150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 10

ஆண் துறவிகளை
150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 10

பாடல் 10:

    பறித்த புன் தலைக் குண்டிகைச் சமணரும் பார் மிசைத் துவர் தோய்ந்த
    செறித்த சீவரும் தேரரும் தேர்கிலாத் தேவர்கள் பெருமானார்
    முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியின் மூழ்கிட இள வாளை
    வெறித்துப் பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிகத்தானே
 

விளக்கம்:

மேதி=எருமை மாடு; ஆவி=குளம்; வெறித்து=கலங்கி; குண்டிகை=கமண்டலம்; தங்களது தலையில் உள்ள முடிகளை, பறித்துப் பிடுங்கிக் கொள்ளும் வழக்கத்தை அந்நாளைய சமணர்கள் கொண்டிருந்தனர் என்பது பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது.  அப்பர் பிரான் திருவதிகை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடல் இதனை மிகவும் விரிவாக உணர்த்துகின்றது.  

முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித்
தலை பறிக்கும் தன்மையர்களாகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார்
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதனழியச் செற்ற சேவடியினானை
இலை மறித்த கொன்றை அந்தாரான் தன்னை ஏழையேன் நான் பண்டு        இகழ்ந்தவாறே

சமணப் பெண் துறவிகள், ஆண் துறவிகளுக்கு சேவை செய்து வந்தனர். அத்தைகைய சேவைகளில் ஒன்று தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. சமணசமய நூல்களைக் கற்றுத் தேர்ச்சி அடைவதால் மட்டுமே எவருமே சமண குருவாக மாற முடியாது. அவர்கள் பொறுமையின் எல்லையை சோதனை செய்து பார்த்த பின்னரே, அவர்கள் குருவாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். முடி பறித்தல் என்பது அத்தகைய ஒரு சோதனை. தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றாக, அடுத்தவரால் பிடுங்கப்படும் போது ஏற்படும் வலியினைப் பொறுத்துக் கொண்டு கண்களில் நீர் வாராமல் இருக்கும் பக்குவத்தை அடைந்தவர்களே பொறுமையில் சிறந்தவர்களாக கருதப் படுவார்கள். உடை உடுத்தாமல் இருத்தல் மற்றும் நீராடாமை சமணத் துறவிகளுக்கு உரிய நெறியாக கருதப் பட்டாலும், சமணப் பெண் துறவிகள் உடை அணிந்து வாழ்ந்தனர் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து அறிகின்றோம். மேலும் பெண் சமணத் துறவிகள், மேல் குறிப்பிட்ட சேவையினை செய்த போது ஆண் துறவிகளை தெய்வத்திற்கு சமமாக கருதினர் என்பதும் நமக்கு புலனாகின்றது.     இவ்வாறு தங்களது தலையில் உள்ள முடிகள் பலவந்தமாக நீக்கப்பட்டதால் தலை முழுதும் புண்கள் உடையவர்களாக, மற்றவர் அருவருக்கும் தன்மையில் இருந்தமை இங்கே புன்தலை என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது போலும். தேரர்=புத்தர்;      

பொழிப்புரை:

பலவந்தமாக மயிர் பறிக்கப் பட்டமையால் புண்கள் மிகுந்து அருவருக்கத்தக்க நிலையில் காணப்படும் தலை மற்றும் குண்டிகையுடன் உலகத்தவர்க்கு காட்சி தரும் சமணர்களும், துவர்ச் சாயம் தோய்க்கப்பட்ட சீவரம் என்று அழைக்கப்படும் ஆடையினை அணிந்த புத்தர்களும் அறிய முடியாத பெருமான் தேவர்களின் தலைவனாக விளங்குகின்றான். கரும்புகளை முறித்துத் தின்ற எருமைகள் குளங்களில் மூழ்க, அதனால் அச்சம் அடைந்த வாளை மீன்கள் கலக்கம் கொண்டு பாயும் வயல்கள் நிறைந்த சிரபுரம் தலத்தினில் உறையும் இறைவனைத் தொழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு முழுவதுமாக நீங்கிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com