பொங்கல்: சக்கரமாக சுழலும் நாமக்கல்

பொங்கல் பண்டிகையின் சிறப்புகளான புதுப்பானை, சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான வெல்லம் மற்றும் கரும்பு என அனைத்தும் நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படுவதால், பொங்கல் பண்டிகையின் நாயகனாக நாமக்கல் விளங்குகிற
பொங்கல் பண்டிகை: சக்கரமாக சுழலும் நாமக்கல்
பொங்கல் பண்டிகை: சக்கரமாக சுழலும் நாமக்கல்

பொங்கல் பண்டிகையின் சிறப்புகளான புதுப்பானை, சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான வெல்லம் மற்றும் கரும்பு என அனைத்தும் நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படுவதால், பொங்கல் பண்டிகையின் நாயகனாக நாமக்கல் விளங்குகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உருண்டை வெல்லம், மண்பானை உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கான கரும்பு அறுவடை பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதியில் பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடுவர். இப்பண்டிகையில் முக்கியமாக இடம் பெறுவது கரும்பு, வெல்லம், பொங்கல் வைப்பதற்கான மண்பானை உள்ளிட்டவையே. சூரிய பொங்கலை தொடர்ந்து, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து விழாக்கள் வரும். இதனால் பானை, வெல்லம், கரும்பு, பனங்கிழங்கு போன்றவற்றின் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் இருக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், பள்ளிபாளையம், பரமத்திவேலூர் பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இதில் ஆலை அரவைக்கு செல்லும் கரும்பு 10 ஆயிரம் ஏக்கரிலும், வெல்லம் தயாரிப்புக்காக 15 ஆயிரம் ஏக்கரிலும் விளைவிக்கப்படுகிறது. இவை தவிர்த்து 10 ஆயிரம் ஏக்கரில் பொங்கல் மற்றும் விழாக் காலங்களில் விற்பனை செய்யப்படும் செங்கரும்பு விளைவிக்கப்படுகிறது. பொங்கல் நெருங்குவதால் அவற்றை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கரும்பு விவசாயி சரவணன் கூறியதாவது; காவிரி ஆற்றுப்பாசனம் உள்ள மோகனூர், பள்ளிபாளையம், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம் மற்றும் காரவள்ளி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் அவை அனுப்பி வைக்கப்படும். ஒரு கரும்பு ரூ.60 வரையில் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் செலவினம் போக ரூ.20 வரை லாபம் கிடைக்கும் என்றார்.    

 பொங்கல் பானைகள்: நாமக்கல், அலங்காநத்தம், நாமகிரிப்பேட்டை, பெருமாப்பட்டி, தூசூர், போடிநாயக்கன்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, வளையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுச்சத்திரம் அருகே ஏளூர் கிராமத்தில் இருந்து களிமண் கட்டிகளை கொள்முதல் செய்து அவற்றை உடைத்து, தூளாக்கி பசை போன்ற பதத்திற்கு வரும் வகையில் தயார் செய்கின்றனர்.  ஒரு நாள் பதப்படுத்தி வைக்கப்படும் இந்த  மண் கலவையை உருவாக்கி அதற்கென உள்ள இயந்திரத்தில் சுழலவிட்டு பானையை தயாரிக்கின்றனர். அதன்பின் வெயிலில் உலர வைத்தும்,  நெருப்பில் சுட்டும், தேவையான  வர்ணங்களை பூசியும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அவை நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

போடிநாயக்கன்பட்டியில் தயாராகும் பொங்கல் பானைகள்.
போடிநாயக்கன்பட்டியில் தயாராகும் பொங்கல் பானைகள்.

போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி சிவசாமி கூறியது: இங்கு தயாராகும் பானைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. ஒரு பானையை தயாரிக்க 30 நிமிடங்களாகும். தினசரி 30முதல் 50 பானைகளை தயாரித்து வருகிறோம். பொங்கல் நெருங்குவதால் உற்பத்தியை சற்று அதிகரித்துள்ளோம். ஒரு படி அளவு கொண்ட பானை ரூ.75–க்கும், இரண்டு படி அளவு பானை ரூ.100–க்கும், மூன்று படி பானை ரூ.150–க்கும், ஐந்து படி பானை ரூ.250 என்ற விலைக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வேளாண் தொழில் சிறப்புடன் இருந்தால் பானைகள் விற்பனையும் அதிகப்படியாக நடைபெறும். கரோனாவையெல்லாம் கடந்து, வரும் பொங்கல் பண்டிகைக்கான விற்பனை நல்ல முறையில் இருக்கும்  என எதிர்பாக்கிறோம் என்றார். 

உருண்டை வெல்லம்: பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யும் 150  ஆலைகள் உள்ளன. ஆலை அரவைக்கு பயன்படுத்தப்படும் கரும்பை கொள்முதல் செய்து அதன் மூலம் நாட்டுச் சர்க்கரை,  அச்சு வெல்லம், உருண்டை வெல்லம்  உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் உற்பத்தி வழக்கத்தைக் காட்டிலும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி,  பிலிக்கல்பாளையம் வெல்ல ஆலை ஒன்றில் தயாராகும் உருண்டை வெல்லம்.   
பொங்கல் பண்டிகையையொட்டி,  பிலிக்கல்பாளையம் வெல்ல ஆலை ஒன்றில் தயாராகும் உருண்டை வெல்லம்.   

பரமத்திவேலூர் வட்ட கரும்பு வெல்லம் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஆர்.நடராஜன் கூறியதாவது; ஒவ்வொரு ஆலையிலும் நாள் ஒன்றுக்கு 900 கிலோ அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் 150 வெல்ல ஆலைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வழக்கத்தைக் காட்டிலும் சற்று உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. 30 கிலோ சிப்பம் கொண்ட உருண்டை வெல்லம் ரூ.1150–க்கும், அச்சசு வெல்லம் ரூ.1200–க்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. போதிய வேலையாள்கள் கிடைக்காததால் உற்பத்தி தாமதமாகிறது. கரும்பை அரவை செய்து, அதற்கான கொப்பரையில் கொட்டி கொதிக்க வைத்து உருண்டை வெல்லமாக உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் 3 மணி நேரமாகும். பொங்கல் பரிசு தொகுப்புடன் சர்க்கரை வழங்கும் அரசு, உருண்டை வெல்லத்தை வழங்கினால் வெல்ல ஆலை உரிமையார்கள் ஓரளவு வருவாயை ஈட்ட முடியும். நிகழாண்டில் இல்லாதபோதும், இனி வரும் ஆண்டுகளிலாவது உருண்டை வெல்லத்தையோ, அச்சு வெல்லத்தையோ  விநியோகிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

வண்ணக் கோலப்பொடிகள், கோலமிடும் சாதனங்கள் விற்பனை: பொங்கல் பண்டிகையன்று வீடுகளின் முன்பாக பெண்கள் பல வண்ண கோலங்களை இடுவர்.


புள்ளி வைத்து கோலம் போடுவதற்கு நீண்ட நேரமாகும் என்பதால் தற்போது பலரும் கோலமிடும் சாதனங்களை வாங்கி, அதன்மீது பொடியை தூவி வண்ணக் கோலங்களை அலங்கரிக்கின்றனர். அந்த வகையில், நாமக்கல் நகரப் பகுதியில் வண்ணக் கோலப் பொடிகள் பாக்கெட்டுகளாகவும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்யப்படு வருகிறது. இவை தவிர சாதனங்கள் ரூ.10 முதல் ரூ.200 வரையில் உள்ளன.

சிறுமியர், பெரியோர் கோலமிடும் வகையில் சாதனங்கள் உள்ளன. பண்டிகை நெருங்குவதால் அவற்றின் விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com