந்த அர்ஜுனனும் அந்த பன்றியின் மீது அம்பினை எய்தான். இருவரும் எய்த அம்புகள் பன்றியின் உடலைத் துளைக்கவே,  எவரது அம்பு முதலில் பன்றியின் உடலைத் தைத்தது என்ற விவாதம் அவர்களுக்குள்ளே எழுந்து, அதுவே அவர்களின் இடையே சண்டை மூள்வதற்கும் காரணமாக இருந்தது. இந்த நிலையினை உணர்த்தும் வண்ணம் பெருமானை செரு மலைந்தான் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவர்கள் இருவருக்கும் இடையே எழுந்த சண்டையைக் காண பலரும் வானில் குழுமினார்கள். நிலையவன்=தவத்தினில் உறைந்து நின்ற அர்ஜுனன்; வசைவில்=வளைந்த வில்; வசை என்ற சொல்லுக்கு பழி என்று பொருள் கொண்டு, உயிர்க்கொலை புரிவதற்கு கருவியாக இருக்கும் பழியினை உடைய வில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. செரு=சண்டை; மலைதல்=போரிடுதல்; அசைதல்= போரில் களைப்படைந்து வருந்துதல்;  

பொழிப்புரை:

வளைந்த வில்லினைக் கொண்டு வேடுவ வேடம் தாங்கி, அர்ஜுனனின் ஆற்றலை உமையம்மை தானே நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் வண்ணம் உமையன்னையுடன், தவத்தில் அர்ஜுனன் ஆழ்ந்திருந்த இடத்திற்கு வந்த இறைவன், அர்ஜுனனை சண்டைக்கு வலிய அழைத்தான். இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையைக் காண எண்திசையில் உள்ளோரும் வானோரும் குழுமினார்கள். பல சண்டைகளில் வெற்றி கொண்டு தோல்வி அடையாதவன் என்ற புகழினைக் கொண்டிருந்த அர்ஜுனன் களைப்படைந்து சோர்வடைந்து வருந்தும் வண்ணம் அர்ஜுனனை வெற்றி கொண்ட பெருமான், பின்னர் அவனுக்கு இரங்கி, பின்னாளில் வரவிருந்த பாரதப் போரினில் களைப்படையாமல் போரிடும் வண்ணம் உயர்ந்த பாசுபதக் கருவியினையும், எடுக்க எடுக்க குறையாமல் வரும் அம்பறாத்தூணியையும், அர்ஜுனனுக்கு அளித்து அருள் புரிந்தான். இத்தகைய வல்லமையும் கருணையும் கொண்ட பெருமான் உறையும் இடம் நீர்வளம் கொண்ட வியலூர் தலமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com