நியூஜெர்சியில் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா

நியூஜெர்சி மாநிலம், எடிசன் நகரிலுள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா, ஞாயிறு, மே 14 அன்று, எடிசன் ஜே.பி. ஸ்டீபன்ஸ் உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் விமரிசையாகக்  கொண்டாடப்பட்டது.
நியூஜெர்சியில் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா

நியூஜெர்சி மாநிலம், எடிசன் நகரிலுள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா, ஞாயிறு, மே 14 அன்று, எடிசன் ஜே.பி. ஸ்டீபன்ஸ் உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் விமரிசையாகக்  கொண்டாடப்பட்டது.

காலை 10 மணிக்குத் தொடங்கி, எட்டு மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் சுமார் நானூறு மாணவர்கள் பங்குகொண்டு, இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்க, இவ்விழா தமிழ்ப்பள்ளியைக் கொண்டாடும் விழாவாக மட்டுமல்லாமல், தமிழ் மொழி, தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாட்டைக் கொண்டாடும் விழாவாகவும் அமைந்தது.  

"வெள்ளம்போல் தமிழர் கூட்டம் 
வீரங்கொள் கூட்டம்; 
அன்னார் உள்ளத்தால் ஒருவரே 
மற்று உடலினால் பலராய் காண்பார், "

என பாரதிதாசன் கூறியதை நினைவூட்டுகின்ற வகையில், விழாவிற்கு பெருந்திரளாக மக்கள் வந்திருந்தனர். மலர் மாலைகள்,  தமிழ் ஆளுமைகளின் ஓவியங்கள் என மேடை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.  

பள்ளிக்குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்தை மேடையில் பாட, அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய கீதமும் இசைக்கப்பட, ஆண்டு விழா இனிதே துவங்கியது. தமிழ்ப்பள்ளி மூத்த ஆசிரியை ஆன்னி ஜெயராம் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர்கள், விசாலாட்சி நாகராஜன், ராஜேஷ் பன்னீர்செல்வம், சௌமியா பாலசுப்ரமணியன், பாலா தனசேகரன், யசோதா கிருஷ்ணராஜ், குரு ராகவேந்திரன்,  இந்திரா கண்ணன், மற்றும் ஆனந்த் தமிழரசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். 

மூன்று முதல் பதினாறு வயது வரையிலான சுமார் 425 குழந்தைகள் கவிதை ஒப்புவித்தல், பாடுதல், நடனம் ஆடுதல், நாடகத்தில் நடித்தல் என ஐம்பதற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டனர்.  இவ்வருடம் நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் புதிய கிளையான பார்சிபனி நகரப் பள்ளி மாணவர்களும், விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

கவிதை ஒப்புவித்தல் நிகழ்ச்சிகளில், ஆத்திசூடி பாக்கள்,  திருக்குறள்,  பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை உடல் மொழி, முகபாவனைகளோடு மாணவர்கள் ஒப்புவித்தனர். ஆண்டு விழாவில், ஏராளமான மழலையர், மொழிப்பற்று, திரைப்படப் பாடல்களை மாணவர்கள் இன்புற்றுப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

விழா நெடுக, பல வகையான நடனங்களும் அரங்கேறின.  குழந்தைப் பருவ பாடல்களுக்கும், கிராமிய மண்வாசனை வீசும் நாட்டுப்புறப் பாடல்களுக்கும்,  இந்திய தேசபக்தி பாடல்களுக்கும், இளைஞர் எழுச்சியை ஆதரித்த ஜல்லிக்கட்டு பாடல்களுக்கும், வாழ்வோடு பிணைந்துவிட்ட திரைப்பட பாடல்களுக்கும், பரத நாட்டியம், குத்து ஆட்டம், ஹிப் ஹாப், திரை நடனம், நவீன நடனம் என்று பல பாணிகளில் மாணவர்கள் நடனமாடினர். குறிப்பாக, பறையாட்டம், தீச்சட்டியாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம் போன்ற தமிழர் மரபு நடனங்கள் காண்போரின் கவனத்தைக் கவர்ந்தது.
 

இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குறு நாடகங்களும் அரங்கேறின. பீர்பால், தெனாலிராமன் கதைகள்,  திருக்குறள், ஆத்திசூடி நீதிக்கதைகள், சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற வள்ளல் பாரி-புலவர் கபிலர் நட்புக்கதை,  மக்கள் கவிஞர் இன்குலாப் இயற்றிய பல ஔவையார்கள் பற்றிய நாடகம், சுற்றுபுறச் சூழலைப் பேணும் கதைகள்,  இராமாயணம், மகாபாரதம்,  சிலப்பதிகார கதைகள், அரசியல் சார்ந்த கதைகள், அறிவியல் புனைவுக் கதைகள் என பல விதமான நாடகங்களில் மாணவர்கள் நடித்தனர். 

நியூஜெர்சி வாழ் தமிழ்க் குழந்தைகள், ஆங்கிலத்தை முதல் மொழியாக படிக்கின்ற போதும், தமிழில் அழகுற ஆடியதும், பாடியதும், பொருள் புரிந்து நாடகத்தில் நடித்ததும் கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.  

“அகரம் முதலாம் தமிழெனுந் தேன் 
அடுத்த தலைமுறைக் கதுகொண்டு சேர்,”

என்ற வாசகத்தையே குறிக்கோளாக கொண்டு, 2010-ஆம் ஆண்டில் லாப-நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, நியூஜெர்சியில் வாழும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை வெற்றிகரமாகப் பயிற்றுவித்து வருகிறது. தொடக்கத்தில் 65 மாணாக்கர்களையும் 12 தன்னார்வலர்களையும் கொண்டிருந்த இப்பள்ளி, தற்போது 65 தன்னார்வலர்களின் உதவியுடன் சுமார் 425 மாணவர்களுக்குத் தமிழ்ச் சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறது. 

தமிழ்ப்பள்ளி வெற்றிகரமாக இயங்கிட உறுதுணையாக நிற்கும் அனைத்து தன்னார்வலர்களின் தொடர் சேவையைப் பள்ளி முதல்வர் சாந்தி தங்கராஜ் போற்றினார். மேடையில் அவர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

ஹார்வர்ட் தமிழ் மொழி அமர்வின் முக்கியத்துவத்தைப் பறைச்சாற்றும் நிகழ்ச்சியாகவும் இவ்விழா அமைந்தது. பிரபல வலைப்பதிவர் PK சிவக்குமார், பள்ளி தன்னார்வலர் சரவணக்குமார், முதல்வர் சாந்தி தங்கராஜ் ஆகியோர் பார்வையாளர்களை நன்கொடைகள் வழங்குமாறு கோரிக்கைவிடுத்தனர். தமிழ்ப்பள்ளியின் சந்தைப்படுத்தல் குழுவின் உதவியுடன், ஒரே நாளில் 7500 டாலர் நிதியும் (சுமார் 5 லட்சம் ரூபாய்) திரட்டப்பட்டது.
 

மே 14 அன்னையர் தினத்தை முன்னிட்டு, முதல்வரின் வேண்டுகோளிற்கிணங்க பார்வையாளர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைத்து தாய்மார்களையும் பாட்டிமார்களையும் கரவொலியுடன் வாழ்த்தினர். அன்னையர் சிறப்பைப் போற்றும் மாணவர் குறுநாடகம் ஒன்றும் அரங்கேறியது.

இவ்வாண்டு விழா வெற்றிகரமாக நடைபெற, பல நிறுவனங்களும் நிதி தந்து உதவின.  ஓட்டல் சரவணபவன் காலை/மாலை சிற்றுண்டியும், மதிய உணவும் மலிவு விலைக்குத் தந்து உதவியது.   

ஆண்டு விழாவின் இறுதியில் அரங்கேறிய ஆசிரியர்கள் நடித்த  “பண்ணையாரம்மாவும் பருந்துக் கூட்டமும்” என்ற அரசியல் நையாண்டி நாடகம் பார்வையாளர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியது.

முடிவில், தமிழ்ப்பள்ளியின் துணைமுதல்வர் லக்ஷ்மிகாந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உதவிய அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் நன்றி கூறினார். ஒலிப்பெருக்கியில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட, கூத்தும் கும்மாளமும் மகிழ்ச்சியுமாக நீடித்த பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா சிறப்பாக நிறைவுபெற்றது. 

- சாந்தி தங்கராஜ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com