சுடச்சுட

  

  கவ்மு, ஏப்.1: வாழும்போதே வரலாறாக விளங்குகிறவர்கள் சிலபேர்; அந்தச் சிலரில் தலைசிறந்தவர் மியான்மர் நாட்டு "ஜனநாயகத்துக்கான தேசிய லீக்' (என்.எல்.டி.) கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி (66).

   தன்னுடைய பொதுவாழ்வில் 22 ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர். எத்தனை இடையூறுகள் வந்தாலும் மியான்மரில் (பழைய பெயர் பர்மா) ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்யப் பாடுபடுகிறார்.

   மியான்மர் நாடாளுமன்றத்தின் 45 தொகுதிகளுக்கு மட்டுமே ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடக்கிறது.

   இந்தத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அமைச்சர்களாகிவிட்டதால் இத் தொகுதிகளுக்குப் பிரதிநிதிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (விநோதமான மிலிட்டரி ஜனநாயகம் இது!)

   அவருடைய கட்சி 44 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவரே கவ்மு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

   மியான்மரில் ஜனநாயக உரிமைகளை மக்களுக்கு வழங்காவிட்டால் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பரிசீலிக்க நேரும் என்று மேற்கத்திய நாடுகள் எச்சரித்ததை அடுத்த ""அரசியல் சீர்திருத்தங்களை'' அமல் செய்வதாக அந்த நாட்டு அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் 45 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

   இந்த 44 தொகுதிகளிலும் ஆங் சான் கட்சி வெற்றி பெற்றாலும் அங்கு ஆட்சி செய்துவரும் ராணுவத்தின் ""கைப்பாவைகளின் ஆட்சி''க்கு ஒரு ஆபத்தும் வராது. ஆனால் தேர்தல் ஜனநாயகப் பூர்வமாக நடந்தது என்று சொல்லி தடை நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியும். இதற்காகவே மியான்மர் அரசு, ஆங் சான் சூச்சியையும் போட்டியிட இந்த முறை ""பெருந்தன்மை''யோடு அனுமதித்துவிட்டது.

   உண்மையான ஜனநாயகவாதிகள் தங்களுடைய கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடாமல் ஜனநாயகத்தின் வெற்றிக்காகவே தொடர்ந்து போட்டி போடுவர். அந்த வகையில் ஆங் சானும் மனம் தளராமல் போட்டியிடுகிறார்.

   பிரசாரத்தின்போது மேற்கொண்ட பயணத்தால் உடல் நலிவு ஏற்பட்டு குளூகோஸ் ஏற்றினார்கள். அதையும் பொருள்படுத்தாமல் மருத்துவமனையிலிருந்து வாக்குச் சாவடிக்குக் காரில் சென்றிருக்கிறார்.

   மெழுகு தடவுவது ஏன்? தேர்தல் என்றால் தில்லுமுல்லுகள் சகஜம். ஜனநாயக நாட்டிலேயே இதுதான் கதி என்றால் ராணுவத்தின் மேற்பார்வையில் நடைபெறும் தேர்தலில் கேட்கவா வேண்டும்?

   வாக்குச் சீட்டில் பெயர் காணாமல் போவது, இறந்து போனவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் ""உயிரோடு'' இருப்பது, வாக்குச் சீட்டில் ஆங் சான் கட்சியின் பெயர் உள்ள கட்டத்துக்கு மேலே மெழுகு பூசுவது, ராணுவ ஆதரவுக் கட்சியைத் தவிர ஆங் சான் கட்சிக்கு வாக்களித்தால் ""தேர்தல் முடிந்த பிறகு பலனை அனுபவிப்பாய்'' என்று வீட்டுக்கே வந்து எச்சரிப்பது என்று எல்லாமும் நடக்கிறது. ஆங்சான் கட்சியின் பெயர், சின்னத்துக்கு எதிரே மெழுகு பூசியிருப்பதால் வாக்கு முத்திரையை வெகு எளிதாக தேய்த்து மறைத்துவிடலாம்.

   இத்தனை முறைகேடுகள், தில்லுமுல்லுகளையும் பட்டியலிடும் ஆங்சான், அதற்காக தேர்தலைப் புறக்கணிப்பதாகவோ முடிவை ஏற்க முடியாது என்றோ கூறாமல் போட்டியில் இருக்கிறார்.

   ஆங்சான் எங்களுக்காகவே பாடுபட்டு 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டார், அவருக்குத்தான் எங்கள் வாக்கு என்று கிராம மக்கள் துணிச்சலாக, பகிரங்கமாகக் கூறுகின்றனர். ஏராளமானோர் தங்களுடைய பாரம்பரிய உடையில் வந்து தேசியத் திருவிழா போல தேர்தலைக் கொண்டாடுகின்றனர்.

   ஒரு வாரத்துக்குள் தேர்தல் முடிவு தெரிந்துவிடும். ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றாலும் மக்களுடைய எண்ணத்தை ஓரளவுக்கு அறிய ஆட்சியாளர்களுக்கு இது வாய்ப்பாக இருக்கிறது.

   1990 பொதுத் தேர்தலில் ஆங்சான் கட்சிக்கு பெருத்த வெற்றி கிடைத்தது. ஆனால் ராணுவ ஆட்சியாளர்கள் அதை அங்கீகரிக்க மறுத்து ஆங்சானைச் சிறையில் தள்ளினார்கள்.

   எனவே ஜனநாயகம் தழைக்குமா என்ற கேள்விக்குப் பதிலாகத்தான் இந்தத் தேர்தலைப் பார்க்க முடியுமே தவிர ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்கின்றனர் பார்வையாளர்கள்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai