ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் காளை, காளையர்கள்

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழகரசு அனுமதி அளித்தது.
ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் காளை, காளையர்கள்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிகழாண்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழகரசு அனுமதி அளித்தது.

மாட்டுப் பொங்கல் தினத்தன்று திருச்சி பெரிய சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி பெரும் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் முதல் போட்டி என்பதால் அப்பகுதியில் உள்ள குளத்தில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொக்ளின் எந்திரத்தின் உதவியுடன் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சவுக்கு கட்டைகளால் பார்வையாளர்கள் மாடம், தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த போட்டியில் கலந்துக்கொள்ள திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காளை, காளையர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் சரத் கூறுகையில், 

ஜல்லிக்கட்டு போட்டிக்காக காலை மாலை இருவேளையும் காளைக்கு நீச்சல் பயிற்சி, ஓடுதல் பயிற்சி, மண் குத்தல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.200 தீவனத்திற்கு ஆகும் செலவு ஜல்லிக்கட்டுக்காக ரூ.400 வரை செலவு செய்யப்பட்டு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் காளை ஒன்றுக்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்திருப்பது மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனென்றால் ஒரு சில காளைகள் திமிருடன் அடங்க மறுக்கும். இதனால் வாடிவாசலுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே கூடுதலாக ஒருவரை அழைத்துச்செல்ல அரசு அனுமதிக்க வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளை வளர்ப்போர் மற்றும் வீரர்களுக்கு கரோனா பரிசோதனையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

பயிற்சி குறித்து விக்னேஷ் கூறுகையில்,

மாடுபிடி கலை என்பது தனியாக வந்துவிடுவதில்லை. மாடு வளர்ப்போரிடம் துணையாக இருந்து மாடுகளை பராமரிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்கிறோன். ஜல்லிக்கட்டு மாடுகளுக்குப் பயிற்சி அளிக்கும்போதே, நாங்களும் பயிற்சி பெறுகிறோம். மாடுகளை குளத்தில் வீட்டு நீச்சல் அடிக்க வைக்கும்போதே நாங்களும் நீச்சல் அடிக்கிறோம். மாடு ஓடும் போது நாங்களும் ஓடுகிறோம். இப்படி ஒரே நேரத்தில், மாடு, மனிதர்களுக்கு இணைந்து பயிற்சி பெறுவதுதான், மாடுபிடி வீரராக உருவாக முடியும். அது இயல்பான நிகழ்வாக உள்ளதால், மாடுபிடி வீரர்கள் என்பவர்களுக்கு தனியாகப் பயிற்சி கொடுத்து உருவாக்க முடியாது.

பச்சைக் குதிரை போன்றவை தாண்டும் பயிற்சிகளைச் செய்வது, மாடுகளின் மேல் ஏறுவதற்கான லாவகம் பெற வேண்டும் என்பதற்குத்தான். மாடு வாடிவாசலில் இருந்து வரும்போதே, நொடிக்குள், துள்ளிக் குதித்து அதன் திமிலை பிடிக்கவேண்டும். அதற்கு தயாராக வேண்டும் எனில், ஒருவரைக் குனியவைத்து பச்சைக் குதிரை தாண்டும் பயிற்சிகள் செய்கிறோம். அதேபோல் கால் மூட்டு உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒருவரை, ஒருவர் தோளில் சுமந்து கொண்டு வேகமாக ஓடிப் பழகுகிறோம்.

இதுதவிர கயிறு ஏறுவது, மரம் ஏறுவது போன்ற பயிற்சிகள் நமது புஜத்தையும், கைகளையும் வலுவாக்கும். இது மாடு பிடிக்கும் போது நமக்கு வலுவாக இருக்கும். இதுபோன்ற கடுமையான பயிற்சிகளைச் செய்து உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தால்தான் மாடு அணைக்க முடியும். மாடு பிடிக்கும் நாள்களில் மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொங்கலுக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே விரதம் மேற்கொண்டு வருகிறோம். இந்த பயிற்சிகள் எல்லாவற்றையும் இளம் தலைமுறை மாடுபிடி வீரர்களுக்கு மூத்த மாடுபிடி வீரர்கள் பயிற்சி அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் என்றனர்.

கடுமையான பயிற்சிகளுக்குப் பின்னரே ஜல்லிக்கட்டு மாடு தயாராகிறது. அதற்கு இணையான உழைப்பு, பயிற்சியுடன் மாடுபிடி வீரர்கள் தயாராகின்றனர். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com