புது தில்லி, பிப்.11: பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் பந்துவீசும் முறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்தியாவின் பிஷன் சிங் பேடி, பிரசன்னா, மணீந்தர் சிங் ஆகியோர் அஜ்மல் முழுமையாக பந்தை எறிகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரத்தில் பாகிஸ்தானின் அப்துல் காதிர், சக்லைன் முஸ்டாக், இந்தியாவின் ஹர்பஜன் சிங் ஆகியோர் அஜ்மலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிஷன் சிங் பேடி கூறுகையில், "சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தான் இந்த முரண்பாட்டை உருவாக்குகிறது. பந்தை எறிபவரை எப்படி தொடந்து விளையாட அனுமதிக்க முடியும். இந்தக் கேலிக்கூத்தை யாராவது முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அஜ்மல் விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஐசிசிதான் பதிலளிக்க வேண்டும்.
அஜ்மலைப் போன்று பந்துவீசுவதாக இருந்தால், சற்று தூரத்தில் இருந்து ஓடி வரத் தேவையில்லை. நின்ற இடத்தில் இருந்தே பந்தை எளிதாக எறிந்துவிடலாம். முத்தையா முரளீதரனை இவ்வாறு அனுமதித்ததால்தான் பிரச்னை தொடங்கியது. ஒருவரின் பந்துவீச்சைப் பார்த்தாலே அவர் 15 டிகிரிக்கு மேல் முழங்கையை வளைக்கிறாரா, இல்லை அதற்கும் குறைவாக முழங்கையை வளைக்கிறாரா என்பதை வெறும் கண்களாலேயே எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மனித கண்கள் மீது நம்பிக்கையிருந்தால், ஒரு மைல் தூரத்தில் இருந்துகூட ஒருவர் பந்தை எறிவதைக் கண்டுபிடித்துவிட முடியும். சூதாட்டப் பிரச்னையை ஒழிக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கும் ஐசிசி, பந்தை எறிவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று குற்றம்சாட்டினார்.
பிரசன்னா கூறுகையில், "அவர் பந்தை வீசும் விதம் நிச்சயம் பிரச்னைக்குரியதே. அப்படியிருந்தும் அவரை பந்துவீச ஐசிசி அனுமதித்துள்ளது. எங்களுக்குத் தெரிந்தவரையில் ஐசிசி விதிப்படி 15 டிகிரிக்கு மேலாக முழங்கையை வளைத்தால் அவர் பந்துவீச முடியாது. ஆனால் அஜ்மல் 23 டிகிரி வரை கையை வளைக்கிறார்' என்றார்.
மணீந்தர் சிங் கூறுகையில், "அஜ்மல் பந்தை எறிகிறார். அவரை பந்துவீச அனுமதிக்கக்கூடாது. அஜ்மல் 23.5 டிகிரி வரை முழங்கையை வளைத்து பந்துவீசுவதற்கு ஐசிசி அனுமதித்துள்ளது. அவர் 30 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைக்கிறார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவர் "தீஸ்ரா' பந்துவீச்சை மட்டுமல்ல, "செüதா' பந்துவீச்சையும் கையாள்கிறார். இதை ஐசிசி ஒருபோதும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இதற்காக ஒரு கமிட்டி அமைக்கக்கூட ஐசிசி முயன்றதில்லை' என்று கடுமையாகச் சாடினார்.
ஹர்பஜன் சிங் கூறுகையில், "நான் பார்த்தவரையில் அவரிடம் சிறு குறையுள்ளது. ஆனாலும் அவர் மிகச்சிறந்த பெüலர். அற்புதமான நுணுக்கங்களைத் தெரிந்தவர். தூஸ்ரா பந்துவீச்சை கையாள்வது மிகக் கடினமானது. அதுதான் அவரை அபாரமான பந்துவீச்சாளராக்கியுள்ளது' என்றார்.
பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் காதிர் கூறுகையில், "அஜ்மல் விவகாரத்தில் இவ்வளவு பெரிய சர்ச்சை எதற்கு என்று தெரியவில்லை. கிரிக்கெட் தொழில்நுட்பம் இப்போது பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. ஐசிசியின் விதிகளுக்கு முரணாக அவர் பந்துவீசியிருந்தால், அவரை ஐசிசி விளையாட அனுமதித்திருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அஜ்மலின் பந்துவீச்சை டி.வி.யில் பார்த்தால் தெரியும். அவருடைய பந்துவீசும் விதம் சரியாக இல்லாதபட்சத்தில் அவர் நிச்சயம் இவ்வளவு நாள்கள் கிரிக்கெட் விளையாடியிருக்க முடியாது என்றார்.
சக்லைன் முஷ்டாக் கூறுகையில், "சமீபத்தில் அஜ்மலின் சிறப்பான ஆட்டத்தைப் பார்த்தபோதே, சர்ச்சைகள் வரும் என்று எதிர்பார்த்தேன். எனக்கு ஏற்பட்ட பிரச்னை இப்போது, அஜ்மலுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் அஜ்மல் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அவருடைய பந்துவீச்சில் நான் எவ்வித குறையையும் கண்டதில்லை' என்று கூறியுள்ளார். அஜ்மல் பந்துவீசும் விதம் சரியாக இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
முன்னதாக தனக்கு கையை வளைத்து பந்துவீசுவதற்கு ஐசிசி சிறப்பு அனுமதி வழங்கியிருப்பதாக அஜ்மல் கூறியிருந்தார். 2009-ம் ஆண்டு அவரின் பந்துவீச்சு ஐசிசியால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் குறை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.