சுடச்சுட

  
  5spt5

  பல்லகெலே, ஆக. 4: இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 295 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

  கேப்டன் தோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

  இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா ஏற்கெனவே வென்றுவிட்ட நிலையில், 5-வது, கடைசி ஒருநாள் ஆட்டம் பல்லகெலேவில் சனிக்கிழமை நடைபெற்றது.

  இதில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். அணியில் சேவாக்குக்கு பதிலாக ரஹானே களமிறங்கினார். உடல்தகுதி பிரச்னை காரணமாக சேவாக் விளையாடவில்லை. கம்பீர், ரஹானே ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து கோலி களமிறங்கினார். கம்பீரும், கோலியும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஸ்கோர் 77 ஆக இருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

  அடுத்து வந்த ரோஹித் சர்மா 4 ரன்களே எடுத்து ஏமாற்றமளித்தார். இந்தத் தொடரில் அவர் எடுத்த ரன்கள் முறையே 5,0,0,4,4.

  பின்னர் வந்த மனோஜ் திவாரி கம்பீருடன் இணைந்து ஸ்கோரை உயர்த்தினார். 38-வது ஓவரில் ஸ்கோர் 197 ஆக இருந்தபோது திவாரி ஆட்டமிழந்தார். அவர் 68 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.

  அடுத்து களமிறங்கிய ரெய்னா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து, அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த கேப்டன் தோனி 2 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார்.

  எனினும் சிறிது நேரத்திலேயே கம்பீர் 88 ரன்கள் (99 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து பதான், தோனியுடன் ஜோடி சேர்ந்தார்.

  இந்த சூழ்நிலையில் விக்கெட் விழாமல் இருப்பது முக்கியம் என்பதை உணர்ந்த தோனி, அதிரடி ஆட்டத்தைக் கைவிட்டு நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார்.

  எனினும் 40 ஓவர்களைக் கடந்த பின்னர் தோனி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். பெரெரா வீசிய 46-வது ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகளை அவர் விளாசினார். இதனால் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  எனினும் தோனி ஆட்டமிழந்ததால் இந்திய அணி 300 ரன்களை எட்ட முடியவில்லை.

  தோனி 38 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். பதான் 29 ரன்களுடனும், அஸ்வின் 2 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது.

  இலங்கை அணியில் மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai