சுடச்சுட

  
  8spt3

  லீட்ஸ், ஆக.7: இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

  இங்கிலாந்தின் ஹெட்டிங்லீயில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 139.2 ஓவர்களில் 419 ரன்களும், இங்கிலாந்து 126.4 ஓவர்களில் 425 ரன்களும் குவித்தன.

  இதன்பிறகு 2-வது இன்னிங்ûஸ விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்திருந்தது.

  கடைசி நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ருடால்ப்-ஸ்மித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது. ருடால்ப் 69 ரன்கள் எடுத்திருந்தபோது பீட்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

  மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. முன்னதாக காலையில் இருமுறை மழை குறுக்கிட்டதால் மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, ஸ்மித் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் கண்ட ஆம்லா 28, டிவில்லியர்ஸ் 44, காலிஸ் 27 ரன்கள் எடுத்தனர்.

  பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் தென் ஆப்பிரிக்கா 67.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

  இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளையும், கெவின் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பீட்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதல்முறை. இதற்கு முன்னதாக 77 டெஸ்ட் போட்டிகளில் பீட்டர்சன் விளையாடியிருந்தாலும், ஒரு விக்கெட்டுக்கு மேல் அவர் எடுத்ததில்லை.

  டிரா: இதையடுத்து 39 ஓவர்களில் 253 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் 12 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஸ்டிராஸ் 22, அலாஸ்டர் குக் 46 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர்.

  பின்னர் வந்த மட் பிரையர் 7 ரன்களில் ரன்அவுட் ஆனார். இதையடுத்து டிராட்டும், இயான் பெல்லும் ஜோடி சேர்ந்தனர். இங்கிலாந்து 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதனால் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. டிராட் 30, இயான் பெல் 3 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

  ஒரு சதம் உள்பட 161 ரன்கள் மற்றும் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 4 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்தின் பீட்டர்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு போட்டிகள் முடிந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.

  சுருக்கமான ஸ்கோர்

  தென் ஆப்பிரிக்கா

  முதல் இன்னிங்ஸ்-419

  (ஆல்விரோ பீட்டர்சன் 182,

  ஸ்மித் 52, ஸ்டூவர் பிராட் 3வி/96)

  2-வது இன்னிங்ஸ்-258/9

  டிக்ளேர்

  (ருடால்ப் 69, ஸ்மித் 52,

  ஸ்டூவர்ட் பிராட் 5வி/69,

  கெவின் பீட்டர்சன் 3வி/52)

  இங்கிலாந்து

  முதல் இன்னிங்ஸ்-425

  (கெவின் பீட்டர்சன் 149,

  மட் பிரையர் 68,

  மோர்ன் மோர்கல் 2வி/96,

  பிலாண்டர் 2வி/72)

  2-வது இன்னிங்ஸ்-130/4

  (குக் 46, டிராட் 30*,

  டுமினி 1வி/10)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai