சுடச்சுட

  
  7spt9

  லண்டன், ஆக.6: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் மேரி கோம். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

  திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் 51 கிலோ ஃபிளை வெயிட் பிரிவு காலிறுதிச் சுற்றில் மேரி கோம் 15-6 என்ற புள்ளிகள் கணக்கில் டுனீசியாவின் மரோவோ ரஹாலியை தோற்கடித்தார்.

  ஒலிம்பிக்கில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனையான மேரி கோம், முதல் சுற்றிலேயே 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் தொடர்ந்து அபாரமாக ஆடிய மேரி கோம் அந்த சுற்றிலும் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கையாண்ட சில உத்திகளை இந்தப் போட்டியின் 3-வது சுற்றில் பயன்படுத்திய மேரி கோம், அந்த சுற்றின் முடிவில் 11-4 என்ற கணக்கில் முன்னிலை பெறவே வெற்றி உறுதியானது. பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் மேலும் 4 புள்ளிகளைப் பெற்ற மேரி கோம் 15-6 என்ற கணக்கில் வெற்றி கண்டார்.

  குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதி வரை முன்னேறுபவர்களுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். அதன்படி இப்போது மேரி கோமுக்கும் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

  இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் பாட்மிண்டனில் வெண்கலம் வென்ற சாய்னா, 2000-ல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் வெண்கலம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்ற இரு இந்திய வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai