சுடச்சுட

  
  4spt5

  லண்டன், ஆக. 3: தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் விஜய் குமார்.

  ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அபிநவ் பிந்த்ரா போன்றவர்கள் ஜொலிக்கவில்லை. ஆனால் துப்பாக்கி சுடுதலில் பெரிய அளவில் பேசப்படாத ராணுவ சுபேதாரான விஜய் குமார் பதக்கம் வென்று இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தனது சொந்த மாநிலமான இமாசலப் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். அடுத்த ஒலிம்பிக் வரும் வரை 26 வயது விஜய் குமாரின் சாதனை பெரிய அளவில் பேசப்படும் விஷயமாக இருக்கும்.

  தகுதிச்சுற்றில் 585 புள்ளிகள்: வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவின் முதல் தகுதிச்சுற்றில் 293 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்த விஜய் குமார், வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-வது தகுதிச்சுற்றில் 292 புள்ளிகளைப் பெற்றார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 585 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

  இறுதிச்சுற்றில் விஜய் குமாருடன், கியூபாவின் லியூரிஸ் பபோ, உலக சாம்பியனான ரஷியாவின் அலெக்ஸி கிளிமோவ், சீனாவின் டிங் ஃபெங், ஜங் ஜியான், ஜெர்மனியின் ரெய்டஸ் கிறிஸ்டியான் ஆகியோர் களமிறங்கினார்.

  8 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்றில் 5 வாய்ப்புகளையும் சரியாகச் சுட்டதன் மூலம் 5 புள்ளிகளைப் பெற்றார் விஜய் குமார். அதைத் தொடர்ந்து 2 மற்றும் 3-வது சுற்றுகளில் 5 வாய்ப்புகளில் 4 முறை சரியாகச் சுட்ட விஜய் குமார், 4-வது சுற்றில் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றார்.

  இதனால் 4 சுற்றுகளின் முடிவில் விஜய் குமார், சீனாவின் டிங் ஃபென் ஆகியோர் தலா 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், முதல் சுற்றில் 3 முறை சரியாகச் சுட்ட லியூரிஸ் பபோ, அடுத்த 3 சுற்றில் 5-க்கு 5 புள்ளிகளைப் பெற்றதால் 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இருந்தனர்.

  அடுத்த 4 சுற்றுகளில் 3-ல் தலா 4 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் மொத்தம் 30 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார் விஜய் குமார். 40 வாய்ப்புகளில் 34-ஐ சரியாகச் சுட்டதன் மூலம் தங்கத்தை தட்டிச் சென்றார் கியூபாவின் லியூரிஸ். சீனாவின் டிங் ஃபெங் 27 புள்ளிகளுடந் வெண்கலத்தை வென்றார்.

  பிரதமர் வாழ்த்து!

  பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங், துணைத் தளபதி ரமேஷ் ஹல்காலி, பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் விஜய் குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.  8 சுற்றுகளின் விவரம்

  மொத்த சுற்றுகள் மொத்தப் புள்ளி

  வீரர் நாடு 1 2 3 4 5 6 7 8

  லியூரிஸ் பபோ கியூபா 3 5 5 5 4 4 4 4 34

  விஜய் குமார் இந்தியா 5 4 4 3 4 4 4 2 30

  டிங் ஃபெங் சீனா 4 5 4 3 4 4 3 - 27

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai