சுடச்சுட

  

  கொல்கத்தா, ஏப்.5: கொல்கத்தா நைட் ரைடர்ஸýக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது டெல்லி டேர்டெவில்ஸ்.

  அந்த அணியின் மோர்கல் அபாரமாக பந்துவீசி கொல்கத்தாவின் முன்னணி வீரர்களான காலிஸ், கம்பீர், திவாரி ஆகியோரை கிளீன் போல்டாக்கினார். டெல்லியின் இர்ஃபான் பதான் 3-வது வீரராக களமிறங்கி 20 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் குவித்தார்.

  வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 11.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  மழையால் பாதிப்பு: போட்டி தொடங்குவதற்கு முன்பு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் 2.30 மணி நேரம் தாமதாக இரவு 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. ஆட்டமும் 20 ஓவர்களில் இருந்து 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

  மோர்கல் அபாரம்: டாஸ் வென்ற டெல்லி கேப்டன் சேவாக், பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான மெக்கல்லம் 9 ரன்களில் வான்டெர் மெர்வ் பந்துவீச்சில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் காலிஸ் (4), திவாரி (0), கம்பீர் (16) ஆகியோரை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார் மோர்ன் மோர்கல்.

  4-வது விக்கெட்டாக யூசுப் பதான் 4 பந்துகளைச் சந்தித்தபோதும், ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். டி.பி.தாஸ் 9 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் எடுத்து துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனால் 6.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது கொல்கத்தா.

  சுக்லா 26: பின்வரிசையில் லட்சுமி சுக்லா 17 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பிரெட் லீ 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது.

  டெல்லி தரப்பில் மோர்கல் 3 விக்கெட்டுகளையும், உமேஷ், வான்டெர் மெர்வ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  பிஞ்ச் 30: பின்னர் பேட் செய்த டெல்லி அணியின் இன்னிங்ûஸ ஆரோன் பிஞ்சும், கேப்டன் சேவாக்கும் தொடங்கினர். 27 பந்துகளைச் சந்தித்த பிஞ்ச் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து காலிஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

  பதம்பார்த்த பதான்: இதையடுத்து சேவாக்குடன் இணைந்தார் இர்ஃபான் பதான். சேவாக் 20 ரன்கள் எடுத்திருந்தபோது பாட்டியா வீசிய 8-வது ஓவரின் 2-வது பந்தை சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் எல்லைக் கோட்டில் அற்புதமாக கேட்ச் செய்தார் இக்பால் அப்துல்லா. 13 பந்துகளைச் சந்தித்த சேவாக் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். இதையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

  இதன்பிறகு அதிரடியாக விளையாடிய பதான், சேவாக் இல்லாத குறையைப் போக்கினார். காலிஸ் வீசிய 9-வது ஓவரின் 5-வது பந்தில் இமாலய சிக்ஸரை விளாசிய பதான், டி லாஞ்ஜி வீசிய 10-வது ஓவரில் இரு சிக்ஸர்களை தூக்கினார். 12-வது ஓவரின் முதல் பந்தில் பதான் பவுண்டரியை விளாச 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது டெல்லி. பதான் 42, மேக்ஸ்வெல் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

  மைதானத்தில் மம்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிரிக்கெட் போட்டியை ரசிப்பதற்காக இரவு 8.30 மணிக்கு மைதானத்திற்கு வந்தார். ஆனால் மழையால் போட்டி தொடங்குவது தாமதமானதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர் ஷாரூக்கானை அவர் சந்தித்துப் பேசினார்.

  57 ஆயிரம் பேர்: இந்தப் போட்டியைக் கண்டுகளிப்பதற்காக 56, 762 பேர் மைதானத்திற்கு வந்திருந்தனர். இங்கு 66 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும்.

  ஸ்கோர் போர்டு  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai