புது தில்லி, ஜூலை 9: சீனாவில் குவாங்ஜௌ நகரில் கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது "ஜின்செங்' ஊக்கமருந்து உக்ரைன் பயிற்சியாளர் யூரி ஆக்ரோட்னிக் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பயிற்சியின்போது வீரர், வீராங்கனைகள் எளிதில் களைப்படையாமல் இருக்கவும், உடற்தகுதியோடு இருப்பதற்காகவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் "ஜின்செங்' ஊக்கமருந்தை கலந்திருக்கலாம் என்று தெரிகிறது.
தட கள வீராங்கனைகள், விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
பயிற்சியாளர்கள் அறிவுறுத்தலின் பேரிலேயே தட கள வீரர்கள் உணவில் "ஜின்செங்' ஊக்கமருந்தை எடுத்துள்ளனர். இந்த மருந்துகள் இதற்கு முன்னதாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது லண்டனில் இருந்து வந்துள்ளது.
இப்போது சீனாவில் இருந்து பயிற்சியாளர் யூரியால் கொண்டு வரப்பட்டுள்ளது என இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் கடந்த மே மாதம் நடைபெற்ற பயிற்சி முகாமின்போதுதான் இந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாட்டியாலா மையத்தில் பயிற்சி பெற்றுவரும் மிருதுளா என்ற வீராங்கனை ஆம்வே நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் "ஜின்செங்' பொருளை உட்கொண்டுள்ளார். ஆனால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஊக்கமருந்து பொருள்கள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இப்போது பிரச்னையில் சிக்கியுள்ள வீராங்கனைகள் யாரும் ஊசி மூலம் மருந்தை செலுத்தவில்லை. அவர்களின் ஹார்மோன்களிலும் மாற்றம் ஏற்படவில்லை.
இது சாதாரணமான பொருள் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையிலும் அவர்கள் சிக்கவில்லை.
"ஜின்செங்' பற்றி முழுமையாக ஆக்ரோட்னிக் தெரிந்திருந்தாரா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இது மிகச்சிறந்தது. சீனாவில் கிடைக்கிறது என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
ஆக்ரோட்னிக்கின் பயிற்சிக் காலம் முடிந்தபிறகு அவரின் ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் பயிற்சி முகாமுக்கு வந்தபோது, வீரர்கள் மிகவும் களைப்படைந்து காணப்பட்டுள்ளனர்.
மிகப்பெரிய அளவில் புரதச்சத்து இழப்பு ஏற்பட்டதே அதற்கு காரணமாகும். இதையடுத்து அவர்களுக்கு "ஜின்செங்' வழங்கப்பட்டுள்ளது. அது இப்போது பிரச்னைக்கு உள்ளாகியுள்ளது.
"ஜின்செங்' என்பது ஒரு தாவரப் பொருளாகும். இதில் கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பொருள்கள் காணப்படுவதாகவும், இது உடல் நலத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள் என்றும் கூறப்படுகிறது.