சுடச்சுட

  
  6spt8

  லண்டன், ஆக.5: ஒலிம்பிக் ஆடவர் லைட் வெல்டர் 64 கிலோ எடைப் பிரிவில் நடுவரின் ஒருதலைபட்சமான தீர்ப்பால் தோல்வி கண்டார் இந்தியாவின் மனோஜ் குமார்.

  சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மனோஜ் குமார் 16-20 என்ற கணக்கில் பிரிட்டனின் ஜார்ஜ் ஸ்டால்கரிடம் தோல்வி கண்டார்.

  இப் போட்டியின் முதல் சுற்றில் 7-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஸ்டால்கர், அடுத்த சுற்றிலும் 9-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். மூன்றாவது மற்றும் கடைசிச் சுற்றை மனோஜ் குமார் 7-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  மூன்று சுற்றுகளிலுமே மனோஜ் குமார் சிறப்பாக ஆடியபோதும், நடுவர் அவருக்கு புள்ளிகளை வழங்கவில்லை. மாறாக ஸ்டால்கருக்கு சாதகமாக புள்ளிகளை வழங்கினார். இதனால் சிறப்பாக ஆடியபோதும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் மனோஜ் குமார் தோல்வி கண்டார். இது அவருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்ததோடு, அவரின் ஒலிம்பிக் பதக்க கனவையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.

  முன்னதாக 81 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சுமித் சங்கவானுக்கு பாதகமாக நடுவர் செயல்பட்டதாலேயே ஒரு புள்ளி வித்தியாசத்தில் பிரேசில் வீரர் புளோரென்டினோவிடம் தோல்வி கண்டார்.

  இதேபோல் 69 கிலோ எடைப் பிரிவில் விகாஸ் கிருஷன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்போது 3-வது வீரராக மனோஜ் குமார் பாதிக்கப்பட்டுள்ளார்.

  இந்திய அணியின் பயிற்சியாளர் இக்லிசியாஸ் கூறுகையில், "மூன்றாவது சுற்றில் மனோஜ் குமாருக்கு 7 புள்ளிகள் வழங்கப்பட்டன.

  மூன்றாவது சுற்றில் விளையாடியது போன்றுதான் முந்தைய இரு சுற்றுகளிலும் மனோஜ் குமார் விளையாடினார். அப்படி இருக்கையில் முதல் இரு சுற்றுகளுக்கு ஏன் சரியான முறையில் புள்ளிகள் வழங்கப்படவில்லை. இது மிக மோசமான தீர்ப்பு' என்று குறிப்பிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai