சுடச்சுட

  
  8spt7

  ஹைதராபாத், ஆக.7: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் கனவு என்றாலும், வெண்கலப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியே என்றார் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்.

  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியது:

  சொன்னதை செய்துவிட்டதில் மகிழ்ச்சியே. தங்கம் வெல்வதுதான் கனவு என்றாலும், இப்போது வெண்கலப் பதக்கத்தை வென்று, ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

  இந்த வெற்றியோடு ஓய்ந்துவிட மாட்டேன். எதிர்காலங்களில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்வேன். ஒலிம்பிக் பதக்க மேடையில் நின்றபோது அழுகை வந்துவிட்டது. இந்த பதக்கம் எனக்குள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடக்கம்தான், இதேபோன்று பல பதக்கங்களை வெல்வேன் என்றார்.

  உங்களின் கழுத்தில் ஒலிம்பிக் பதக்கத்தை அணிவித்தபோது, உங்களின் மனநிலை எப்படி இருந்தது என்று சாய்னாவிடம் கேட்டபோது, "வெளியில் சாதாரணமாகத்தான் இருந்தேன். ஆனால் உள்ளுக்குள் மகிழ்ச்சிப் பெருக்கில் துள்ளிக் குதித்தேன்' என்றார்.

  தன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் குறித்துப் பேசிய சாய்னா, சாதாரண பெண்ணான நான், இப்போது சாம்பியன் ஆகியிருப்பதற்கு பலர் உதவியுள்ளனர். பயிற்சியாளர் கோபிக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக எனது தந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும். இவர்கள் இல்லையென்றால் நான் எதையும் சாதித்திருக்க முடியாது. என்னுடன் வந்த இந்திய பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகளும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

  பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். மன்மோகன் சிங் என்னிடம் பேசியபோது, "நாங்கள் உங்களிடம் இருந்து தங்கத்தை எதிர்பார்த்தோம். ஆனாலும் வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சியே' என்று தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வருவேன் என்று அவருக்கு நான் உறுதியளித்துள்ளேன்' என்றார்.

  முன்னதாக லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலையில் தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சாய்னாவுக்கு அவரது தந்தை ஹர்விர் சிங், பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  பின்னர் அங்கிருந்து ஹைதராபாதுக்கு திரும்பினார் சாய்னா. அங்கு அவருக்கு மாலை மரியாதையுடன் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திறந்த பஸ்ஸில் அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai