Enable Javscript for better performance
கதிரொளிநிறை குயீன்ஸ்லாந்து மாநில பொங்கல் கொண்டாட்டம்!- Dinamani

சுடச்சுட

  

  கதிரொளிநிறை குயீன்ஸ்லாந்து மாநில பொங்கல் கொண்டாட்டம்! 

  By - திருமதி லலிதா நடராஜா (கண்டி, பொற்கரை)  |   Published on : 04th February 2019 05:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  image001_(1)


  புலம் பெயர் நாட்டிலின்றி, தாயகத்தில் நடந்த விழாவோ என எண்ணத்தக்க வகையில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு விழாவைச் சிறப்பித்தார்கள். சிறப்பான காலநிலையும் வைபவத்திற்கு வெகுவாகக் கைகொடுத்தது. 

  திட்டமிட்டவாறே பிற்பகல் 3 மணியளவில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்தமை “காலந்தவறாமை“ என்று தமிழர் போற்றும் உயர்பண்பினை வலியுறுத்தியது. தகிக்கும் கதிரவன் கனலையும் பொருட்படுத்தாமல் – பாலரும் விருத்தரும், இளைஞரும் மூத்தோரும், ஆண்களும் பெண்களும் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழரோடு மற்ற இனத்தவர்களும் களிப்போடு கலந்துகொண்டமை, நிகழ்வை களியாட்டமாக்கியது. இசை நாற்காலி, எலுமிச்சை ஏந்தி ஓடல், மூன்று காலோட்டம், கயிறு இழுத்தல் என இடம்பெற்ற போட்டிகளில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை உவகை அளித்தது. அதேநேரம் கோலப் போட்டி, பொங்கல் போட்டி என்று பெண்கள் தம் கைவண்ணத்தை வெளிப்படுத்தத் தக்க போட்டிகளும் இடம்பெற்றமை மனநிறைவைத் தந்தது. இவை இலைமறை காயாக இருந்த நம் தமிழ்ப் பெண்களின் திறமையையும், தமிழ்ப் பண்பாட்டின் உயர்வையும் பல்வேறு இனத்தவரும் அறிந்துகொள்ள வழிவகுத்தன. இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கிய வரதராஜ், செல்வன் அருண் பாராட்டுக்குரியவர்கள்.

  மைதானத்தில் அனைவரும் பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளத்தக்கக் கூடியளவில் அங்காடிகள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு உணவுகளையும் குளிருணவுகளையும் மக்கள் அருந்தி மகிழ்ந்தனர். சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் வசதியாக அமர்ந்து விழாவைப் பார்வையிட அழகிய கொட்டகைகளும் இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலுமொரு சிறப்பம்சமாகும்.

  சிறப்பு விருந்தினர்களாக, 2019 ஆம் ஆண்டு பொங்கல் விழாவின் அரசு தூதர் சாரிச் முல்லன் அவர்களுடன் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், காவல்துறை ஆணையரின் பிரதிநிதியும், இந்திய தூதர் அர்ச்சனா சிங் அவர்களும், விழா ஆதரவாளர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியமையும் நிகழ்விற்கு மெருகூட்டின.

  குயீன்ஸ்லாந்து காவல்துறை வாத்தியகுழுவினரின் “ பாண்ட்” இசையுடன் மேடைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. கலைஞர்களின் இசை மட்டுமல்லாது, பிற கலாசாரங்களைப் போற்றும் அவர்தம் பெருந்தன்மையும் போற்றுதற்குரியது. அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள். மிக அமர்க்களமாக இடம்பெற்ற இவ்விழாவில் எள்ளளவிற்கும் பங்கம் ஏற்படாதவகையில், காவல்துறையினர் வழங்கிய பாதுகாப்பு பாராட்டுக்குரியது. “பல இனக் கலாச்சாரங்களுக்கிடையே புரிந்துணர்வும் பகிர்வும் ஏற்பட ஐக்கியம் இன்றியமையாதது” எனப் பொங்கல் விழாவிற்கு குயீன்ஸ்லாந்து ஆணையர் வாழ்த்துரை வழங்கியது பொன்போன்றது.

  சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பறையிசை முழங்க பொற்கரை “சங்கமம்” கலைக் குழுவினர் வழங்கிய கலாசார ஊர்வலத்துடன் வரவேற்கப்பட்டனர். இதில் காவடி, கரகம், பொய்க்கால் குதிரை என தமிழர்களுக்கே உரித்தான கலைகள் பிரதிபலித்தன. மூவேந்தரான சேர, சோழ, பாண்டியர்கள் தம்கொடியோடும், குடையோடும் கம்பீரமாக பவனி வந்தது கண்கொள்ளா காட்சி.

  பின் சங்கர் ஜெயபாண்டியனும், செல்வி. ரீனா அகஸ்டினும் தங்களின் கணீர் குரல்களில் நிகழ்ச்சிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்க நடைபெற்ற மேடைநிகழ்ச்சிகளில் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் கூறுகளும் இடம்பெற்றன. தன் இனிய குரலில் மகாகவியின் பாடல்களை வழங்கிய செல்வி ரோஷினி ஸ்ரீராமும், அவரின் இசை வாரிசான செல்வன் கவின் ஸ்ரீராமும் பாராட்டுக்குரியவர்கள். “டான்ஸ் கலாட்டா” குழுவினரின் அழகிய நடனங்களும், சிலம்பமாடிய சிறுவர்களும், அதிலும் குறிப்பாக தீச்சுடரோடு சுழன்றாடிய இருவரும் மிகவும் பாராட்டுதற்குரியவர்கள்.

  தமிழ்ப்பண்பாட்டை பிரதிபலித்த “சங்கமம்” கலைக்குடும்பத்தின் நடன நிகழ்வு , தமிழின் தொன்மை இங்கும் தொடரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதிலும் அந்த ஒன்றை வயது தளிரின் நடனம் மிக மிக மெச்சத்தக்கது.

  பல்வேறு பாணியிலான பாடல்களை ஆடலுடன் வழங்கி கலகலப்பூட்டினர் ஹரி – வித்யா தம்பதியினர். விழாவில் இடம்பெற்ற, செங்கம்பள நிறுவனத்தின், நவனாகரீக அணிவகுப்பும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  இத்தகு பெருவிழாவைத் திறம்படத் திட்டமிட்டு, அதன்படி செயற்படுத்திய “ குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றத்தாரும்”, “ தாய்த்தமிழ்ப்பள்ளியினரும்” பாராட்டுக்குரியவர்கள். 

  குழுவினரின் தன்னலமற்ற சேவையால் கவரப்பட்ட, பல இன கலாச்சாரத்தை போற்றும் குயீன்ஸ்லாந்து அரசு விழாவிற்கு, நிதியுதவி வழங்கி ஊக்கம் அளித்தது. விழாவின் பிரதான அனுசரணையாளரான, சென்னை ட்ரீம் ஹோம்ஸ் நிறுவனம், பிரிஸ்பெனின் கான்செப்ட் ப்ராபெர்டீஸ் நிறுவனத்தாருடனும் ஏனைய அனுசரணையாளர்களுடனும், குயீன்ஸ்லாந்து மண்ணில் தமிழ்க் கலாச்சாரத்தை நீரூற்றி வளர்க்கிறார்கள். அதன்மூலம் பல இன ஐக்கியமும் வளர்க்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. இதற்கு, பேருதவியாக பிரிஸ்பேன் 4ஈபி தமிழ் ஒலி, எஸ்பிஎஸ் தமிழ், வானொலிகள் நிகழ்ச்சிகளை நேரலையாக வழங்கி ஊக்குவித்தனர். திடலில் எங்கிருந்தவாறும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் பெரிய திரையில் நேரலை செய்து மகிழ்வித்தனர் ஈஸ்வர் முதலான பல்கலைகழக மாணவர்கள் குழு. நிகழ்ச்சிகளை கண்டுகளித்த பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் ஊக்கப் பரிசுகளும் வாரி வாரி வழங்கப்பட்டன.

  முத்தாய்ப்பாக, 2019 ஆம் ஆண்டின் பொங்கல் விழா, வானை ஒளிரவைத்து பல இன மக்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் பிரம்மாண்ட வானவேடிக்கையோடு இனிதே நிறைவுற்றது.

  “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பண்டைப் புலவர் கனியன் பூங்குன்றனாரின் வாக்கைப் பிரதிபலித்தது இந்தப் பொங்கல் கொண்டாட்டம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்தறிந்து, புதியதோர் உலகம் செய்வோம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai