சுடச்சுட

  
  6spt9

  லண்டன், ஆக.5: ஒலிம்பிக் மகளிர் 51 கிலோ ஃபிளைவெயிட் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் மேரி கோம்.

  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் மேரி கோம் 19-14 என்ற கணக்கில் போலந்தின் கரோலினாவை வீழ்த்தி தனது காலிறுதியை உறுதி செய்தார். ஒலிம்பிக்கில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம், கரோலினாவுக்கு எதிராக ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். கரோலினாவும் பதில் தாக்குதல் தொடுக்கவே முதல் சுற்றின் முடிவில் இருவரும் 3-3 என்ற கணக்கில் சமநிலை பெற்றனர்.

  இரண்டாவது சுற்றில் கரோலினாவின் தாக்குதலில் கீழே விழுந்தபோதிலும், உத்வேகம் குறையாமல் விளையாடிய மேரி கோம் அந்த சுற்றில் 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.பின்னர் நடைபெற்ற 3-வது சுற்றில் ஆக்ரோஷமாக ஆடிய மேரி கோம் 7-3 என்ற கணக்கில் அந்த சுற்றை முடிவுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி சுற்று 4-4 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதன்மூலம் மேரி கோம் 19-14 என்ற கணக்கில் கரோலினாவை வென்றார்.

  மேரி கோம் தனது காலிறுதி ஆட்டத்தில் டுனீசியாவின் மரோவா ரஹாலியை சந்திக்கவுள்ளார். மேரி கோம் விளையாடிய ஆட்டத்தைப் பார்க்க ஏராளமான இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். மேரி கோம் விளையாடியபோது "மேரி கோம், மேரி கோம்' என்றுகூறி ரசிகர்கள் குரல் எழுப்பி உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தனர். வெற்றி குறித்துப் பேசிய மேரி கோம், "முதல் தடையைக் கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai