10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: ஒரு கண்ணோட்டம்

10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019ம் ஆண்டு ஜூலை 4, 5, 6, 7 ஆகிய நான்கு நாட்கள் சிகாகோ நகரில் நடைபெற்றதை பலர் அறிவர். நிகழ்ந்தது, நிகழப் போவது எவையெவை என்பதை தமிழ் ஆர்வலர்களுக்குத் தெரிவிப்பதைக் கடமையாகக் கருதுகிறேன். விரும்புவோர் படிக்கலாம்.
10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: ஒரு கண்ணோட்டம்

10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019ம் ஆண்டு ஜூலை 4, 5, 6, 7 ஆகிய நான்கு நாட்கள் சிகாகோ நகரில் நடைபெற்றதை பலர் அறிவர். நிகழ்ந்தது, நிகழப் போவது எவையெவை என்பதை தமிழ் ஆர்வலர்களுக்குத் தெரிவிப்பதைக் கடமையாகக் கருதுகிறேன். விரும்புவோர் படிக்கலாம்.

அரசியல் கட்சிகளின் சாயமின்றி, தனிமனிதத் துதிப் பாடல்களின்றி, புலம் பெயர்ந்த தமிழ் வழித்தோன்றல்களால், வல்லரசு நாடான அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் மாநாடு என்பது தனிச் சிறப்பு.

விழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் படிக்காத பாமரர்கள் அல்லர். வாட்டிப் படைக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களும் அல்லர் . மருத்துவர்கள்,  பொறியாளர்கள்,  தொழில் முனைவோர்,  அறிஞர்கள், செல்வந்தர்கள், உயர்பதவிகளில் வீற்றிருப்போர் என வேறுபாடு பல இருப்பினும், சிந்தனைச் சிதறலின்றி 
"தமிழ் மொழி என்தாய் மொழி,
தமிழ் இனம்  எனது இனம் "
என்ற ஒற்றை இலக்கோடு, ஆங்கிலம் அரசாட்சி செய்யும் நாட்டில், "தமிழனாய் வாழ்வோம், தமிழால் இணைவோம்"  என்ற முழக்கத்தைப் பறைகொட்டி, பேரணி நடத்திக் காட்டி விட்டனர்!

தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் கலாச்சார உடையணிந்து நடனமாடி, கும்மியடித்து, முளைப்பாரி ஏந்தி, சிலம்பாட்டம், புலியாட்டம் இடம் பெற, "தமிழண்டா "என்று  நடிகர் திலகம் சிவாஜியைப் போல் சிம்மக்குரல் எழுப்பி, விண்ணையும் மண்ணையும் தமிழ் மணக்கச் செய்து விட்டனர்.

காட்சி காண வந்து கலந்திட்ட அமெரிக்க ஆங்கிலேயர்தமை தமிழர்கள் கூட்டம் அதிரவைத்து, ஆச்சிரியத்தில் மூழ்க வைத்து விட்டது.  செம்புலப் பெயனீரென, தமிழ் நெஞ்சங்கள் இனிதாய் கலந்து, ஒற்றையினப் பெருந்திரளாய் திரண்டனர்; எதிர்கொண்டவர்கள் மகிழ்ச்சியால் மருண்டனர் காணும் பேறு, பிறவிப்பயன் என! 

தமிழர்களின் பேருணர்ச்சி, விண்ணைப் பிளந்து, மண்ணை அகழ்ந்து, "மெல்லத் தமிழினிச் சாகாது வெல்லத் தமிழினி வாழும் " என்ற நம்பிக்கை விதையையும் விதைத்து விட்டது. தென்மதுரை, கபாடபுரம், வடமதுரை முத்தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் ஆழிப்பேரழிவுக்கு இரையாயின.         முச்சங்கம் அழிந்தால் என்ன, முன்னூறுக்கு மேற்பட்ட சங்கங்கள் அந்நிய மண்ணில் முளைத்தோங்கிவிட்டன.   
 தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி; இது தமிழ்நாட்டில்!  தமிழனுக்கு தமிழவரோடு, வேற்று நாட்டவர் யாவருமே உறவு; இது அமெரிக்க நாட்டில்!        அமெரிக்க வாழ் தமிழர்களில் எட்டப்பர்கள், எடுபிடிகள், அடிவருடிகள் இல்லை. நாம் யார்க்கும் அடிமை இல்லை எமனை அஞ்சோம் என்று வஞ்சகம் தவிர்த்து, நெஞ்சகம் நிமிர்த்தி வாழ்கின்றனர். 

இந்த உணர்வு எப்படி வந்தது, யார் உருவாக்கியது ?

உலகத்தின் எந்த மூலையிலும் தமிழினம் படுகொலைக்கு ஆளாகக் கூடாது என்று முன்னெச்சரிக்கைச் செய்யும் முகத்தான், ஈழத் தமிழர்கள் பாடை சுமந்து பேரணியில் வந்த காட்சிநெஞ்சை நெகிழ வைத்துவிட்டது.
"போராளிகள் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டிருக்கிறார்கள்"
ஆய்வுக் கட்டுரைகள் பற்றி அடுத்து எழுதுகிறேன்.

தஞ்சாவூர்,
தமிழறிஞர்

மற்றுமோர் கண்ணோட்டம் - விழா பொறுப்பாளரில் ஒருவர்
 வட  அமெரிக்கத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் தமிழுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தோம்!

சிகாகோ! சிகாகோ தான்! அமெரிக்க மண்ணில் புலம் பெயர் தமிழரின் முதல் தமிழ்ச்  சங்கத்தின் முத்தாய்ப்பான 50 வது ஆண்டு நிகழ்ச்சி!

உலகமே வியக்கும் வண்ணம் மழலையர், மங்கையர், இளையோர், முதியோர்,  அறிஞர், கலைத்துறை, தொழிற்துறையில் பொருள் ஈட்டும் வல்லுநர்கள் என்று அனைவரும் ஒன்று கூடிய திறமைகள் பொங்கி வழிந்தன!  நான்கு நாட்கள் மகிழ்ந்தோம்!

அனைத்துத் தமிழ்ச்சங்கங்கள், உலகெங்கும் இருந்து வந்த தமிழ் அறிஞர்கள். ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மகிழ்வுடன் கூடினோம். புகழ் பாடினோம். பெருமை சேர்த்தோம், தமிழுக்கு!

அனைத்தையும் அமைப்புகளையும் சேர்த்தணைத்தது வட அமெரிக்கத் தமிழ்ச்  சங்கப் பேரவை, விழா பொறுப்பேற்றுக் கொண்டது சிகாகோ தமிழ்ச்சங்கம், தமிழன்புடனே அனுமதி அளித்திட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், உலகத்தொழில் முனைவோர் அமைப்பு உடன் சேர்ந்தது, எவர் அழைப்புமின்றி இணைந்து கடுமையாக உழைத்த தன்னார்வத் தொண்டர்படை (தமிழுலகு காணா வரலாற்று நிகழ்வு) இணைந்து முப்பெரு விழாதன்னை மாபெரும் வெற்றிச் செயலாக்கிக் உலகத்தமிழருக்குக் காட்டி விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com