150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 1

150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 1

திருவிளையாடல் புராணம்


பின்னணி:

நனிபள்ளி தலத்தில் தனது இரண்டாவது தலயாத்திரையினைத் தொடங்கிய ஞானசம்பந்தர் திருமுல்லைவாயில் தலத்தில் முடித்துக்கொண்டு சீர்காழி திரும்புகின்றார். அவ்வாறு சீர்காழி திரும்பிய பின்னர் அவர், வழக்கம் போன்று சீர்காழி பெருமான் உறையும் திருக்கோயில் சென்று பெருமானை வணங்கிய பின்னர் தனது இல்லத்திற்கு செல்கின்றார். அப்போது தூய ஆணியாம் பதிகம் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் பதிகம் யாது என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. தருமபுர ஆதீனத்தாரின் வலைத்தளத்தில், ஆணியாம் பதிகம் என்ற தொடர் அன்னமென்னடை அரிவை என்று தொடங்கும் பதிகத்தை குறிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிரபுரம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். இந்த பதிகத்தின் நான்காவது பாடலில், தேருக்கு அச்சாணி இன்றியமையாதது போன்று உலகத்தவரின் வாழ்வுக்கு சிவபெருமான் தூய்மையான அச்சாணியாக இருப்பதாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார். தூய ஆணி என்று சேக்கிழார் குறிப்பிடுவதால் உயர்ந்த தரமான பொன் என்று பொருள் கொண்டு, ஆணி என்பதற்கு கொல்லர்கள் வைத்திருக்கும் மாற்றுக் குறையாத பொன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. எனவே ஆணியாம் திருப்பதிகம் என்று குறிப்பிடப்படும் பதிகம் இதுவே என்று கூறப்பட்டுள்ளது பொருத்தமாக இருப்பது போல் தோன்றுகின்றது. வேணி=சடை; செய்ய வேணி=சிவந்த சடை; போற்றிய விருப்பின் மிக்கார்=இறைவனைப் போற்றி பாடப் பாட, சலிப்பு ஏதுமின்றி, மேலும் அவரை தொடர்ந்து போற்றிப் பாட வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவராய்; இந்த நிலை சிவானந்த அனுபவத்தினால் வருவது; கூர்தல்=சிறத்தல்; சேணுயர் மாடம்=விண்ணினை நெருங்கும் வண்ணம் உயர்ந்து ஓங்கிய மாட வீடுகள்; திருஞான சம்பந்தர் இவ்வாறு தலங்கள் தோறும் சென்றும் பதிகங்கள் பாடியது, உயிர்கள் அந்த பதிகங்களை முறையாக பாடி, இறைவனது அருள் பெற்று தங்களது வாழ்வினில் உய்வினை அடையும் நோக்கத்துடன் தான், என்பதை உணர்த்தும் பொருட்டு, அருட்பெரு வாழ்வு பெற்ற என்று இந்த பாடலில் சேக்கிழார் உணர்த்துகின்றார்.

தோணி வீற்றிருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி அருட்பெருவாழ்வு கூரச்
சேணுயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய
வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்

பாடல் 1:

அன்ன மென்னடை அரிவையோடு இனிதுறை அமரர் தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக்கம் மலர் வைத்தவர் வேதம் தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதில் சிரபுரத்தார் சீரார்
பொன்னின் மாமலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே

விளக்கம்:

அமரர் தம் பெருமான் என்ற தொடர், தேவதேவன், மகாதேவன் ஆகிய திருநாமங்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சில பதிப்புகளில் வேதந்தான் என்ற தொடருக்கு பதிலாக வேதாந்தம் என்ற தொடர் பாடபேதமாக காணப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான பதிப்புகளில் வேதந்தாம் என்ற தொடரே காணப்படுகின்றது. எனவே நாமும் அந்த தொடரையே பின்பற்றுவோம். பயத்தல்=கொடுத்தல்; பெருமான் வேதங்களுக்கு பொருள் அருளியதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலத்தில் (திருவிளையாடல் புராணம்) பரஞ்சோதி முனிவர், கண்வர் முதலான முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் சொன்ன நிகழ்ச்சி சொல்லப் பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்ற வேதியன் ஒருவன், நைமிசாரண்யத்தில் கண்வர் முதலான முனிவர்கள், முகம் வாட்டமடைந்து இருந்ததைக் கண்டு, அதன் காரணத்தை வினவினார். வேதங்களின் பொருளினை அறியமுடியாமல் வருந்துவதாக அவர்கள் கூற, மதுரை வேதியன், மதுரை மாநகரம் சென்று சொக்கநாதப் பெருமானிடம் வேண்டுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறினார். அவ்வண்ணமே கண்வரும் மற்ற முனிவர்களும் மதுரை சென்றடைந்து சொக்கநாதப் பெருமானிடம் வேண்டினார்கள். பின்னர் அவர்கள் ஆங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் வழிபட்ட போது, வேதியச் சிறுவனாக பெருமான் வெளிப்பட்டு, முனிவர்களை நோக்கி அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது முனிவர்கள் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே தங்கள் அவா என்று கூறவே, வேதியச் சிறுவனாக வந்த பெருமானும் வேதங்களின் பொருளை எடுத்துரைத்தார் என்று திருவிளையாடல் புராணம் உணர்த்துகின்றது. சனகாதி முனிவர்களுக்கு தனது மோன முத்திரையால் வேதத்தின் பொருளை உணர்த்தியவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பிராட்டியின் நடையினை அன்னத்தின் நடைக்கு சம்பந்தர் இங்கே ஒப்பிடுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் பிராட்டியின் அங்கங்கள் குறிப்பிடப்பட்டு அவற்றின் நேர்த்தி திருமுறை ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன. பிராட்டியின் நடையழகு அன்னத்தின் நடைக்கும் பெண் யானையின் நடைக்கும் ஒப்பிடப்படுகின்றன. அத்தகைய பாடல்களில் அன்னநடை என்று குறிப்பிடும் ஒரு சில பாடல்களை நாம் இங்கே காண்போம். சோபுரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.51.6) அன்னத்தைப் போன்று மிருதுவான நடையினை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவன் பெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பொற்பு=அழகு; இடையினில் துன்ன ஆடையினாய் வண்ண ஆடையினாய் என்று ஆடையினாய் என்ற சொல்லினை இரண்டு இடங்களில் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். துன்ன ஆடை=பெரிய ஆடையிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆடை, கோவணம். துன்ன என்ற சொல்லுக்கு தைக்கப்பட்ட என்ற பொருளும் பொருந்தும். கோவண ஆடை வெண்மை நிறத்தில் உள்ளதாக பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. எனவே வண்ண ஆடை என்று குறிப்பிடப் பட்டுள்ளது பிராட்டி அணிந்துள்ள ஆடையை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாதொரு பாகனாக பெருமான் உள்ள நிலை, இங்கே இருவேறு ஆடைகளை குறிப்பிட்டு மிகவும் நயமாக உணர்த்தப் படுகின்றது.

கொல் நவின்ற மூவிலை வேல் கூர்மழுவாட் படையன்
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை கொலாம்
அன்னம் அன்ன மென்னடையாள் பாகம் அமர்ந்து அரை சேர்
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே

பாதளீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.108.1) ஞானசம்பந்தர் அன்னம் போன்ற நடையினை உடையவள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். பொற்பு=அழகு; பன்னிய=மீண்டும் மீண்டும்;

மின்னியல் செஞ்சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல் சூடி பொற்பு அமரும்
அன்னம் அன நடையாளொரு பாகத்து அமர்ந்து அருளி நாளும்
பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.9.3) அப்பர் பிரான், அன்ன மென்னடையாள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். ஞாழல்=சுரபுன்னை; சின்ன வேடம்= உருத்திராக்கம் திருநீறு சடைமுடி முதலியன சிவச் சின்னங்களாக கருதப் படுகின்றன. இத்தைகைய சின்னங்களை பெரிய செல்வமாக மதித்து இறைவன் அணிகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இறைவனே சிவச் சின்னங்களை மேலான செல்வமாக மதிக்கின்றான் என்று குறிப்பிடுவதன் மூலம், நாமும் அந்த சின்னங்களை சிறப்பாக மதிக்கவேண்டும் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். புறணி= உப்பங்கழிக்கரை; மன்னினார்=நிலையான புகழினை உடையவர்கள்;

புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னினார் வலம் கொள் மறைக்காடரோ
அன்ன மென் நடையாளை ஒர் பாகமாச்
சின்ன வேடம் உகப்பது செல்வமே

புகலூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.99.9) பாடலில் அன்னநடை மடவாள் பாகத்தான் என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்பிடுகின்றார். துன்னம்=தையல்; அக்காரம்=எலும்பு மாலை; சங்கு மணிகளால் கோர்க்கப்பட்ட உருத்திராக்க மாலை என்றும் கூறுவார்கள். சிவபெருமான் கையில் இருக்கும் மழு ஆயுதத்தை அவர் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாத காரணத்தால், இரத்தக் கறை படியாத ஆயுதமாக விளங்குகின்றது.

துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி
தன் அணையும் தண்மதியும் பாம்பும் நீரும் சடைமுடி மேல் வைத்து உகந்த தன்மையானே
அன்ன நடை மடவாள் பாகத்தானே அக்காரம் பூண்டானே ஆதியானே
பொன்னம் கழலடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

பொழிப்புரை:

அன்னப்பறவை போன்று மென்மையான நடையை உடைய உமை நங்கையுடன் இனிதாக உறைபவரும், தேவர்களின் தலைவராக திகழ்பவரும், மின்னல் போன்று ஒளி வீசும் சிவந்த சடையினில் வெள்ளெருக்கு மலரினைத் சூட்டிக் கொண்டவரும், வேதங்களின் வழியாக வாழ்க்கைக்கு பயன்படும் அரிய கருத்துகளை உலகினுக்கு அளித்தவரும், வேதங்களின் பொருளினை உணர்த்தியவரும், பெரிய மதில்கள் சூழ்ந்த சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறைபவரும் ஆகிய பெருமானின் பொன் போன்று அழகிய திருவடிகளைத் தொழும் அடியார்கள் வினைகளுடன் பொருந்த மாட்டார்கள்; அதாவது அவர்களைப் பற்றியுள்ள வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com