புது தில்லி, பிப்.11: பேட்டிங்கில் மட்டுமல்ல, ஸ்டைலிலும், தோற்றத்திலும் சிறந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்பதை மறுக்க முடியாது. அது உண்மைதான் என்பதற்கு சர்வதேச அங்கீகாரமும் இப்போது கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "ஜிகியூ' என்ற "பேஷன்' தொடர்பான பத்திரிகை, ஸ்டைல், உடை அணியும் பாங்கு, சிறப்பான தோற்றம் உள்ளிட்டவற்றில் சிறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கோலிக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. முதல் இடத்தில் அயர்லாந்து-ஜெர்மனி நடிகர் மைக்கேல் பாஸ் உள்ளார். கனடா நடிகர் ரியான் கோஸ்லிங், வின்சென்ட் கேசல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோரும் முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளனர்.
தோற்றப் பொலிவுமிக்க முதல் 10 தொழில் அதிபர்கள் வரிசையில் ரத்தன் டாடாவும் இடம் பெற்றுள்ளார்.