விலையில்லா அகப்பை: பாரம்பரியத்தைக் கைவிடாத தொழிலாளர்கள்

வேங்கராயன்குடிகாடு கிராமத்திலுள்ள ஏறத்தாழ 300 குடும்பங்களுக்கு பொங்கல் திருநாளின்போது விலையில்லாமல் அகப்பை செய்து தருகின்றனர்.
அகப்பைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள்.
அகப்பைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள்.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருவிழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் இப்பொங்கல் விழாவைப் பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது.

நகர்மயமாதல் காரணமாக நகரங்களில் சில்வர் பாத்திரத்தில் பொங்கலிடும் பழக்கம் பரவலாகிவிட்டது. ஆனால், கிராமங்களில் இன்னமும் மண் அடுப்பு, புதுப்பானையில் பொங்கலிடும் வழக்கம்தான் இருந்துவருகிறது. மண் பானையில் பொங்கல் வைக்கும்போது சில்வர் கரண்டியைப் பயன்படுத்தினால், பானை உடைந்துவிட அதிக வாய்ப்புள்ளது. இதுவே அகப்பையைப் பயன்படுத்தினால் உடையாது. 

சில்வர் கரண்டியில் சூடு ஏறும். ஆனால், அகப்பையில் சூடு ஏறாததுடன், எடையும் குறைவாக இருப்பதால் கிளறுவதற்கு வசதியாக இருக்கும். எனவே, மண் பானையில் பொங்கல் வைக்கும்போது அகப்பையே பயன்படுத்தப்படுகிறது.

பொங்கல் திருவிழாவுக்குச் சில நாள்களுக்கு முன்பே பொங்கல் வைப்பதற்குத் தேவையான புதுப்பானை, மண் அடுப்பு, அகப்பை உள்ளிட்ட பொருள்களை வாங்குவர்.

அக்காலத்தில் எல்லாம் விலையில்லாமலும், பண்ட மாற்று முறையிலும் வாங்குவது வழக்கமாக இருந்து வந்தது. பொருளாதார முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இப்போது மண் பானை, அடுப்பு, அகப்பை என எல்லாமே காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகிவிட்டது.

தஞ்சாவூர் அருகேயுள்ள கிராமத்தில் அகப்பையை இப்போதும் பழைய பாரம்பரிய முறைப்படி விலையில்லாமல் செய்து வழங்குகின்றனர் தச்சுத் தொழிலாளர்கள்.

அகப்பைகள் தயாரிக்கும் தொழிலாளர்
அகப்பைகள் தயாரிக்கும் தொழிலாளர்

தஞ்சாவூரிலிருந்து மருங்குளம் செல்லும் சாலையில் நாஞ்சிக்கோட்டைக்கு அருகிலுள்ளது வேங்கராயன்குடிகாடு. இக்கிராமத்தில் தச்சு வேலை செய்யும் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் உள்ளன. வேங்கராயன்குடிகாடு கிராமத்திலுள்ள ஏறத்தாழ 300 குடும்பங்களுக்கு பொங்கல் திருநாளின்போது விலையில்லாமல் அகப்பை செய்து தருகின்றனர்.

பொங்கல் திருநாளன்று பகல் 11 மணியளவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கு ஒரு அகப்பை, வெண் பொங்கலுக்கு ஒரு அகப்பை என இரு அகப்பைகளை வழங்குகின்றனர். இதற்கு பதிலாக அக்கால வழக்கப்படி ஒவ்வொரு வீட்டிலும் இத்தொழிலாளர்களுக்குத் தேங்காய், ஒரு சீப் வாழைப்பழம், கரும்பு, ஒரு மரக்கால் பச்சரிசி வழங்கப்படுகின்றன.

பெரும்பாலான கிராமங்களில் இந்த வழக்கம்தான் இருந்து வந்தது. கால மாற்றத்தால் வழக்கொழிந்துவிட்ட இப்பாரம்பரியத்தை வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் கைவிடாமல் தொடர்கின்றனர் தச்சுத் தொழிலாளர்கள்.

இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த எம். கணபதி தெரிவித்தது: நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானங்களில் தச்சுப் பணி மேற்கொண்டு வருகிறோம். பொங்கல் திருநாளுக்கு எங்களது கிராம மக்களுக்கு அகப்பைகள் செய்து கொடுக்கும் வழக்கம் பாட்டன், முப்பாட்டனுக்கு முன்பிருந்த தலைமுறைகளிலிருந்து  வருகிறது. விலையில்லாமல் அகப்பை செய்து கொடுக்கும் பழக்கம் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், நாங்கள் நம்முடைய பாரம்பரியத்தை விட்டுவிடக் கூடாது என்பதற்காக விடாப்பிடியாக இப்போதும் செய்து வருகிறோம். இப்பணியில் நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன்.

பொங்கல் திருநாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே இதற்கான வேலையைத் தொடங்கி விடுவோம். இதற்குக் கொட்டாங்குச்சி, மூங்கில் குச்சி தேவைப்படும். ஒரே நேரத்தில் நிறைய அகப்பைகள் செய்வதற்குக் கொட்டாங்குச்சி கிடைப்பது சிரமமாக இருக்கும். எனவே, கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட கொட்டாங்குச்சிகளைச் சேகரித்து வைத்துக் கொள்வோம். இதை 15 நாள்களுக்கு முன்பு தண்ணீரில் ஊற வைத்துவிடுவோம். கொட்டாங்குச்சிகள் நன்கு ஊறினால்தான், அவற்றை உளியால் செதுக்கும்போது உடையாமல் பதமாக வடிவமைக்க முடியும்.

அகப்பைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள்
அகப்பைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள்

இதையடுத்து, உளியால் பிசிறுகளை நீக்கிவிட்டு, வாய்ப்பகுதியைச் சரிசமமாகச் செதுக்குவோம். கொட்டாங்குச்சி பொலிவாக வந்த பிறகு அதில் கண் (துவாரம்) இடுவோம். இந்தக் கண் இடும்போது ஏறத்தாழ 20 சதவீத கொட்டாங்குச்சிகள் உடைந்து போகும். மிகவும் கவனமாக உளியால் கண் வைத்து அதில், 2 அடி நீளமுள்ள மூங்கில் குச்சியைச் சொருகுவோம். இதற்காக மூங்கில்களையும் சேகரித்து, குச்சி போல அழகாகச் செதுக்கி வைப்போம்.

ஒரு ஜோடி அகப்பைகள் செய்வதற்கு ரூ. 60 செலவாகிறது. இதுவே சந்தையில் விலை கொடுத்து வாங்க வேண்டுமானால் ரூ.70 செலவாகும். நாங்கள் விலையில்லாமல் ஒவ்வொரு வீடாகச் சென்று கொடுத்துவிடுவோம். இதற்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிலும் எங்களுக்கு ரூ.150 மதிப்பிலான பொருள்களைக் கொடுப்பர்.

எந்த வீடும் விடுபடக்கூடாது என்பதற்காக எங்களது ஒவ்வொரு குடும்பமும் 20 - 30 வீடுகளுக்குச் செய்து கொடுப்பது என பிரித்துக் கொண்டு வழங்கி வருகிறோம்.

இது, மிகவும் கடினமான பணி என்றாலும், பாரம்பரியமான நமது கடமையைச் செய்து வருகிறோம் என்பதை நினைக்கும்போது, மனதுக்கு நிறைவாக இருக்கிறது என்கிறார் கணபதி.


படங்கள்: எஸ். தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com