டொமினிகா, ஜூலை 14: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தது நான் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என மேற்கிந்தியத் தீவுகள் மூத்த வீரர் சிவநாராயண் சந்தர்பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கிய சந்தர்பால் அந்த ஆட்டத்தில் சதமடித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பேட் செய்தபோது, பந்துகள் பவுன்சர்களாக வந்ததோடு, கடுமையாக சுழன்றன. பந்துகள் எப்படி வருகின்றன என்பதையே கணிக்க முடியவில்லை. அதனால் மிகவும் பொறுமையாக பந்துகளை கவனமாக கணித்து ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. களத்தில் நிலைத்து நின்று ஆடுவதற்காக எல்லாவிதமான ஆட்ட உத்திகளையும் பயன்படுத்தினேன். இக்கட்டான நேரம் என்பதால் மன ரீதியாகவும் என்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
நல்ல ஷாட்களை அடித்து ஆடக்கூடிய எல்லா திசைகளிலும் பீல்டர்களை நிறுத்தி ரன் குவிப்பை தடுத்தார் இந்திய கேப்டன் தோனி. அதனால் ரன் எடுக்க மிகவும் கடினமாக இருந்தது என்றார்.
அறிமுக வீரராக டெஸ்ட் போட்டியில் களம் கண்ட கிர்க் எட்வர்ட்ஸ், சதமடித்தார். அவரைப் பாராட்டிய சந்தர்பால், எட்வர்ட்ஸ் மிகவும் அற்புதமாக விளையாடினார். ஹர்பஜன் சிங்குக்கே சவால் விடும் வகையில் அவர் விளையாடினார்.
அவரின் ஆட்டம் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியில் இருந்து மீள மிகவும் உதவியாக இருந்தது. அவர் பந்துகளை எதிர்கொள்வதற்கு அஞ்சவில்லை. இக்கட்டான நேரத்திலும் அவர் சிறப்பாக விளையாடினார் என்றார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சந்தர்பால் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அவரின் கிரிக்கெட் பங்களிப்பை கெüரவிக்கும் வகையில், அவருக்கு டொமினிகா குடியுரிமையை வழங்கியது அந்நாட்டு அரசு.
இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சந்தர்பால், டொமினிகா மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். டொமினிகாவில் குடியுரிமை சலுகை வழங்கியதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன். இங்கு டெஸ்ட் போட்டி நடைபெற்ற 5 நாள்களும் நல்ல மக்கள் கூட்டம் இருந்தது.
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இங்கு விளையாடினேன். கிரிக்கெட் விளையாட இது மிகச்சிறந்த மைதானம். இங்கு சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 8 மணி நேரத்துக்கும் மேல் களத்தில் நின்ற சந்தர்பால், 343 பந்துகளை சந்தித்து 116 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.