சுடச்சுட

  
  1spt10

  கொழும்பு, ஜூலை 31: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா. கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

  முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 42.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து வென்றது. விராட் கோலி 128 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். ரெய்னா 51 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் உபுல் தரங்கா, தில்ஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். 48 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து தில்ஷான் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திரிமனேவும் சிறப்பாக விளையாடினார். இதனிடையே தரங்கா 51 ரன்களில் வெளியேறினார். திரிமனே 47 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை அணி வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் கேப்டன் ஜெயவர்த்தனா 3 ரன்களில் சேவாக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அடுத்து வந்த மேத்யூஸ் (14 ரன்கள்), மெண்டிஸ் (17 ரன்கள்), பெரேரா (2 ரன்கள்) ஆகியோரை மனோஜ் திவாரி சிறிய இடைவெளியில் ஆட்டமிழக்கச் செய்தார்.

  முன்னதாக சண்டிமால் 28 ரன்களில் திவாரி பந்தில் வெளியேறினார். இதனால் இலங்கை அணியின் ரன்வேகம் குறைந்தது.

  இதனால் இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. ஹெராத் 17 ரன்களுடனும், மலிங்கா 15 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியில் ராகுல் சர்மாவுக்கு பதிலாக இடம் பெற்ற மனோஜ் திவாரி 10 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். மொத்தம் 8 பந்து வீச்சாளர்களை கேப்டன் தோனி பயன்படுத்தினார்.

  அடுத்து பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் கம்பீர் முதல் ஓவரிலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்து கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாட முற்பட்ட சேவாக் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

  பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா வழக்கம் போல மோசமாகவே விளையாடினார்.

  அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது இந்திய அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அடுத்து வந்த மனோஜ் திவாரி 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  பின்னர் கோலியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் ஸ்கோர் உயர்ந்தது. 40-வது ஓவரில் பவுண்டரி அடுத்து கோலி சதமடித்தார். பின்னர் அதே ஓவரில் கோலி கொடுத்த கேட்சை இலங்கை வீரர்கள் கோட்டைவிட்டனர்.

  இதையடுத்து கோலி அதிரடியாக விளையாடினார். அடுத்த ஓவரிலேயே ரெய்னா அரைசதமடித்தார். ஹெராத் வீசிய 42-வது ஓவரில் கோலி 4 பவுண்டரிகளை விளாசினார். இதனால் இந்திய அணி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது.

  43-வது ஓவரின் 2-வது பந்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான தொடரையும் வென்றுள்ளது. இந்தியாவுக்கு இது 400-வது ஒருநாள் கிரிக்கெட் வெற்றியாகும். 5-வது ஒருநாள் ஆட்டம் ஆகஸ்ட் 4-ல் நடைபெறவுள்ளது.

  கோலி சாதனை

  இதுவரை 89 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ள கோலி 13-வது சதமடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை எந்த பேட்ஸ்மேனும் ஒருநாள் போட்டியில் இவ்வளவு குறைவான ஆட்டத்தில் 13 சதம் என்ற சாதனையை எட்டியதில்லை.

  இந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களைக் எட்டியுள்ளார். இதில் சராசரி 77.15.

  கடந்த 8 ஆட்டங்களில் 5 சதங்களை விளாசியுள்ளார். இந்தத் தொடரில் இரு சதங்களை எடுத்துள்ளார்.

  சுருக்கமான ஸ்கோர்

  இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு

  251 (50 ஓவர்களில்)

  (தரங்கா 51, திரிமனே 47,

  திவாரி 4வி/61, அஸ்வின் 2வி/46)

  இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு

  255(42.2 ஓவர்களில்)

  (கோலி 128*, ரெய்னா 58*,

  மேத்யூஸ் 1வி/18)

  ரெய்னா இந்தத் தொடரில் 3 அரைசதங்களை எடுத்துள்ளார். இவை அனைத்திலும் இந்தியா வென்றுள்ளது. இது அவருக்கு 24-வது அரை

  சதம். இவற்றில் 8 அரை

  சதங்கள் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai