Enable Javscript for better performance
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஒன்பதாம்  தமிழ் அமர்வு- Dinamani

சுடச்சுட

  

  தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஒன்பதாம்  தமிழ் அமர்வு

  By இரமேஷ் பரமசிவம்  |   Published on : 02nd May 2019 02:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  group1

   

  தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் அமர்வின் ஒன்பதாம்அமர்வு தைபே (Taipei) நகரில் உள்ள தேசிய தைவான் பல்கலைகழகத்தில் (National Taiwan University) சிறப்பாக நடைபெற்றது. முனைவர். திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.

  தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைகள்:
  நிகழ்ச்சியின்தொடக்கமாக''தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைகள்" என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி கே. திலகவதி அவர்கள் காணொளி வழியாக நேரிடையாக சிறப்புரையாற்றினார்.

  ‘ஒல்காப்புகழ் கொண்ட தொல்கப்பியம்’ ஒரு மிகச்சிறந்த அறிவியல் நூல் எனவும் தொல்காப்பியர் ஒரு மொழியியல் அறிஞர் மட்டுமல்ல அவர் ஒரு அறிவியல் அறிஞர் எனவும் கூறி தொல்காப்பியத்தின் பகுப்புகளை விவரித்து கூறினார்.

  தொல்காப்பியர் மனித வாழ்வியலுக்கு தேவையானவற்றை மூன்றே விடயங்களாக கூறியுள்ளார். அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.  முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும், அவற்றைப்பற்றி தொல்காப்பியர், “மாயோன் மேய காடுறை உலகமும் , சேயோன் மேய மயில்வரை உலகமும், வேந்தன் மேய பெருமணல் உலகமும்” என்ற பாடல் மூலம் விளக்கியுள்ளார். அதாவது இவ்வுலகம் காடும் காடும் , வயலும் வயலும், நீரும் நீரும் சார்ந்ததாக உள்ளதையே 3000 ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார். கருப்பொருள் பற்றி "தெய்வம், உணா, மா, மரம், புள் " எனத்தொடங்கும் பாடல் மூலம் விளக்கியுள்ளார். உரிப்பொருளில் மனித ஒழுக்கத்தை பற்றி "புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்" எனத்தொடங்கும் பாடல் மூலம் அழகாக விளக்கியுள்ளார். 
  உலக இயக்கம் பற்றி தொல்காப்பியர் இவ்வுலகம்  ஐம்பூதங்களால் ஆகி எவ்வாறு இயங்குகிறது என்பதை "நிலம், நீர், தீ,வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த உலகமாதலின்" என்ற நூற்பா மூலம் கூறியுள்ளார். மேலும் பல்வேறு நூற்பாக்கள் மூலம்  எண்ணுவியல் கணிதவியல், விண்வெளியியல் , சூழ்நிலையியல் போன்ற அறிவியல் கூறுகளை அழகாக எடுத்துரைத்துள்ளார். 

  மிக முக்கியமாக தமிழர் நாகரிகத்தை மலர் நாகரிகம் என்பார்கள். தமிழனின் மங்கள, அமங்கள மற்றும் எந்த நிகழ்வாகினும் மலர்கள் முக்கிய இடம்பெறும். அத்தகைய மலர் நாகரிகம் பற்றி பல்வேறு பாக்கள் மூலம்  விளக்கியுள்ளார். குழந்தையின்மை மற்றும் அதற்கு தீர்வாக "காட்சி, வேட்கை, உள்ளுதல், காமம் செப்பல்" என்ற நூற்பா மூலம் விளக்கியுள்ளார்.  இயற்கை மருத்துவம் பற்றி "வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடும்பும் போல எம்சொல் வெஞ்சொல் தாங்குதலின்றி" என்ற நூற்பா மூலம் விளக்கியுள்ளார். மேலும் பல்வேறு நூற்பாக்கள் எடுத்துக்கூறி, அதன் மூலம் தொல்காப்பியர் ஒரு மிகசிறந்த அறிவியல் அறிஞர் என்பதை அழகுற விவரித்தார்.

  தமிழ் கொரிய நாட்டுப்புற பழக்க வழக்கங்களின் ஒப்பீடு:
  இரண்டாவதாக கொரிய வாழ் தமிழர் முனைவர். சுரேஷ்குமார் மந்திரியப்பன் அவர்கள் “தமிழ் கொரிய நாட்டுப்புற பழக்க வழக்கங்களின் ஒப்பீடு”என்ற தலைப்பில் பேசினார். ஒரு மொழி உருவாகும் முன்னே முதலில் ஒலி உருவாக்கம் அவசியம். அவ்வாறாக பல்வேறு கொரிய வார்த்தைகளின் ஒலி நம் தமிழ் வார்த்தைகளின் ஒலியோடு இணைந்து செல்வதை கொக்கரக்கோ - கொக்கிக்கோ போன்ற வார்த்தைகளின் மூலம் அறியலாம்.  கொரியர்களின் பூர்விகம்  பற்றிய ஆய்வாளர் அல்பெர்ட் அவர்களின் கூற்றுப்படி தென் கொரியர்களின் பல்வேறு பழக்க வழக்கங்கள் தென் இந்தியாவின் பழக்க வழக்கங்களோடு ஒத்துப்போகின்றன. 

  எடுத்துக்காட்டாக இன்றளவும் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் பகுதிகளில் உள்ள காளைச்சண்டை கொரியாவில் மிகப்பிரபலம். மேலும், நம் பொங்கல் பண்டிகையில் மாட்டிற்கு படைத்தல் மற்றும் மாட்டு பொம்மைகள் செய்து வணங்குதல், கும்மி பாட்டு - காங்காங், சாங்கு- கேரளாவின் இடக்கை (உடுக்கை போன்ற பெரியது), பொங்கல் பண்டிகையின் புது தாணியப்படையல் கொரியாவின் - புது தாணியப்படையல் போன்றவற்றின் மூலம் தென் கொரியர்களின் பல்வேறு பழக்க வழக்கங்கள் தென் இந்தியாவின் பழக்க வழக்கங்களோடு ஒத்துப்போவதை அறியலாம். தட்டான்கள், புனலாடல் அல்லது நீராடல் - கொரியாவின் தாலோ பண்டிகை, கயிறுமேல் நடத்தல், இளவட்டக்கல் தூக்குதல், முழுநிலவு கொண்டாட்டம், காக்கைசோறு அளித்தல் (பித்ரு), எல்லைச்சாமி, கல்திட்டு அமைத்தல், புதுமனை புகுவிழா, தீமை சக்திக்கெதிராக கரியை பயன்படுத்துதல், முறப்பயன்பாடு, மிளகாய்-எலுமிச்சை தோரணம் கட்டுதல், வசம்பு பயன்பாடு போன்றவை தமிழர்களின்பழக்க வழக்கங்களோடு ஒத்துப்போகின்றன என்று சிறப்பாக எளிமையாக விவரித்தார்.  


  கிளிபாட்டி:
  திரு விவேகாந‌ந்தன் அவர்கள் "கிளிபாட்டி" என்ற தலைப்பில் பேசினார். அவர் தனது உரையின் தொடக்கமாக கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்/ பாடலில் வரும் மற்றொரு வரியில்  "திறவோர் கட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே" என தமிழரின் வாழ்வியலை அழகாக எடுத்துரைத்துள்ளார். அத்தகைய அழகான வாழ்வியலை வாழும்  "கிளிப்பாட்டி" என்ற கதையின்  மூலம் அழகாக எடுத்துரைத்தார்.  ''தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'' என்ற குறளிற்கேற்ப கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாக இருந்தாள் என பேசி முடித்தார்.

  தமிழனின் வாழ்வியல் விழுமியங்கள்:
  முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் திரு. டேவிட் அச்சுதர் பேசுகையில் ஈன்றெடுத்த தாயையும் தாய் மொழி தமிழையும் வணங்கி “தமிழனின் வாழ்வியல் விழுமியங்கள்” என்ற தலைப்பில் புறநானூறு குறுந்தொகை மற்றும் பல சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி பேசினார். விழுமியம் என்றால் என்ன?  விழுமியம் என்பது தனிநபர் சமூக வாழ்க்கையை வளப்படுத்துகின்ற அர்த்தமுள்ளதாக்குகின்ற மனித குணப்பண்பாகும். மனிதனது செயலுக்கு வழிவகுக்குகின்ற விழுமியங்கள் மனிதத்தன்மையினுள் நிலவுகின்ற இயற்கையின் விடயமாகும் என்றார்.

  அவர் மேலும் தன் உரையில், வாழ்க்கையில் குறிக்கோள் வேண்டும், அதனை நோக்கி முற்பட வேண்டும், தோற்றே போனாலும் கவலையில்லை முயல் வேட்டையாடி மனம் துவண்டு போவதைவிட, யானையை வேட்டையாடி தோற்றுப் போவது மேல், இதனையே வள்ளுவர் "காண முயலெய்த" எனத்தொடங்கும் குரல் மூலம் ஓங்கி ஒலிக்கிறார். இவ்வுலகில் நிலைபெற வாழ வேண்டும் என்று எண்ணியவர்கள் தம் புகழினை நிலைக்கக் கூடிய வகையில் சில சிறந்த செயல்களை மட்டுமே செய்துவிட்டு மாண்டு போனார்கள் என பெருந்தலைச் சாத்தனார் "மன்னா வுலகத்து மன்னுதல்" எனத்தொடங்கும் பாடல் மூலம் விளக்கியுள்ளார்.

  ஒன்றை கற்றுக்கொள்வது சுலபம் கற்றலின் வழி நடப்பது சிரமம் “மனிதப்பிறவியும் வேண்டுவதே, “அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பார் அறிவிற்ச்  சிறந்த ஒளவை பிராட்டியர். “எப்படியாவது வாழலாம் என விடுத்து இப்படித்தான் வாழ வேண்டும்” என்று மனதிற்கு உறுதி மேற்கொண்டு, அதனை செயலில் நடத்தி காட்டுதல் வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர். இவ்வுலகில் பிறந்துவிட்டால் ஒருநாள் சாதல் வேண்டும் என்பது உறுதி, அது ஒன்றும் புதிய நடைமுறையல்ல. மின்னுகின்ற மேகம் குளிர்ந்த மழையை பொழிந்து, அம்மழை நீர் கற்களை புரட்டிக் கொண்டு ஆற்று நீரின் போக்கிலே செல்லும் ஓடம் போன்று ஆருயிர்கள் ஊழின் போக்கிலேயே செல்லும் என்பது வாழ்க்கையில் அனுபவப்பட்ட நம் முன்னோர்கள் கண்ட உண்மையாகும் என பேசி முடித்தார். 

  இந்நிகழ்ச்சியில் தைவானில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் பலரும், தைவான் தமிழ் சங்க நிர்வாகிகள் மற்றும் முனைவர்பட்ட ஆராய்ச்சி தமிழ் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai