சுடச்சுட

  
  2spt11

  லண்டன், ஆக. 1: ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது.

  இது இந்தியாவுக்கு 2-வது தொடர் தோல்வியாகும். முன்னதாக முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இரு தோல்விகளால் இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது. இன்னும் 3 லீக் ஆட்டங்களில் இந்தியா பங்கேற்கவுள்ளது.

  லண்டன் ரிவர்பேங்க் அரினாவில் புதன்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே இந்தியாவின் சந்தீப் சிங் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் இந்த கோல் அடிக்கப்பட்டது.

  இந்நிலையில் 12-வது நிமிடத்தில் நியூஸிலாந்தின் ஆண்ட்ரூ ஹேவர்ட், பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் கோல் கணக்கு 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. இதன்பிறகு ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் கோல் அடித்து முன்னிலை பெற கடுமையாகப் போராடினர்.

  24-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்த முயன்ற நியூஸிலாந்தின் ஆண்ட்ரூ மீது, இக்னேஷ் திர்கே மோதியதால், பெனால்டி சூட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் நியூஸிலாந்து எளிதாக கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிலிப்ஸ் இந்த கோலை அடித்தார். 29-வது நிமிடத்தில் நியூஸிலாந்து மேலும் ஓர் கோல் அடித்து வலுவான முன்னிலை பெற்றது.

  2-வது பாதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடியபோதும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

  ஸ்பெயினை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா இரண்டிலும் வெற்றி பெற்று தங்கள் பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai