சுடச்சுட

  
  7spt5

  லண்டன், ஆக.6: ஒலிம்பிக் ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 2-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜமைக்காவின் உசேன் போல்ட்.

  உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான போல்ட் 9.63 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார்.

  முன்னதாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் உசேன் போல்ட் 9.69 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்ததே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.

  இப்போது 9.63 விநாடிகளில் இலக்கை கடந்து, தனது பழைய சாதனையை முறியடித்துள்ளார் போல்ட்.

  லண்டன் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் நடைபெற்ற இப்போட்டியில் உசேன் போல்ட் முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார்.

  ஜமைக்காவைச் சேர்ந்த மற்றொரு வீரரும், போல்ட்டின் பயிற்சித் தோழருமான யோகன் பிளேக் 9.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

  2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் 9.79 விநாடிகளில் இலக்கைக் கடந்து 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

  ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதற்காக 4 ஆண்டு தடை பெற்ற ஜஸ்டின், மீண்டும் களமிறங்கி வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  அமெரிக்காவின் டைசன் கேய் (9.80 விநாடி), ரியான் பெய்லி (9.88) ஆகியோர் முறையே 4 மற்றும் 5-து இடங்களைப் பிடித்தனர்.

  100 மீ. ஓட்டத்தில் உலக சாதனையும் போல்ட் வசமே உள்ளது. 2009-ல் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 9.58 விநாடிகளில் 100 மீ. தூரத்தை போல்ட் கடந்ததே இன்றளவும் உலக சாதனையாக உள்ளது. இந்த ஒலிம்பிக்கில் 9.63 விநாடிகளில் போல்ட் கடந்தது இரண்டாவது அதிவேக ஓட்டமாகும்.

  இப்போது தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் 4-வது தங்கத்தை வென்றுள்ளார்.

  பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டங்களில் போல்ட் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 200 மீ. ஓட்டத்திலும் உலக சாதனை (19.19 விநாடிகள்) போல்ட் வசமே உள்ளது.

  பாட்டில் வீசியவர் கைது

  ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் ஆடவர் 100 மீ. ஓட்டம் நடைபெற்றபோது பந்தய பாதையில் பிளாஸ்டிக் பாட்டிலை வீசியவர் கைது செய்யப்பட்டார்.

  போட்டி தொடங்கும் வேளையில், வீரர்கள் அனைவரும் ஓட தயாராக இருந்தபோது, ரசிகர்கள் இருக்கையில் இருந்த ஒருவர், பலத்த சப்தம் எழுப்பிக் கொண்டே பந்தய பாதையில் பாட்டிலை வீசினார்.

  அந்த பாட்டில் ஜமைக்காவின் யோகன் பிளேக் பின்புறமாக சென்று விழுந்தது. இதையடுத்து போலீஸார் பாட்டிலை வீசிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai