சுடச்சுட

  

  லண்டன், ஆக.8: ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் இந்திய வீராங்கனை கீதா போகத் களமிறங்குகிறார்.

   மற்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆட்டம் சற்றேறக்குறைய முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மல்யுத்தம் மட்டுமே உள்ளது.

   இதில் இந்தியாவுக்கு ஓரிரு பதக்கங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து மகளிர் பிரிவில் கீதா போகத், ஆடவர் பிரிவில் அமித் குமார், யோகேஷ்வர் தத், சுசீல் குமார், நர்சிங் பாஞ்சம் யாதவ் என மொத்தம் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

   கீதா போகத்: வியாழக்கிழமை நடைபெறும் மகளிர் 55 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் கீதா போகத் களமிறங்குகிறார். எதிர் வீராங்கனைகளுக்கு கடும் சவால் அளிக்கும் திறமை பெற்றவரான கீதா போகத், இந்த முறை பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   அமித் குமார்: 19 வயதான அமித் குமார், 55 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கிறார். அனுபவம் குறைந்த வீரர் என்றாலும், ஆசிய அளவிலான ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் தங்கம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். வரும் வெள்ளிக்கிழமை தனது முதல் சுற்றில் பங்கேற்கிறார் அமித் குமார்.

   நர்சிங்: 74 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் நர்சிங் பாஞ்சம் யாதவ், முன்னணி வீரர் என்றபோதிலும், இதுதான் அறிமுக ஒலிம்பிக் போட்டி. பதக்கம் வெல்லக்கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

   இவர் வெள்ளிக்கிழமை களம் காண்கிறார்.

   யோகேஷ்வர் தத்: 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் யோகேஷ்வர் தத், இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். கடந்த ஒலிம்பிக்கில் விட்ட பதக்கத்தை இந்த முறை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இவர் பங்கேற்கும் போட்டி 11-ம் தேதி நடைபெறுகிறது.

   இது தொடர்பாக யோகேஷ்வர் தத் கூறுகையில், "பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றிருந்தால், இந்த முறை பங்கேற்காமல் போயிருக்கலாம்' என்றார். கால் மூட்டு காயத்திலிருந்து மீண்டு வந்தது பற்றி யோகேஷ்வர் கூறுகையில், "லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஒரே உத்வேகம்தான் காயத்திலிருந்து நான் மீண்டுவர காரணமாக அமைந்தது' என்றார்.

   சுசீல் குமார்: கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று பெருமை சேர்த்தவர் சுசீல் குமார்.

   66 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் இவர் இந்த முறையும் பதக்கம் வென்று இரு ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக பதக்கம் வென்றவர் என்ற சாதனையைப் படைக்கக் காத்திருக்கிறார்.

   சமீப காலங்களில் சுசீல் குமாரின் செயல்பாடு மிகச் சிறப்பாக அமைந்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. இவர் பங்கேற்கும் போட்டி, ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai