149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 11

மந்திர உபதேசம்
149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 11

பாடல் 11:

அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள் செய்த எந்தை மருவார்
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திருமுல்லைவாயில் இதன்மேல்
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானமிகு பந்தன் ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே

 
விளக்கம்:

அணிகொண்ட கோதை என்று தலத்து அம்பிகையின் திருநாமம் கோதை என்பதை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். தட்சிணாமூர்த்தியாக அம்பிகைக்கு பெருமான் மந்திர உபதேசம் செய்த தல வரலாறு இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. மருவார்=பகைவர்கள்; திண்மை என்ற சொல் திணி எங்கே மருவியுள்ளது. உலகப் பொருட்களின் மீது விருப்பு வெறுப்பு கொள்வதால், சிந்தையில் வெப்பம் உண்டாகின்றது. விருப்பு வெறுப்பின்றி எந்த பொருளையும் சம நோக்குடன் பாவிக்கும் அடியார்களின் உள்ளம் குளிர்ந்து காணப்படும் என்பதையும் அத்தகைய அடியார்கள் சீர்காழி தலத்தில் வாழ்ந்தார்கள் என்பதையும் சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். ஒண்=ஒளி, இங்கே ஞானஒளி என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மையையும் அவரை பகைத்துக் கொள்வதால் அடையும் தீங்கும் இங்கு ஒருசேர உணர்த்தப் படுகின்றன. ஒண்மை என்ற சொல்லுக்கு நன்மை என்ற ஒரு பொருளும் உள்ளது. நன்மையைத் தரும் பதிகம் என்று சம்பந்தர் குறிப்பிட்டதை, சேக்கிழார் செந்தமிழ் என்று பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

பொழிப்புரை:

நகைகளை அணிந்து கோதை என்ற திருநாமத்துடன் இந்த தலத்தில் வீற்றிருக்கும் உமையம்மை பெருமானைப் புகழ்ந்து வழிபட, எமது தந்தையாகிய பெருமான், உமை அன்னைக்கு மந்திர உபதேசம் செய்து அருள் புரிந்தார். பகைமை உணர்ச்சியுடன் வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த வில்லினை உடையவர் சிவபெருமான். இவர் திருமுல்லைவாயில் தலத்தில் உறைகின்றார். எந்த பொருளின் மீதும் விருப்பு வெறுப்பின்றி வாழ்வதால் குளிர்ந்த மனம் உடையவர்கள் வாழும் சீர்காழி தலத்தில் தோன்றியவனும், ஞான ஒளியுடன் பிரகாசிப்பவனும் ஆகிய ஞானசம்பந்தன், திருமுல்லைவாயில் தலத்து இறைவனைப் புகழ்ந்து பாடிய சிறந்த தமிழ்ப்  பாடல்கள் பத்தையும் இசையுடன் பாடும் அடியார்கள், பரந்த வானுகத்தினை ஆளும் வாய்ப்பினை பெறுவார்கள்.           

முடிவுரை:

அரனூர் அரனூர் என்று பாடல்கள் தோறும் திருமுல்லைவாயில் தலத்தை குறிப்பிடும் சம்பந்தர் இந்த பாடல்களில் அரனின் பல்வேறு தன்மையை குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கிய விடத்தினை உருண்டையாக திரட்டி உட்கொண்டு அனைவரையும் காத்து அருள் புரிந்தவன் என்று முதல் பாடலிலும், பக்குவமடைந்த அடியார்களை தக்க தருணத்தில் ஆட்கொண்டு அருள் புரிபவன் என்று இரண்டாவது பாடலிலும், தன்னிடம் அன்பு வைத்து உடலும் உள்ளமும் உருகும் அடியார்களுக்கு தெவிட்டாத இன்பத்தை அளிப்பவன் என்று  மூன்றாவது பாடலிலும் குறிப்பிடும் சம்பந்தர், இருபத்து நான்கு தத்துவங்கள் மற்றும் ஆன்மாவினை உடனிருந்து இயக்கும் இறைவன் அவைகளிலிருந்து வேறாகவும் இருக்கும்  திறமை வாய்ந்தவன் என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். ஐந்தாவது மற்றும் ஆறாவது பாடல்களில் அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பெருமான் ஏற்றுக் கொண்டுள்ள சிறப்பு உணர்த்தப் படுகின்றது. நெஞ்சார தன்னை நினைக்கும் அடியார்களின் வினைகளை கெட்டழித்து அருள் புரியும் இறைவன் என்று ஏழாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர், பொன்மேனி கொண்டவனாக இறைவன் இருக்கும் தன்மையை எட்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பல திருவிளையாடல்கள் புரிபவன் என்றும் மதயானையின் தோலை உரித்து வெற்றி கண்டவன் என்று அடுத்த இரண்டு பாடல்களில் குறிப்பிடும் சம்பந்தர் அம்பிகைக்கு மந்திர உபதேசம் செய்து அருள் புரிந்தவன் என்று கடைப் பாடலில் கூறுகின்றார். இறைவன் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மைகளை சம்பந்தரின் பதிகத்தின் மூலம் அறிந்து கொண்ட நாமும், திருமுல்லைவாயில் தலம் சென்று இறைவனை வணங்கி,  சம்பந்தர் அருளிய இந்த பதிகத்தினை முறையாக பாடி இறைவனின் அருள் பெற்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com