சுடச்சுட

  
  8spt2

  பல்லகெலே, ஆக.7: இலங்கைக்கு எதிரான ஒரே இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

  முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை 18 ஓவர்களில் 116 ரன்களுக்கு சுருண்டது.

  இலங்கையின் பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக சேவாக், ஜாகீர்கான் ஆகியோர் இடம்பெறவில்லை. சேவாக்குக்குப் பதிலாக அஜிங்க்யா ரஹானேவும், ஜாகீர்கானுக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர்.

  டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனா இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். கம்பீரும், ரஹானேவும் இந்தியாவின் இன்னிங்ûஸத் தொடங்கினர். எரங்கா வீசிய 2-வது ஓவரின் 4-வது பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் கம்பீர். 8 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

  இதையடுத்து ரஹானேவுடன் இணைந்தார் கோலி. ஒரு புறம் ரஹானே நிதானமாக ஆடினாலும், மறுமுனையில் கோலி அதிரடியாகவே விளையாடினார்.

  மேத்யூஸ் வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசிய கோலி, எரங்கா வீசிய 4-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்ட, 4 ஓவர்கள் முடிவில் 32 ரன்களை எட்டியது இந்தியா.

  தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கோலி, பெரெரா வீசிய 6-வது ஓவரில் 3 பவுண்டரிகளையும் விளாசினார். பெரெரா வீசிய 8-வது ஓவரில் ரஹானே ஒரு சிக்ஸரை விளாச 10 ஓவர்களில் 71 ரன்களை எட்டியது இந்தியா. ஹெராத் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அரை சதமடித்தார் கோலி. அவர் 32 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார்.

  இந்திய அணி 81 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 25 பந்துகளைச் சந்தித்த ரஹானே ஒரு சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே-கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது.

  இதையடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். இந்தியா 129 ரன்களை எட்டியபோது கோலி ஆட்டமிழந்தார்.

  48 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் ரெய்னா 25 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் விளாச 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது இந்தியா. 14 பந்துகளைச் சந்தித்த கேப்டன் தோனி 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

  இலங்கைத் தரப்பில் எரங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  பதான் அபாரம்: 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

  இர்ஃபான் பதான் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் தில்ஷான் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. பின்னர் வந்த தரங்கா 5 ரன்கள் எடுத்திருந்தபோது பதான் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

  சற்று வேகம் காட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஜெயவர்த்தனா 19 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  இவர் பதான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதனால் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இலங்கை.

  பின்னர் வந்தவர்களில் திரிமன்னே 20, மேத்யூஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ஜீவன் மெண்டிஸ் 11 ரன்களில் வெளியேறினார்.

  இதன்பிறகு அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. அந்த அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை இந்தியாவின் அசோக் திண்டா அடுத்தடுத்து வீழ்த்த இலங்கை 116 ரன்களில் சுருண்டது.

  சுருக்கமான ஸ்கோர்

  இந்தியா-155/3

  (கோலி 68, ரெய்னா 34*, எரங்கா 2வி/30)

  இலங்கை-116

  (மேத்யூஸ் 30,

  ஜெயவர்த்தனா 26,

  திண்டா 4வி/19,

  பதான் 3வி/27)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai