சுடச்சுட

  
  1spt3

  லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.

  பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை வெல்ல இந்திய வீரர்கள் மிகக் கடுமையாகப் போராடினர். எனினும் தோல்வி தவிர்க்க முடியாததாயிற்று.

  முதல் பாதியில் இரு கோல்களை வாங்கிய இந்திய அணி, இரண்டாவது பாதியில் துடிப்புடன் விளையாடி இரு கோல்களை அடித்தது. எனினும் நெதர்லாந்து வீரர்கள் அதிவேகமாக செயல்பட்டு மேலும் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்.

  ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வான் டெர் ஹோர்ஸ்ட் கோலடித்தார்.

  29-வது நிமிடத்தில் ரோடரிக், பெனால்டி கார்னர் வாய்ப்பில் மேலும் ஒரு கோல் அடித்து நெதர்லாந்துக்கு முதல் பாதியில் 2-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். 2-வது பாதியில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். 45-வது நிமிடத்தில் தரம்வீர் சிங் கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் சிவேந்திர சிங் மேலும் ஓர் கோல் அடிக்க கோல் கணக்கு சமன் ஆனது.

  ஆனால் 51-வது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் வான் டெர் வீர்டென், பெனால்ட் கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தந்தார். இந்திய வீரர்கள் கடைசி வரை போராடியும் பதில் கோல் அடிக்க முடிக்க முடியவில்லை.

  இதனால் தோல்வி தவிர்க்க முடியாததாயிற்று.

  நியூஸிலாந்துடன் இன்று மோதல்

  இந்திய ஹாக்கி அணி தனது 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. போட்டியின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இதில் வெற்றி பெறுவது முக்கியமானது.

  எனினும் பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியை வெல்ல இந்திய வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். கடந்த மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

  நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸ் கூறியது: பலம்வாய்ந்த நெதர்லாந்து அணிக்கு எதிராக நமது வீரர்கள் சிறப்பாகவே விளையாடினார்.

  அந்த ஆட்டத்தில் வெற்றிக்காக கடுமையான போராட்டம் நடந்தது. நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட நமது வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்கள். அவர்களை வெல்ல களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது குறித்து புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் நமது வீரர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நம்பிக்கையுடன் களம்காண இருக்கின்றனர். சற்று பதற்றப்படாமல் விளையாடினால் நியூஸிலாந்தை வீழ்த்திட முடியும் என்றார் அவர்.

  இந்திய அணியைப் போலவே நியூஸிலாந்து அணியும் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. தென்கொரியா அணி 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியது. எனவே இந்திய அணியை வெல்ல அவர்களும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.45 அளவில் தொடங்குகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai