சுடச்சுட

  
  7spt8

  லண்டன், ஆக.6: ஒலிம்பிக் ஆடவர் 50 மீ. ரைபிள் 3 பொசிஷன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங், சஞ்ஜீவ் ராஜ்புத் ஆகியோர் தகுதிச்சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

  திங்கள்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் 41 பேர் கலந்து கொண்டனர். இதில் ககன் நரங் மூன்று நிலைகளையும் (படுத்தவாறு, நின்றவாறு, முட்டி போட்டவாறு சுடுதல்) சேர்த்து 1200-க்கு 1164 புள்ளிகளை பெற்று 20-வது இடத்தைப் பிடித்தார்.

  சஞ்ஜீவ் ராஜ்புத் 1200-க்கு 1161 புள்ளிகள் பெற்று 26-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் இவர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். இந்தப் பிரிவில் முதல் 8 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

  மானவ்ஜித் சிங் ஏமாற்றம்: ஆடவர் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் மானவ்ஜித் 5 சுற்றுகளிலும் சேர்த்து மொத்தம் 119 புள்ளிகளுடன் 16-வது இடத்தைப் பிடித்தார். இதனால் அவரால் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அந்தப் பிரிவில் முதல் 6 இடங்களைப் பிடித்தவர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

  இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர்களின் போட்டி முடிவுக்கு வந்தது. இந்த முறை இந்தியாவில் இருந்து 11 பேர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றனர். இதில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன. 25 மீ ஆடவர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் விஜய் குமார் வெள்ளியும், 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் ககன் நரங் வெண்கலமும் வென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai