பொங்கலுக்கெனத்  தயாரிக்கப்படும் மண்பானைகள்

தமிழர் வாழ்வில் பாரம்பரிய இடத்தை பிடித்துள்ளது மண்பாண்டம். பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய வழக்கப்படி மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவதற்காக
மண் பானைகள்
மண் பானைகள்

தமிழர் வாழ்வில் பாரம்பரிய இடத்தை பிடித்துள்ளது மண்பாண்டம். பொங்கல் திருநாளின்போது பாரம்பரிய வழக்கப்படி மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவதற்காக பொங்கல்பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் தயார் செய்துள்ள  மண்பாண்டங்களை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துள்ளனர்.

தமிழரின் பாரம்பரிய விழாக்கள் பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டியே கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் தேசியக்கவிஞர் சுப்பிரமண்ய பாரதியார், அனைத்து தரப்பினரும் உழவர்களுக்கு பின்னால் தான் என திருவள்ளுவர் உழவே தலை என சிறப்பிக்கிறார்.

தமிழ்நாட்டில் சித்திரை மாதம் தமிழ்ப்புத்தாண்டு, சித்திரை திருவிழாக்கள், கார்த்திகை மாதம் தீபத்திருவிழா, தை மாதம் பொங்கல் திருவிழா என சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை மாதம் தீபத்திருவிழாவின் போது தீபம் ஏற்றிவைக்க மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகள் தயார் செய்யப்படுகின்றன. பொங்கல் விழாவின் போது மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மண்பாண்டங்கள் தயாரிக்க தேவையான களிமண்ணை அரசு அனுமதியுடன் ஏரிகளில் இருந்து எடுத்து வந்து பக்குவப்படுத்தி மண்பாண்டங்கள் தயாரிக்கின்றனர்.

பொங்கல்பண்டிகை என்பது உறவுகளுடன் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் விழா. இந்த விழா பாரம்பரிய நாகரீகத்தையும் பாரம்பரிய வழக்கத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. பெரும்பொங்கல் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப சூரியபகவானுக்கு பொங்கலிட்டும், உழவுக்கு உழைக்கும் மாடுகளுக்கு பூஜை செய்தும் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதும், உறவுகளை மேம்படுத்த கனுப்பிடிபொங்கல் என காணும் பொங்கல் என கொண்டாடி மகிழ்வர்.

விற்பனைக்கு தயாராகும் பொங்கல் பானைகள்

தமிழர் வாழ்வில் பாரம்பரிய இடத்தைப் பிடித்துள்ளது மண் பாண்டம். குறிப்பாக, பொங்கல் பண்டிகையின் போது மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழரின் பாரம்பரிய வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மண்பானைகள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மானாமதுரை, தருமபுரி, வந்தவாசி, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மண்பாண்டத் தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணி, மாமல்லபுரம், பூஞ்சேரி, திருக்கழுக்குன்றம், சிதண்டிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோர் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மண்ணைக் கொண்டு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் கூடுதல் தரத்துடனும், தனித்தன்மையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செங்கல்பட்டு சிதண்டி மண்டபத்தில் உள்ள மண்பாண்ட குயவர் அமுதா சம்பத் கூறியது, ஏரிகளில் தமிழக அரசு அனுமதி அளித்ததால் நாங்கள் ஏரிகளில் மண் எடுத்து அதைப் பயன்படுத்தி வருகிறோம். சிதண்டி மண்டபம் என்றாலே மண்பாண்ட குயவர் பகுதி என்ற பெயர் உண்டு. நாங்கள் அனைத்து விதமான மண்பாண்டங்களை செய்து விற்பனை செய்கிறோம். கார்த்திகை தீப திருநாளுக்காக மண் அகல்கள், போகி மேளத்துக்காக கந்திரி எனப்படும் வட்டிலும், பொங்கலுக்கு சிறிய பானை முதல் பெரிய பானைகள் வரையும், அடுப்புகளும் தயாரித்து விற்பனைக்காக வைத்துள்ளோம். பொங்கலுக்கு தயாரிக்கப்பட்ட பானைகளை சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள்.

நாகரிக உலகில் அலுமினியம், எவர்சில்வர் உள்ளிட்ட உலோகத்தினால் ஆன பாத்திரங்கள் வந்தாலும், மண்பானையில் பொங்கல் வைப்பதுதான் பாரம்பரியம். பொங்கல் பண்டிகையின் போது அனைத்துத் தரப்பு மக்களும் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவதால், இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடிகிறது. சீசன் தொழிலாக கார்த்திகை தீபம், பொங்கல் பண்டிகை, என தொழிலில் மும்முரம் காட்டுவோம்.

 ஆனால் 2020ம் ஆண்டு பொதுமுடக்கத்தால் சித்திரை திருவிழா, ஆடிமாத திருவிழா காலங்களில் கோயில்களில் பொங்கலிட்டு வழிபடுவார்கள் கோயில்களில் வழிபாடு அனுமதி இல்லாததால் விற்பனைக்காக செய்துவந்தபானைகள் அப்படியே இருந்தது. மேலும் கோடைகாலத்தில் மண்பானைகளில் குடிநீருக்காக தண்ணீர் வைத்து குடிக்க சிறியபானைகள் பெரியபானைகள் என பானைகளை விற்போம் அந்த விற்பனையும் இல்லாமல் அடிப்படை பொருளாதாரத்திற்கே பெரும்சிரமத்திற்குள்ளாகினோம்.

தீபத்திருவிழாவிற்கும் அகல்தீபம் செய்யமுடியாமல் தொடர்மழை பெய்ததால் குறைந்த அளவிற்கே அகல் செய்து விற்பனை செய்தோம். மேலும் இந்த ஆண்டு பொங்கல் பானையும் விற்பனைக் கொஞ்சம் மந்தமாகதான் உள்ளது என்றார்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com