கோபே (ஜப்பான்), ஜூலை 9: ஜப்பானின் கோபேவில் நடைபெற்று வரும் ஆசிய தட கள சாம்பியன் போட்டியில் மூன்றாவது நாளான சனிக்கிழமை இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
மும்முறை தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மயோகா ஜானி மூன்றாவது இடம்பிடித்து வெண்கலம் வென்றார். இவர் 14.11 மீட்டர் தூரம் தாண்டி தனது பழைய சாதனையை (14.2 மீ.) தகர்த்தார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் மும்முறை தாண்டுதல் பிரிவில் பங்கேற்க தகுதிபெற்றார்.
வரும் ஆகஸ்டில் தென் கொரியாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் பிரிவில் பங்கேற்கவும் தகுதிபெற்றுள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் விளையாடுவதற்கும் தகுதிபெற்றுள்ளார். முன்னதாக முதல் நாளில் நீளம் தாண்டுதல் பிரிவில் மயோகா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷுக்கு வெண்கலம்: குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் வெண்கலம் வென்றார். இவர் 19.47 மீட்டர் தூரம் குண்டு எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இருப்பினும் லண்டன் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார். 20 மீட்டர் தூரம் குண்டு எறிந்திருந்தால் அவர் மேற்கண்ட போட்டிகளுக்கு தகுதிபெற்றிருப்பார்.
மற்ற இந்தியர்களான பிரஜ்யூஷா, செüரப் விஜ், கவிதா ரெüத், சுரேஷ் குமார், சுஷ்மிதா சின்ஹா உள்ளிட்டோர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.