சச்சின் சாதனைகளை எந்த வீரரும் முறியடிக்க முடியாது: சர் விவியன் ரிச்சர்ட்ஸ்

புது தில்லி, டிச.11: சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை இப்போதுள்ள எந்தவொரு கிரிக்கெட் வீரராலும் முறியடிக்க முடியாது என புகழ்ந்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் கேப்டன் சர் விவியன் ரிச்சர்ட்ஸ். உலகக
சச்சின் சாதனைகளை எந்த வீரரும் முறியடிக்க முடியாது: சர் விவியன் ரிச்சர்ட்ஸ்
Published on
Updated on
2 min read

புது தில்லி, டிச.11: சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை இப்போதுள்ள எந்தவொரு கிரிக்கெட் வீரராலும் முறியடிக்க முடியாது என புகழ்ந்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் கேப்டன் சர் விவியன் ரிச்சர்ட்ஸ்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக தில்லி வந்துள்ள ரிச்சர்ட்ஸ், கிரிக்கெட் தொடர்பான பல கருத்துகளை செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பகிர்ந்து கொண்டார்.

நெருங்க முடியாது: சச்சின் ஒரு மிகச் சிறந்த வீரர். அவரின் சாதனைகளை நிச்சயம் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் நெருங்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதங்கள் என்ற மைல் கல்லையும் விரைவில் அவர் எட்டுவார்.

37 வயதாகும் சச்சின், கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரைப் பதித்து வருகிறார். அதற்கு அவரின் தனிமனிதப் பண்பும், ஒழுக்கமுமே காரணமாகும். இத்தனை ஆண்டு காலத்தில் காயம் உள்ளிட்ட காரணங்களால் சச்சின் அதிகம் பின்தங்கிவிடவில்லை. கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, நேர்மை, நம்பிக்கை ஆகியவையே சச்சினின் சாதனைகளுக்குக் காரணமாக இருக்க முடியும் என நம்புகிறேன்.

இப்போதுள்ள வீரர்களில் ஆஸ்திரேலியக் கேப்டன் ரிக்கி பாண்டிங், சச்சினின் சாதனைகளுக்கு அருகில் வேண்டுமானால் வரலாம், ஆனால் நிச்சயமாக முறியடிக்க முடியாது.

சேவாக்: உலகின் மிகச் சிறந்த அதிரடி வீரர் சேவாக்தான். எந்தவொரு வேகப் பந்துவீச்சுக்கும் நான் பயந்தது கிடையாது. அதேபோன்ற துணிச்சலை சேவாக்கிடம் பார்க்கிறேன். அவர் விளையாடும் விதம் அலாதியானது. பேட்டிங்கில் தனக்கென ஒரு தனித்துவத்தை அவர் கொண்டுள்ளார். தன்னிடத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அந்த குணமே அவரின் வெற்றிக்குக் காரணம்.

இந்தியாவுக்கு வாய்ப்பு: உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. புதிதாக வரும் இளம் வீரர்களும் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக விளையாடி வருகின்றனர். முக்கிய வீரரோ, முன்வரிசை வீரர்களோ ஆட்டமிழந்தாலும் அடுத்து வரும் வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றி பெறச் செய்கின்றனர். பெங்களூரில் அண்மையில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 316 ரன்கள் என்ற இலக்கை எட்டிய விதமே இந்திய கிரிக்கெட் அணியின் திறமைக்குச் சான்று.

சிறந்த கேப்டன்: இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ், இந்தியக் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஆகியோர் தங்கள் அணிகளைச் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி: உலகின் முதல்நிலை அணியாக இருந்த ஆஸ்திரேலியாவின் இப்போதைய பின்னடைவுக்கு, அதிலிருந்த முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வுபெற்றதே காரணம். ஷேன் வார்னே, கிளென் மெக்ராத், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரின் இடங்களை நிரப்புவது கடினம். தொடர்ந்து முன்னணியில் இருக்கும் எந்தவொரு அணிக்கும் இத்தகைய சரிவு இயல்பானது. எந்தவொரு அணியும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்போது 30-வயதுகளில் இருக்கும் காடிச், பாண்டிங், ஹசி ஆகியோருக்கு பின் ஆஸ்திரேலியாவின் நிலை இன்னும் கடினமானதாக இருக்கும்.

பயிற்சியாளர்: சர்வதேச அணிக்கு பயிற்சியாளராகும் விருப்பம் ஏதும் இல்லை.

யூ.டி.ஆர்.எஸ்.: நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் தெளிவான தொழில்நுட்பத்தை அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் யூ.டி.ஆர்.எஸ். முறையை அமல்படுத்துவதில் தவறில்லை என்று தெரிவித்தார் ரிச்சர்ட்ஸ்.

121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் 8,540 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 51. தான் விளையாடியக் காலங்களில் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ரிச்சர்ட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.