சுடச்சுட

    
    3spt6

    லண்டன், ஆக.2: வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, புதிய சாதனைகளுக்குப் பஞ்சமில்லாத ஒலிம்பிக் தட களப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.

    ஒலிம்பிக்கில் மற்ற போட்டிகளைவிட தட களப் போட்டிகளுக்குத்தான் எப்போதுமே முக்கியத்துவம் அதிகம். போட்டி ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே முடிவு தெரிந்துவிடும் இப் போட்டிகள் லண்டன் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

    வெள்ளிக்கிழமை தொடங்கும் இப்போட்டி, ஒலிம்பிக்கின் கடைசி நாளான ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. 47 பிரிவுகளில் நடைபெறும் தட களப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆடவருக்கு 24 பிரிவிலும், மகளிருக்கு 23 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

    சாதிப்பாரா போல்ட்? இதில் முக்கியமானது ஆடவர் 100 மீ. ஓட்டம்தான். உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் இப்போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் ஜமைக்காவின் உசேன் போல்ட், யோகன் பிளேக் ஆகியோரிடையேதான் கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜமைக்காவின் மற்றொரு வீரரான ஆசாஃபா பாவெல், அமெரிக்காவின் டைசன் கேய், ஜஸ்டின் கேட்டலின் ஆகியோரும் களத்தில் உள்ளனர். கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் 100 மீ., 200 மீ. ஓட்டத்தில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். 400 மீ. தொடர் ஓட்டத்திலும் அவருக்கு தங்கம் கிடைத்தது. இந்த முறையும் அவர் சாதிக்கக் காத்திருக்கிறார். இருப்பினும் இந்த முறை அவருக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார் சக நாட்டவரான யோகன் பிளேக்.

    சமீபத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் யோகன் பிளேக்கிடம் உசேன் போல்ட் தோல்வி கண்டது நினைவுகூரத்தக்கது. எப்படியோ உலகின் அதிவேக ஓட்டக்காரர்கள் யார்? என்பது ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும்.

    இந்தியா சார்பில்... இதில் இந்தியாவின் சார்பில் தட களத்தில் 9 பிரிவுகளில் 14 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியில் குர்மீத் சிங், பல்ஜிந்தர் சிங், இர்ஃபான் ஆகியோரும், ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டியில் பஹதூர் ராணாவும் பங்கேற்கின்றனர். மாரத்தான் ஓட்டத்தில் ராம் சிங் யாதவ் பங்கேற்கிறார். தின்டு லூக்கா மகளிர் 800 மீ. ஓட்டத்திலும், சீமா அன்டில், கிருஷ்ணா பூனியா ஆகியோர் மகளிர் வட்டு எறிதல் பிரிவிலும், ரஞ்சித் மகேஸ்வரி ஆடவர் மும்முறைத் தாண்டுதல் போட்டியிலும், மயோகா ஜானி மகளிர் மும்முறைத் தாண்டுதலிலும், சுதா சிங் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் போட்டியிலும், சஹானா குமாரி மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியிலும், ஓம் பிரகாஷ் கர்ஹானா ஆடவர் குண்டு எறிதல் போட்டியிலும், விகாஸ் கெüடா ஆடவர் எட்டு எறிதல் போட்டியிலும் பங்கேற்கின்றனர். இந்தியா இதுவரை ஒலிம்பிக் தட களத்தில் ஒரு பதக்கம்கூட வென்றதில்லை. இந்தியாவின் மில்கா சிங், ஸ்ரீராம், குர்பஜ்ஜன் சிங், பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் அதிகபட்சமாக இறுதிச்சுற்று வரையே முன்னேறியுள்ளனர்.

    இன்று 2 இறுதிப் போட்டிகள்: ஆடவர் பிரிவில் 1500 மீ. ஓட்டம், 3000 மீ. ஸ்டீபிள்சேஸ், 400 மீ. தடைதாண்டி ஓட்டம், 5000 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. மகளிர் பிரிவில் 100 மீ. ஓட்டம், 400 மீ. ஓட்டம், வட்டு எறிதல், மும்முறைத் தாண்டுதல், 10,000 மீ. ஓட்டம், ஹெப்டத்லான் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. இதில் ஆடவர் குண்டு எறிதல், மகளிர் 10,000 மீ. ஓட்டப் பந்தயம் ஆகிய போட்டிகளின் இறுதிப் போட்டிகளும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai