வண்ணம் பொங்கும் பொங்கல் கோலங்கள்

தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாக கோலமிடுதல் உள்ளது. மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலமிடுவது பெண்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
வண்ணம் பொங்கும் பொங்கல் கோலங்கள்!
வண்ணம் பொங்கும் பொங்கல் கோலங்கள்!

தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாக கோலமிடுதல் உள்ளது. மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலமிடுவது பெண்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். அதன் உச்சமாக பொங்கல் திருநாளில் வீட்டின் முற்றம் மட்டுமன்றி அறைகளிலும் அழகழகு கோலமிட்டு பெண்கள் தங்களது பெருமையை கூடுதலாக்கிக் கொள்கிறார்கள்.

கோலங்களின் நன்மைகள்: கம்பிக்கோலம், பாம்புக் கோலம், தாமரைக் கோலம், புள்ளிக் கோலங்கள், நேர்ப்புள்ளிக் கோலங்கள், தொட்டில் கோலம், புள்ளிகளிடையே வரையும் கோலம், ஊடுபுள்ளிக் கோலங்கள் என கோலங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. 5 வயதை கடக்கும்போது கோலமிடப் பழகும் சிறுமிகள், 90 வயது முதுமையிலும் தங்களது வீ்ட்டின் முற்றத்தில் ஆர்வத்தோடு கோலமிடுகிறார்கள்.

கோலங்கள் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிவோம்:  இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு அடையாளமாக வீட்டின் முன் மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். மாவிலையில் ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால் சுபநிகழ்ச்சி நடக்கும் இல்லத்துக்கு ஸ்ரீமகாலஷ்மியும் முக்கிய விருந்தினராக வர வேண்டும் என்பதற்கு அழைப்புதான் மாவிலைத் தோரணம். அதுபோலவே கோலங்களும்.

ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும். மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். மார்கழி மாத பனிக்காற்று மருத்துவக்குணம் கொண்டது. ஓசோனின் காற்று உடலில்பட்டால், அதிகாலைவேளை, பிரம்ம முகூர்த்தம் காற்று நன்மை என்பதாலும் கோலம் வரையும் மாதமாக இந்த மார்கழி மாதம் இருக்கிறது. 

அத்துடன் மார்கழி மாதத்தில் அநேகமாக சுபநிகழ்ச்சிகள் செய்யாமல் இருப்பார்கள். அதனால் சுபசின்னமான கோலங்களை வீட்டின் வாசலுக்கு முன் பதிக்க வேண்டும். அப்படி செய்வதால் அடுத்து வருகிற தை மாதத்தில் அந்த குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அப்படி சுபநிகழ்ச்சிகள் செய்யும்போது தடையேதும் ஏற்படாமல் இருக்க ஸ்ரீமகாலஷ்மி அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

மார்கழி மாதம் என்று மட்டுமல்லாமல் எல்லா நாள்களிலும் கோலம் போடும் போதும், கோலங்களுக்கு மும்மூர்த்திகளின் அருளாசி கிடைக்கச் செய்யும் மகிமையும் இருக்கிறது. அது எப்படியென்றால், கோலமாவின் நிறம் வெண்மை. இது பிரம்மாவை அழைக்கிறது. கோலம் போட்டபிறகு அந்த கோலத்தை சுற்றி காவி நிறமான செம்மை நிறத்தை வரையும்போது அது சிவபெருமானை அழைக்கிறது. கோலம் போட்டு முடித்தபிறகு அந்த கோலத்திற்கு அழகு சேர்ப்பதற்காக பசுஞ்சாணத்தை வைத்து அதில் மஞ்சள் நிறத்தில் பூசணிப்பூவை வைப்பார்கள். பசுவின் சாணம் ஸ்ரீமகாலஷ்மியை குறிப்பிடுவதால், ஸ்ரீமகாவிஷ்ணுவையும் அந்த இல்லத்தினுள் அழைக்கிறது. இதனால் இப்படி மும்மூர்த்திகளின் அருளாசியும் நமக்கு கிடைக்கிறது. பசு சாணமும் பூசணிப்பூவும் தினமும் கிடைக்காதபோது, சாதாரண கோலமாவுக்கு பதிலாக பச்சரிசிமாவில் கோலம் போட்டால் மும்மூர்த்திகளின் ஆசி இன்னும் சிறப்பாக கிடைக்கும். நம் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்க, நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியதுதான் கோலங்கள்.

கோலங்களில் தேவை கவனம்:  கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும். ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம். தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது. பொதுவாக தெய்வங்களின் சின்னங்களை வீட்டின் வாசலில் கோலமாக போடக்கூடாது. காரணம் அந்த கோலங்களை யாராவது தெரியாமல் மிதித்துவிட்டாலும் பாவம் சேரும். அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்கும் தோஷம் ஏற்படும். இறைவனின் சக்கர சின்னங்களை பூஜை அறையில் மட்டும்தான் கோலமாக போட வேண்டும். வாசலில் போடக்கூடாது. வெள்ளிகிழமையிலும் பவுர்ணமி தினங்களிலும் தாமரைபூகோலம் போட்டால் இந்த இல்லத்திற்கு ஸ்ரீலஷ்மிவாசம் கிடைக்கும். தினமும் கோலம் போடும்போது, காவி நிறத்தை அதாவது செம்மை நிறத்தை அந்த கோலத்தை சுற்றி பார்டராக போடமுடியாவிட்டாலும், செவ்வாய்கிழமைகளில் கோலம் போட்ட பிறகு அந்த கோலத்தை சுற்றி காவி கட்டினால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் வீட்டில் தினமும் அழகழகான கோலம் போடுங்கள், அந்த கோலத்தை கலைத்து விளையாட ஒரு மழலை பிறக்கும் என்பது நம் முன்னோர் வாக்கு.

அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. காரணம் அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும். அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, அவர்களை வீட்டினுள் அனுமதித்து ஆசி பெறுவது நல்லது. தினமும் முடிந்தளவு அந்த வீட்டின் இல்லத்தரசியே தலைவாசலில் கோலம் போடுவது நன்மை. அத்துடன் பூஜையறையிலும் அல்லது சுவாமி படத்தின் முன்பாகவும் கண்டிப்பாக கோலம் போடவேண்டும். தினமும் அரிசிமாவில் கோலம் போட்டால், நம்மை அறியாமலே பல புண்ணியங்கள் தேடிவரும் என்பது ஐதீகம்.

பொங்கல் கோலங்கள்: பொங்கல் திருநாளையொட்டி வீட்டின் முற்றத்தில் சுண்ணாம்பு கொண்டு வரையும் கோலம் கிராமங்களில் (நகர்ப்புறங்களுக்கும் வந்தாச்சு) மிகவும் பிரசித்தம். பொங்கலிடும் முற்றம் முழவதும் இந்தக் கோலத்தைத் தீட்டி வாயிலின் முன்பு பொங்கல் வாழ்த்துகள் என எழுதி வைக்கிறார்கள். வீட்டின் அறைகளில் இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ப வண்ண, வண்ண பெயிண்ட்களால் கோலம் வரைகிறார்கள். அதையும் சுலபமாக்கும் வகையில் நகரங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆயத்த நிலையில் ஸ்டிக்கர் கோலங்கள் வந்துவிட்டன. பல்வேறு வண்ணங்களில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் இவற்றை வாங்கி வீட்டின் பூஜையறை, வரவேற்பறை, படுக்கையறைகளில் ஒட்டி பெண்கள் அழகு சேர்க்கிறார்கள்.

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com