140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 7

நடனம் ஆடும் பெருமான்
140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 7


பாடல் 7:

    மானார் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம்
    ஊனார் தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள்
    தானாகிய தலைவன் என நினைவார் அவர் இடமாம்
    மேனாடிய விண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே
  

விளக்கம்:

இரவு=இரத்தல் தொழிலை உடையவன், பலி ஏற்பவன்; இசை=புகழ்; உயர்விசை=உயர்ந்த புகழ்; தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர்வான நிலை; நாடுதல்=விரும்புதல்;

பொழிப்புரை:

மான் கன்றினைத் தனது இடது கையிலும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களிலும் ஏந்திய பெருமான், பல ஊர்கள் திரிந்து பலி ஏற்பதைத் தனது தொழிலாகக் கொண்டவன் ஆவான். பகலில் நடனம் ஆடும் பெருமான், பல உடல்களில் உயிராக நிலைபெற்று விளங்குகின்றான். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்று உயர்ந்த புகழினை உடைய இறைவன், உலகினில் தோன்றும் அனைத்துப் பொருட்களுமாக இருப்பவன் என்றும் தங்களது தலைவன் என்றும் அனைவராலும் தங்களது தலைவன் என்று நினைக்கப் படுபவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் வியலூர்  தலமாகும். முந்திய பிறவியினில் தாங்கள் செய்த நற்செயல்களின் பயனாக மேலுலகம் அடைந்து இன்பும் துய்க்கும் விண்ணோர்கள் தொழும் சிறப்பினை உடையது நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com